தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி  எப்படியிருந்தாலும் மதுபான விற்பனையும், வரி  வருவாயும் ஆண்டுக்காண்டு கூடிக்கொண்டே வருகிறது. தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கும் இல்லை; பூரண மது விற்பனையும் இல்லை. கள், சாராயம் போன்றவற்றுக்கு  அனுமதி  மறுத்துவிட்டு,  இந்தியாவில்தயாராகும் அன்னிய  மதுபான வகைகளான பீர், விஸ்கி, பிராந்தி, ரம், ஜின் ஆகியவற்றை மட்டுமே வரம்பின்றி அனுமதிக்கும்  கொள்கை கடைப்பிடிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் தயாராகும் அன்னிய ரக  மதுபானங்களை விற்பதற்கென்றே அரசு உருவாக்கிய சந்தைப்படுத்தும் விநியோக அமைப்புதான் ‘டாஸ்மாக்’.  ரூ.15 கோடி  முதலீட்டில் தொடங்கப்பட்ட டாஸ்மாக், 2012&13இல் ரூ.25 ஆயிரத்து 313 கோடி  வருவாய் என  உயர்ந்திருக்கிறது. அதன் முதலீட்டைப்போல 1,600 மடங்கு.

இந்தளவுக்கு விற்று  முதல் இருந்தும், மதுபான  விற்பனையில் ஏகபோக நிறுவனமாக 10 ஆண்டுகளாகத் திகழும் டாஸ்மாக்,  இப்போது நஷ்டத்தில் நடக்கிறது என்ற செய்தி எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தவே செய்யும்.  2012&13இல்  அதன் நிகர  நஷ்டம் 99 கோடி  ரூபாய். உயர்ந்த  விற்பனை; உயர்ந்த வரி  வருவாய்! ஆனால்,  டாஸ்மாக் நிறுவனத்துக்குமட்டும்  நஷ்டம் ஏற்பட என்ன காரணம்?

தமிழ் நாட்டில்  அரசு நிறுவனமான ‘டாஸ்மாக்’கிற்கு 12 கம்பெனிகள் மதுபானங்களை விநியோகம் செய்கின்றன.  இந்த   விநியோகங்கள் அப்பட்டமாக அரசியல்  தலையீட்டில் நடக்கின்றன.

தமிழகத்தில் மதுபான தயாரிப்பு நிறுவனங்களானாலும்  விற்பனை செய்யும் கடைகளானாலும் ஊழலின் உறைவிடமாகத்தான் இருந்து வருகிறது.  இந்திய அளவில் மது குடிப்போரில்  தமிழகத்தின் பங்கு என்பது 17 சதவிகிதமாக இருக்கிறது. தமிழகத்தில்  கள்ளச்சாராய சாவுகளைத்  தடுக்க 1983ஆம் ஆண்டு அப்போதைய எம்.ஜி.ஆர்  அவர்களால் இரு நிறுவனங்கள்  உருவாக்கப்பட்டன. இதில் ஒன்று  டாஸ்மாக், மற்றொன்று டாஸ்கோ. கள்ளச்சாராயத்தை அறவே ஒழித்து ஏழைகளின் நலன்காக்க இந்த   நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. இதில்  ‘டாஸ்கோ’ என்பது  மதுபானம் தயாரிக்கும் நிறுவனமாகும்.

டாஸ்மாக் என்பது மதுபானம்  கொள்முதல் நிறுவனம். ஆனால், 1987இல் இந்த   டாஸ்கோ கைவிடப்பட்டு மதுபான தயாரிப்பில்   தனியாருக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. அதேபோல் தனியார் மதுபானக் கடைகளுக்கும் அனுமதி கொடுக்கப்பட்டன.  அதுவரை பெரிய ஹோட்டல்களில் மட்டுமே  விற்பனை செய்யப்பட்டு வந்த   மதுபானம் வீதிகளுக்கும் வந்தது.

2003ஆம் ஆண்டு முதல்வராக இருந்த ஜெயலலிதா, தனியார் மதுபானக் கடைகளை மூடியதுடன் அரசின் டாஸ்மாக் நிறுவனமே  சில்லறை விற்பனைக் கடைகளை நடத்தும் என்று  அறிவித்தார். 2002&2003ஆம் ஆண்டு ரூ.3,800 கோடி  வருமானத்தைக் கொடுத்த இந்த   டாஸ்மாக் நிறுவனம், ஆண்டுக்காண்டு அதிகளவு வருவாயைக்  கொட்டி தந்தது அரசுக்கு. அதாவது டாஸ்மாக் மூலமாகச் சராசரியாக ஆண்டுக்கு 20 சதவிகிதக்  கூடுதல் வருவாய் கிடைத்து வருகிறது. 2012&13ஆம் ஆண்டில் ரூ.21 ஆயிரம் கோடி  வருவாய் கிடைக்க, அடுத்த 2013&14ஆம் ஆண்டுக்கு ரூ.25 ஆயிரம் கோடி  இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்த   டாஸ்மாக் வருமானம் மூலமே  அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் குடிநீர் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.எம்.ஜி.ஆர்.  ஆட்சிக்காலத்தில் 5 தனியார் நிறுவனங்கள்தான் மதுபான தயாரிப்பில்   ஈடுபட்டு  வந்தன. தற்போது மொத்தம் 12 தனியார் நிறுவனங்கள் மதுபான தயாரிப்பில்   ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தில் ஆட்சிகள் மாறும் போதெல்லாம் இந்தத் தனியார்  நிறுவனங்கள் ஏற்றம் பெறுவதும் இறங்குமுகத்தை எதிர்கொள்வதும்  வாடிக்கையாகிவிட்டது.

2011ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சி முடியும்வரை  விஜய்  மல்லையாவின் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்திடம்  இருந்து 20 சதவிகித மதுபானங்கள் கொள்முதல் செய்யப்பட்டன. ஆனால், அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்குச்  சொந்தமான மிடாஸ் நிறுவனம்  ஏற்றம் கண்டது. முந்தைய தி.மு.க. ஆட்சியில் 7.2 சதவிகித அளவுக்குத்தான் மிடாஸிடம் இருந்து கொள்முதல்  செய்யப்பட்டது. தற்போது இது 16.62 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.  அரசே மதுபானக் கடைகளை நடத்தும் என்று அறிவிக்கப்படுவதற்கு ஓராண்டுக்கு முன்னர், 2002இல் மிடாஸ் மதுபான  தயாரிப்பு நிறுவனம் உருவாக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதாவால் போயஸ் தோட்டத்தைவிட்டு சசிகலா வெளியேற்றப்பட்டபோது யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்திடம்  மீண்டும் 20 சதவிகித மதுபானங்கள் கொள்முதல் செய்யப்பட்டதும் கவனிக்கத்தக்கது. பின்னர் சசிகலா சேர்த்துக் கொள்ளப்பட்டபோது, விஜய்  மல்லையாவின் யுனைட்டெட்  ஸ்பிரிட்ஸ் நிறுவனத்திடம் இருந்து மதுபானம் கொள்முதல் செய்வது குறைந்துபோனது. இது யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்துக்குக் கடும் பின்னடைவைத் தந்தது.

2011இல் ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும்  பிரச்சினை ஏற்பட்டபோது இந்த நிறுவனம் கைதூக்கிவிடப்பட்டது. ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு நெருக்கமான நிறுவனங்களிடம் இருந்து மட்டுமே மதுபானங்களைக் கொள்முதல் செய்தாகவேண்டும்  என்பது நடைபெறுகிறது.  இதனால் தரமான மதுபானங்கள்  அல்லது பிரபலமான நிறுவன மதுபானங்கள்  டாஸ்மாக் கடைகளில் விற்கப்படுவதில்லை. ஏதோ ஒரு பிராண்ட் மதுபானத்தைத்தான் திணித்துக் கொண்டிருக்கின்றனர்.

இப்படி ஊழல் முறைகேடுகள்  மதுபான தயாரிப்பு நிறுவனங்களில் மட்டுமே அல்ல. டாஸ்மாக்  விற்பனைக் கடைகளிலும் நடக்கிறது. விற்பனையாகும் ஒவ்வொரு  பாட்டிலுக்கும் அரசு அறிவித்த விலையைவிடக் கூடுதல் விலை வைத்தே  டாஸ்மாக் பணியாளர்கள் விற்பனை செய்கின்றனர்.  ஒட்டுமொத்த மாகத் தமிழகத்தில்  ‘டாஸ்மாக்‘ என்பதே  ஊழல் முறைகேடுகளின் மொத்த உறைவிடமாகத்தான் இருக்கிறது என்பதுதான் யதார்த்தம்.


Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *