அ.தி.மு.க.  ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறபோது, தொழில்துறை மட்டும் விலக்காக இருக்கமுடியாது? இந்தியாவிலேயே சேலம் மாவட்டத்தில்தான் விலைமதிப்புமிக்க ‘மேக்னசைட்’ என்கிற கனிமவளம்  நிரம்பக் கிடைக்கிறது. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் மேக்னசைட் கனிமம் தமிழகத்தில்தான் மிக  அதிகமாகும். சிமெண்ட் தொழிற்சாலைகள், இரும்புத் தொழிற்சாலைகள் மெக்னீசியம் கார்பனெட் பவுடர் கம்பெனிகள்,  சுடு கற்கள் தயாரிப்பு நிறுவனங்கள்  ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் கனிமப் பொருள்தான் ‘மேக்னசைட்’.இந்தத் தொழிலில் வருடத்திற்கு  ரூ.5,000   கோடிகளுக்கும்மேல் புழங்கும். ‘மேக்னசைட்’ பிசினசை நடத்தி வருபவர்கள் தொழில்துறையின்  அனுமதி பெற்றும் பெறாமலும் செய்து வருகிறார்கள். இந்தக் கனிமத் தொழிலுக்காகத் தமிழக அரசு ‘தமிழ்நாடு மேக்னசைட் லிமிடெட்’ என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறது. இந்த   நிறுவனத்தின்மூலம் தொழில்  செய்யாமல் அண்மையில் தனிநபர் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ள உரிமம், கனிம வளத்துறை வட்டாரங்களில் பூதாகரமாக வெடித்திருக்கிறது. இந்த   உரிமத்தைப்  பெற்றவர் மேக்னசைட் கனிமத் தொழில் நடத்தும் கேசவன். 1988இல் கனிமம் நிரம்பிய எட்டு ஏக்கர் அரசு நிலத்தைக் குத்தகைக்கு எடுத்தார். 1991இல் 3 வருட குத்தகை முடிய, உரிமத்தை மீண்டும் புதுப்பிக்கத்  தொழில்துறை மறுத்துவிட்டது. இத்தொழிலைச்  செய்வதற்காக மிவிறிலி என்ற நிறுவனத்தைத் தொடங்கியிருப்பதாகக்  கூறி உரிமம் மறுக்கப்பட்டது. இதை எதிர்த்து கேசவன் நீதிமன்றத்துக்குச் சென்றார். இந்த   நிலையில் ஆட்சி மாற்றம் நடக்கிறது.

மேற்படி  வழக்கில், நீதிமன்றம் கேசவனுக்கு உரிமம் கொடுங்கள் என்றோ, கொடுக்கத் தேவையில்லை  என்றோ உத்தரவிடவில்லை. ‘இவரது கோரிக்கையைச் சட்ட விதிகளுக்கு உட்பட்டு முடிவெடுங்கள்’ என்றுதான் கூறியது. இதைச் சாக்காக வைத்துக்கொண்டு 1988இல் உரிமம் பெற்றதற்கான ஜெராக்ஸ் நகலைமட்டுமே வைத்துக்கொண்டு 24.12.2014 அன்று  தொழில்துறைச் செயலாளராக இருந்த சி.வி.சங்கர்  உரிமத்தை வழங்கியிருக்கிறார்.  எந்தவிதமான நடைமுறைகளையும் பின்பற்றாமல் ஒரு தனிப்பட்ட நபருக்காக உரிமம் வழங்கவேண்டிய அவசியம் என்ன? கனிம வளங்களுக்கான  உரிமம் வழங்குவதில் ஏலமுறைதான் பின்பற்றவேண்டும் என்பது விதி.  அது அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது. அடிப்படை ஆவணங்கள் எதுவுமே இல்லாமல் கேசவனுக்கு மேக்னசைட் கனிம வளங்களைக் கொள்ளையடிப்பதற்குத்  தொழில்துறை அமைச்சராக இருந்த தங்கமணி துணைபோனதில் பல்வேறு அதிர்ச்சி  தகவல்கள்  உள்ளன.

தொழில்துறை அமைச்சர் தங்கமணியின் மகனுக்கும் மருமகனுக்கும் நெருக்கமானவர் கேசவன் என்று கூறப்படுகிறது. கேசவனை  முன்னிருத்தி மேக்னசைட்  கனிமக்  குவாரி எடுத்திருப்பதே அமைச்சர்தான். அவர் நேரடியாகச் சம்பந்தப்படக்கூடாது என்பதால் மகனையும் மருமகனையும் கேசவனோடு இணைந்து தொழிலைக்  கவனிக்க அனுமதித்துள்ளார்.

அரசுக்குச் சொந்தமான கனிம வளங்களைச் சட்டவிரோதமாக உரிமம் வழங்கிக் கொள்ளை அடிப்பதால், அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.200   கோடி இழப்பு ஏற்படுகிறது. அரசுக்கு இழப்பு 200 கோடி  என்றால், தங்கமணி, கேசவன் வகையறாக்களுக்கு எத்தனை கோடி  லாபம்? முறையான  விசாரணை நடத்தப்பட்டால், ஊழல் செய்தவர்கள் நிச்சயம் தண்டனையிலிருந்து தப்பமுடியாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *