அரசு மருத்துவமனைகளில்  பெரியோர் முதல்  பச்சிளம் குழந்தைகள் வரை உரிய சிகிச்சை  இல்லாமல் உயிரிழப்பு செய்திகள் நாள்தோறும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. தருமபுரியில் 13 பச்சிளம் குழந்தைகளும்,  விழுப்புரத்தில் 8 பச்சிளம் குழந்தைகளும் என நூற்றுக்கணக்கான  பச்சிளம் குழந்தைகள் மாவட்ட மருத்துவமனைகளில் உரிய சிகிச்சை  இல்லாமல் இறந்துவிடுகிற கொடுமை  நடந்து வருகிறது.

மருத்துவமனையில் சிகிச்சை தருகிற மருத்துவர்கள்  தரமான கல்வியை பெற்றவர்களாக இருக்கவேண்டும். ஆனால், அந்த  வாய்ப்பு தமிழகத்திலே மிக அரிதாகவே  இருந்து வருகிறது.  தனியார் மருத்துவக் கல்லூரி ஆரம்பிக்க தடையாணை சான்றிதழ் பெற கோடிக்கணக்கான ரூபாய் லஞ்சமாகத் தரவேண்டியுள்ளது.

அரசு மருத்துவக்  கல்லூரி முதல்வர்களுக்குப் பதவி மாறுதலுக்கு  ரூ.25 லட்சம் முதல்  ரூ.50 லட்சம்  வரை லஞ்சம் தரவேண்டும். எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு ரு.2  கோடி  லஞ்சம் கொடுத்துதான் பெறப்பட்டது. மருத்துவ கவுன்சில் உறுப்பினராக  ஒரு உறுப்பினருக்கு  ரூ.10 லட்சம் லஞ்சம் தரவேண்டும். மருத்துவ பல்கலைக்கழக செனட் மற்றும் சிண்டிகேட் உறுப்பினராக ரூ.5 லட்சம்  லஞ்சம்.

அரசு டாக்டர்கள் பணி  மாறுதலுக்கு ஆண்டுக்கு இரண்டுமுறை கலந்தாய்வு நடக்கிறது. ஆனால், இடையில் பல மாறுதல்கள் நடைபெறுகிறது. அந்தப் பணி மாறுதலுக்குப் பெறப்படுகிற லஞ்சம் ரூ.5 லட்சம். அரசு மருத்துவமனை களுக்கு மருந்துகள் சப்ளை  செய்வதில் பெரும் ஊழல் நடைபெறுகிறது. சப்ளை செய்யும் பல நிறுவனங்கள் முன்அனுபவம் இல்லாத லெட்டர்பேட் நிறுவனங்களாக உள்ளன.  இவை பெரும்பாலும் அமைச்சரின் பினாமி நிறுவனங்கள். இவை  சப்ளை செய்யும் மருந்துகள் அனைத்தும் முப்பது சதவிகித வீரியம் மட்டுமே உள்ளவை. இதனால் நீரிழிவு  மற்றும் உயர் ரத்த அழுத்த நோயாளிகள் பலர் உயிரிழக்கும் அபாயம் ஏற்படுகிறது.

அரசு மருத்துவமனைகளில் வாங்கப்படும்  உபகரணங்கள் எக்ஸ்&ரே ரோல்களில்  சி.டி. ஸ்கேன் வாங்கப்படுவதில் பெருமளவு ஊழல் நடைபெறுகிறது. முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பயன்பெறும் மருத்துவமனைகள் பில் தொகையில் 2 சதவீதம் கமிஷனாகத் தர சம்பந்தப்பட்ட மாவட்ட இணை இயக்குநர்களை வைத்து லஞ்ச வேட்டை நடத்தப்படுகிறது.  மேலும், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் பயன்பெறும் மருத்துவமனைகள் ஜெயா தொலைக்காட்சிக்கு  விளம்பரம் தரவேண்டும்.

மத்திய அரசின் சுகாதாரத் திட்டத்தின்மூலம் கிடைக்கும் பணத்தில் பெரும்பாலானவை செலவிடப்படாமல் செலவழிக்கப்பட்டதாகக் கணக்கு காண்பிக்கப்பட்டு 20 சதவிகிதம் லஞ்சமாக வழங்கப்படுகிறது.  பல நேரங்களில் கணக்கு காட்ட முடியாமல் மீதி பணம் மத்திய அரசுக்கே சென்றுவிடுகிறது.

மருத்துவம் அல்லாத முடநீக்கியல் கல்லூரி ஆரம்பிக்க  ஒரு கோடி  லஞ்சம்! நர்சிங் கல்லூரி ஆரம்பிக்க  ரூ.50 லட்சம்  லஞ்சம்! பாரா  மெடிக்கல்  கல்லூரிகள் தொடங்க ரூ.25 லட்சத்திலிருந்து ரூ. 40 லட்சம்  வரை லஞ்சம்!மருத்துவத் துறையைப் பொருத்தவரை, மாநிலத்தில் நடைபெறுகிற வசூல் வேட்டையில் ஒருபகுதி மத்திய சுகாதாரத்துறைக்கும் செல்கிறது. இது மத்திய, மாநில அரசுகளின் கூட்டுக் கொள்ளையாக நடைபெறுகிறது.

மருத்துவ துறையின் காசநோய் தடுப்புப் பிரிவுக்கு மருத்துவ அதிகாரி முதல் ஓட்டுநர் வரை 687 ஒப்பந்தப் பணியாளர்கள் நியமிக்கப்படுவதற்கு 24.12.2014 அன்று  தினத்தந்தியில் விளம்பரம் வெளியிடப்பட்டது. இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கு காசநோய் இணை இயக்குநர் டாக்டர் அறிவொளி பல்வேறு நெருக்கடிகளுக்கு அமைச்சரால் உட்படுத்தப்பட்டார். அதற்குப்பிறகு அவர் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்ததை  அனைவரும் அறிவார்கள். இதைத் தொடர்ந்து இணை இயக்குநர் பொறுப்பில் டாக்டர் லஷ்மி முரளி என்பவர் பொறுப்பேற்றார். இவர் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரின் இசைவுக்கு ஏற்றார்போல்   செயல்படக்கூடியவராக  இருந்தார். அவர்  பொறுப்பேற்ற 10 நாள்களுக்குள்ளாக  அவசர அவசரமாக இந்தப் பணிகளுக்கு 28.02.2015  முதல் 01.03.2015  வரை எழுத்து தேர்வு நடத்தினார். இதில் பலருக்குப்  பரீட்சை எழுதுவதற்குத் தேவையான அனுமதி அட்டை வழங்கப்படவே  இல்லை. ஏறத்தாழ ஏழாயிரம் விண்ணப்பதாரர்கள்  பரீட்சை எழுதினர்.

இதற்காக நடத்தப்பட்ட எழுத்து தேர்வில் பல  மோசடிகள் நடைபெற்றுள்ளன. இதற்காக நடத்தப்பட்ட பரீட்சையில் எழுதப்பட்ட விடைத்தாள்கள் மாற்றப்பட்டு பணி தேர்வுக்காக ரூ.3 லட்சம்  லஞ்சம் கொடுத்தவர்களுக்குப் புதிதாக விடைத்தாள்கள் இணைக்கப்பட்ட கொடுமை நிகழ்ந்துள்ளது.  இந்த நியமனங்கள் இறுதியாக அறிவிக்கப்பட இருந்தநேரத்தில், இடஒதுக்கீடு கொள்கை புறக்கணிக்கப்பட்டிருப்பதாகக்  கூறி மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது.  இதனால் காசநோய் பணியாளர்களுக்கான பணி நியமனம் நடைபெறாமல் உள்ளது.  இதற்காகப் பணம் கொடுத்தவர்கள் அமைச்சரை நச்சரித்துக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல, 450 மருத்துவர்கள்  நியமனத்தில் சென்னையைச் சுற்றி பணியாற்றுவதற்கு  ஏற்ற வகையில் ஆணை பிறப்பிக்க ரூ.3 லட்சம் வசூல்   செய்யப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனையைச் சார்ந்த   ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வாங்கப்பட்ட ஜெனரேட்டர்களில் பெரும் ஊழல் நடைபெற்றுள்ளது. இப்படி வாங்கப்பட்ட ஜெனரேட்டர்கள்  தொழில்நுட்ப ரீதியாகத் தரம்  குறைந்ததாக இருப்பதால் செயல்படாமல் பழுதடைந்த  நிலையில் இருக்கிறது.


Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *