தமிழ்நாட்டின் செய்தித்துறை  அமைச்சரான ராஜேந்திர  பாலாஜி, இதுவரை  ஒருமுறைகூட பத்திரிகையாளர்களைச்  சந்திக்கவில்லை. பத்திரிகையாளர்களோடு நெருக்கமாகத் தொடர்பு வைத்துக்கொண்டு அரசு திட்டங்களை விளம்பரப்படுத்த வேண்டிய இவர், அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பல காரணங்கள்  கூறப்பட்டு வருகின்றன. ‘மடியில் கனமிருப்பதால் பத்திரிகையாளர்களைச்  சந்திக்க அஞ்சுகிறார்’ என்று கோட்டையில் உள்ள ஊடகவியலாளர்கள் முனுமுனுத்து வருகிறார்கள். சிறந்த  திரைப்படங்கள், சிறந்த  நடிகர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் எனத்  தமிழ்த் திரைப்படங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசின் சார்பில்  விருதுகளைச் செய்தித்துறைதான் வழங்குகிறது. ஆனால், 2009முதல் 2014ஆம் ஆண்டுவரை ஆறு ஆண்டுகளுக்கான விருதுகள் வழங்கக்கூட நேரம் ஒதுக்க முடியாமல் ஊழலில்  ஊறித்திளைக்கிற  துறையாக இதனை அமைச்சர் மாற்றிவிட்டார். குறைந்த முதலீட்டில் தரமான திரைப்படங்களைத் தயாரிக்கும் தயாரிப்பாளர்களை ஊக்கப்படுத்துகிற வகையில், ஒவ்வொரு படத்திற்கும் 7 லட்சம் ரூபாய் மானியமாக அரசு வழங்கி  வந்தது. இதுவும் 2007ஆம் ஆண்டுமுதல் வழங்கப்படவில்லை.

தமிழகத்தின் திரைப்படங்களுக்குத்  தமிழில் பெயர் வைப்பதை ஊக்கப்படுத்துகிற வகையில் கடந்த தி.மு.க.  ஆட்சியில் கேலிக்கை வரி விலக்கு வழங்கப்பட்டு வந்தது. ஆனால், அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் இதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டு, கடந்த ஆட்சிக்காலத்தில் பெயர்மட்டும் தமிழாக இருந்தால்போதும் என்ற நிபந்தனையோடு பண்பாடு, ஆபாசம், வன்முறை இல்லாத படங்களுக்குத்தான் கேலிக்கை வரி  விலக்கு அளிக்க அந்தக்குழு அரசுக்குப் பரிந்துரை  செய்யவேண்டும் என்ற ஒரு அனுகுமுறையைப்  புதிதாகப் புகுத்தியது. இந்த   அனுகுமுறையின் நோக்கமே, திரைப்படத்துறையை ஊக்கப்படுத்துவதைவிட, ஊழல் மூலமாகப் பெரும் பணத்தைத் திரட்டுகிற முயற்சியில் செய்தித்துறை ஈடுபட்டது.

திரையரங்குகளில் ஒரு டிக்கெட்  ரூ.120   என்று சென்னை மாநகரக் காவல்துறை ஆணையாளர் முடிவுசெய்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. கேலிக்கை வரி  விலக்கு ஒரு திரைப்படத்திற்கு  வழங்கப்படுமேயானால், ரூ.120இல் ரூ.30 சலுகை கிடைக்கக்கூடிய வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டது. இதன்மூலம் வருகிற வருமானத்தைத்  திரைப்படத் தயாரிப்பாளர், திரையரங்கு உரிமையாளர், விநியோகிஸ்தர் ஆகியோர் பிரித்துக்கொள்ள  வேண்டும். இதில் பெரும் பகுதியை லஞ்சமாகச் சம்பந்தப்பட்ட  அமைச்சருக்கு  வழங்கப்பட்டால்தான், கேலிக்கை வரிவிலக்கு சான்றிதழ் வழங்கப்படும். இந்த   ஊழல் நடைமுறையின் மூலமாக அ.தி.மு.க. ஆட்சியாளர்களுக்கு ஆண்டுதோறும் ரூ.100   கோடிக்கும் மேலாக லஞ்சப்பணம்  வழங்கப்பட்டு வருகிறது. திரைப்படத்  துறையினர் இந்த  ஊழலுக்குத் துணைபோகவில்லையென்றால், கேலிக்கை வரி  விலக்கு மறுக்கப்படுகிற அவலநிலை தமிழகத்தில்  இருக்கிறது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்டால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *