‘எங்கும் ஊழல்; எதிலும்  ஊழல்; எதற்கும் ஊழல்; எல்லாமே ஊழல்’  என்று சொல்லக்கூடிய துறைதான் தமிழ்நாடு மின்சார வாரியம். தமிழகத்தின் பெருநகரங்களில் வீடுகளிலுள்ள பழைய மீட்டர்களைக் கழட்டிவிட்டு, புதிய மீட்டர்களைப் பொருத்துவது என 2011இல் ஜெயலலிதா முடிவெடுத்தார். இந்த   முடிவினை நிறைவேற்ற மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பம்பரம்போல் செயல்பட்டார்.

பழைய மீட்டர்களுக்குப்  பதிலாகப்  பல்வேறு நவீன தொழில் நுட்பம் கொண்ட ‘ஸ்டேட்டிக்’ மின் மீட்டர்களைப் பொருத்தவேண்டுமென மத்திய மின்சார ஆணையம் 2010இல் ஆணையிட்டது. இதனைப் புறந்தள்ளிவிட்டு, எட்டுக்கும் மேற்பட்ட நிறுவனங்களிடமிருந்து  ரூ.1,500   கோடி  ரூபாய்க்கு எலெக்ட்ரோ மீட்டர்களைக் கொள்முதல்  செய்து, எல்லா  வீடுகளுக்கும் மின்சார வாரியம் பொருத்தியது.  இந்த   மீட்டர்களுக்கு உத்தரவாதம் 2021 வரை இருக்கிறது. ஆனால், திடீரென  கடந்த 28.08.2014  அன்று, ‘2021 வரை உத்தரவாத காலத்தில் இருக்கும் எலெக்ட்ரோ மீட்டர்களைக்  கழட்டிவிட்டு ‘ஸ்டேட்டிக்’ மீட்டர்களை  மாற்றுங்கள்’ என்று மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஆணையிட்டது. இந்த   ஆணையைப் பிறப்பித்ததில் பெரும்பங்கு வகித்தவர்  அப்போதைய மின் வாரிய தலைவரும், இப்போதைய தலைமைச் செயலாளருமான ஞானதேசிகன்தான். இந்த   உத்தரவின்படி 1 கோடியே 50 லட்சம் ஸ்டேட்டிக் மீட்டர்களை 4,500 கோடி  ரூபாய்க்குக் கொள்முதல் செய்து அதை வீடுகளுக்கு மின்சார வாரியம் பொருத்தி  வருகிறது.

ஏற்கெனவே, ஸ்டேட்டிக் மீட்டர்களைப் பொருத்துங்கள் என்று மத்திய மின்சார ஆணையம் உத்தரவிட்டதைப் புறந்தள்ளிவிட்டு, எலெக்ட்ரோ  மீட்டர் பொருத்தப்பட்டது. தற்போது, ஸ்டேட்டிக்  மீட்டரை  மீண்டும் மாற்றுவதன் நோக்கம் என்ன? ரூ.1,500   கோடிக்கு எலெக்ட்ரோ மீட்டரும்,  ரூ.4,500   கோடிக்கு ஸ்டேட்டிக் மீட்டரும்  வாங்கியதற்குப் பதிலாக, ஒரே சமயத்தில் ஸ்டேட்டிங் மீட்டரை வாங்கியிருந்தால் மின்சார வாரியத்திற்கு ரூ.1,500   கோடி  மிச்சமாகி இருந்திருக்கும்.

‘சோழியன் குடுமி சும்மா ஆடாது’ என்பார்கள். அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஆதாயம் இல்லாமல் எதையும் செய்யமாட்டார் என்பதால்தான், மின்துறை அமைச்சராகத் தொடர்ந்து இருந்து வருகிறார்.  இதற்கு என்ன காரணம் என்றால், இத்தகைய கொள்முதலில் குறைந்தபட்சம் 10 சதவிகிதம் கமிஷன் வழங்கப்படுகிறது. அந்த  வகையில் மொத்தம் ரூ.6,000   கோடிக்கு மீட்டர் வாங்கியதில் ரூ.600   கோடி  கமிஷன் வாங்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

தமிழகத்தின் அனைத்துத் துறைகளிலும் லஞ்சமோ லஞ்சமாக இருந்தாலும், மின்சார வாரியத்தில் கொள்ளையோ கொள்ளை  நடந்து வருகிறது. இதற்கு மின்சார மீட்டரில் கொள்ளை என்பது ஒரு உதாரணம்.


Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *