தமிழக வேளாண் பொறியியல் துறையின் திருநெல்வேலி மாவட்ட செயற்பொறியாளர் எஸ்.முத்துக்குமாரசாமி கடந்த 20.02.2015  அன்று தச்சநல்லூரில் ஓடும் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். நேர்மைக்கும் கடமைக்கும் பெயர்பெற்றவரான முத்துக்குமாரசாமியின் தற்கொலை முடிவில், தமிழக வேளாண்துறை  அமைச்சர் அக்ரி எஸ்.கிருஷ்ணமூர்த்தி சம்பந்தப்பட்டிருக்கிறார் என்ற தகவல் 23.02.2015  அன்றே வெளியிடப்பட்டது.

திருநெல்வேலி மாவட்ட வேளாண் பொறியியல் துறைக்கு 7 ஓட்டுநர்களைப் பணிக்குத் தேர்வுசெய்ய மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலிருந்து மூப்பு பட்டியல்  பெற்று அதிலிருந்து தேர்வுசெய்து,  மாவட்ட  ஆட்சித்தலைவர் மூலமாகப் பணி ஆணை வழங்க முத்துக்குமாரசாமி முடிவுசெய்திருந்தார். இதை அறிந்த வேளாண் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தமது உதவியாளர் மூலமாகத் தொடர்புகொண்டு, ‘‘நான் சொல்கிற நபர்களுக்குத்தான் நீ பணி ஆணை வழங்கவேண்டும். நீயாக எதையும் முடிவுசெய்யக்கூடாது’’ என்று மிரட்டியிருக்கிறார்.

இத்தகைய சட்டவிரோத செயலைச் செய்ய முத்துக்குமாரசாமி மறுத்தபோது, மீண்டும் அமைச்சர் செல்பேசியில் அவரிடம்  நேரடியாகத் தொடர்புகொண்டு, ‘‘நான் கொடுக்கிற பட்டியலின்படி பணி ஆணையை வழங்க முடியாதெனில், உன் பட்டியலில் உள்ள 7 பேரிடம் தலா ரூ.3 லட்சம் பெற்றுக்கொண்டு பணி ஆணை வழங்கவேண்டும்’’ என்றார்.  மேலும்  அமைச்சர்,  ‘‘அப்படி வழங்கவில்லையெனில், நீ ஓய்வுபெறுவதற்கு இன்னும் ஆறு மாதங்கள்தான் இருக்கிறது. நீ ஓய்வூதியம் உட்பட எந்த  சலுகையும்  பெறமுடியாமல், உன்னை உடனடியாக ஏதாவது  ஒரு காரணத்தைச் சொல்லி சஸ்பெண்ட் செய்துவிடுவேன்’’ என்று உரத்த குரலில் மிரட்டியிருக்கிறார்.

அமைச்சரின் மிரட்டலுக்குப் பணிய முத்துக்குமாரசாமியின் மனம் ஒப்பாத காரணத்தால், தமது வருங்கால வைப்பு நிதியிலிருந்து முதல் தவணையாக ரூ.5 லட்சத்தை எடுத்து அமைச்சருக்கு வழங்க முடிவுசெய்துள்ளார்.  ஆனால், அமைச்சரோ, ‘‘21 லட்ச ரூபாயையும்  ஒரே தவணையாக வழங்கவேண்டும்’’ என்று தமது உதவியாளர்கள் பூவையா, பாண்டியன், தியாகராஜன் ஆகியோர் மூலமாக நாள்தோறும் நெருக்கடி கொடுத்து வந்தார். இதனால், முத்துக்குமாரசாமி மனஉளைச்சலுக்கு உள்ளானார். இந்நிலையில், விஷயம் என்னவென்று தெரியாத  நிலையில், தமது நகையை அடகுவைத்து பணம் எடுத்துக்கொள்ளுங்கள் என்று மனைவி  ஆறுதல் கூறியிருக்கிறார்.

இந்தப் பின்னணியில், 21.02.2015  அன்று, பொறியாளர் முத்துக்குமாரசாமி தமது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது,  வந்த   செல்பேசிஅழைப்பில் பேசினார். அபபோது  கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, கடைசியாகக் கோபத்துடன்  செல்பேசியை வீசியெறிந்துவிட்டு,  ரயில்  பாதையை நோக்கி வேகமாக நடந்து சென்றுள்ளார்.  அப்போது அங்கு வந்துகொண்டிருந்த ரயில்முன் திடீரென ஓடிச்சென்று  விழுந்து, தற்கொலை செய்துகொண்ட

கொடூரமான நிகழ்வு நடந்தது.  அவரது  உடல்  ரயிலில் சிக்கி இரு கூறுகளாகப் பிளவுபட்டுக்  கிடந்த கோரக் காட்சியைக்  கண்ட பொதுமக்கள் அனைவரும் சோக வெள்ளத்தில் ஆழ்ந்தனர்.  இது தமிழகத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

அ.தி.மு.க. ஆட்சியாளர்களின் லஞ்ச வேட்டைக்குத் துணைபோக மறுத்த ஒரு அரசு  அதிகாரி, மனஉளைச்சல் காரணமாகத் தற்கொலை முடிவுக்குத் தள்ளப்பட்டதற்கு வேளாண் அமைச்சர் அக்ரி எஸ்.கிருஷ்ணமூர்த்திதான் காரணம் என்பதற்கு வலுவான ஆதாரங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவர ஆரம்பித்தன.

முத்துக்குமாரசாமி திடீரென தற்கொலை செய்துகொள்வதற்குமுன், செல்பேசியில் கடைசியாக  யாரோடு பேசினார்? கடந்த சில நாள்களாக அவரோடு  செல்பேசியில் பேசியவர்கள் யார் யார்?   இதை ஆய்வுசெய்து விசாரணை மேற்கொள்ளவேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ்  கட்சி சார்பாகக் கோரிக்கை விடப்பட்டது.

தற்கொலை செய்துகொண்ட முத்துக்குமாரசாமி, இறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்புவரை யார் யாரோடு பேசினார் என்கிற  செல்பேசி எண்கள் அடங்கிய  பட்டியலைப் பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியிட்டோம். அதற்குப் பிறகுதான், இனியும்  அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியை ஊழல் வழக்கிலிருந்து  காப்பாற்ற முடியாது என்கிற முடிவை ஜெயலலிதா  எடுக்கிற நிர்பந்தத்துக்கு உள்ளானார். இதையட்டி அமைச்சர் பொறுப்பிலிருந்து அக்ரி கிருஷ்ணமூர்த்தி நீக்கப்பட்டார்.

இந்த   ஊழல் விவகாரத்தை  விசாரிக்கத் தமிழக சி.பி.சி.ஐ.டி. போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டது. இதில் சம்பந்தப்பட்ட  அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தலைமைப் பொறியாளர் செந்தில்  உட்பட  சிலர் கைதுசெய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மேலெழுந்தவாரியாகப்  பார்க்கிறபோது, சி.பி.சி.ஐ.டி.   போலீஸார் தீவிர  விசாரணை நடத்துவதாக ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டிருக்கிறது.  ஆனால், முத்துக்குமாரசாமி தற்கொலைக்கு சி.பி.சி.ஐ.டி.   விசாரணைமூலம் நீதி கிடைக்குமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகும்.

ஊழலில் ஊறித்திளைத்த ஜெயலலிதாவின் கட்டுப்பாட்டில் நடக்கும் ஆட்சியில், ஊழல்  வழக்கில் சிக்கியவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்கிற நம்பிக்கை எவருக்கும் இருக்கமுடியாது. எனவேதான்,  ஊழலுக்குத் துணைபோக மறுத்த முத்துக்குமாரசாமியின் தற்கொலைக்கு  நீதி கிடைக்க வேண்டுமெனில், அதற்கு  ஒரே தீர்வு, தற்போது விசாரித்து வரும்  சி.பி.சி.ஐ.டி.க்குப் பதிலாக, மத்தியப்  புலனாய்வுத் துறை  விசாரிக்க வேண்டும். இதுதான் தமிழக மக்களின் ஒட்டுமொத்த குரலாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *