தமிழ்நாடு அரசின் பத்திரப் பதிவுத் துறை என்பது  ஊழல் துறையாக நீண்டகாலமாக இருந்து வருகிறது. பத்திரப்பதிவு அலுவலகங்களில் அனைத்துமே ஊழலை அடிப்படையாக வைத்துத்தான் காரியங்கள் நடைபெற்று வருகின்றன. பத்திரப்பதிவுத் துறையில் பதிவாளர் பதவி என்பது ஏலம்விடப்பட்டு அதன்மூலமாகத்தான் வழங்கப்பட்டு  வருகிறது. ஊழலில் ஊறிப்போன  ஒரு துறையாகப் பத்திரப் பதிவுத் துறை  செயல்பட்டு வருகிறது.பத்திரப் பதிவுத் துறையின் ஊழலை ஊடகங்களோ, அரசியல்  கட்சிகளோ அம்பலப்படுத்துவதைவிட இந்தியக் கணக்கு மற்றும் தணிக்கைத் துறையே ஆதாரத்தோடு வெளியிட்டுள்ளது. 2012-&13ஆம் ஆண்டுக்கான இந்தியக் கணக்கு மற்றும் தணிக்கைத் துறைத் தலைவரின் அறிக்கையில்  பல்வேறு விஷயங்கள் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. 2012&13ஆம் ஆண்டில் 135 சார்   பதிவாளர்  அலுவலங்களில் பதிவுகள் குறித்த விவரங்களை ஆய்வுசெய்தபோது, 351 இனங்களில் 1271 கோடி  ரூபாய் அளவுக்குச் சொத்து மதிப்புகளைக்  குறைவாக மதிப்பீடு செய்வது, தவறாக வகைப்படுத்துவது போன்ற பல்வேறு முறைகேடுகள் திட்டமிட்டு அறங்கேற்றப்பட்டுள்ளன.  இதில் 93 இனங்களில் சொத்துக்களைக்  குறைவாக மதிப்பிட்டதில் 11.07 கோடி ரூபாயும், 124 இனங்களில் ஆவனங்களைத் தவறாக வகைப்படுத்திய  வகையில் 1243.50  கோடி  ரூபாயும், 132 இனங்களில் பிற  வழிகளில் 16.70 கோடி  ரூபாயும் முறைகேடுகள் நடந்துள்ளதாக  சி.ஏ.ஜி. அறிக்கை  தோலுரித்துக் காட்டுகிறது.

22 சார் பதிவாளர் அலுவலங்களை  ஆய்வுசெய்தததில் 1949 ஆவனங்கள் விடுமுறை நாள்களில் பதிவு செய்யப்பட்டிருந்தன. 1232 ஆவனங்களுக்கான ரசீதுகள் விடுமுறை நாள்களில் உருவாக்கப்பட்டிருந்ததை  சி.ஏ.ஜி. அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. குறிப்பாக, சென்னை பள்ளிக்கரணை  பகுதியில் அரசுக்குச் சொந்தமான 66 ஏக்கர் நிலத்தை அறக்கட்டளை ஒன்றுக்கு ஒரே நாளில் 66 லட்சத்திற்கு  ஒரே ஆவனமாகப்  பதிவு செய்யப்பட்ட விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றது. பத்திரப் பதிவுத் துறை  ஊழலின் ஊற்றுக்கண் என்பதற்கு இந்த   வழக்கு மிகப்பெரிய உதாரணமாகும்.

பள்ளிக்கரணையில்  அரசு நிலத்திற்கு வழிகாட்டி மதிப்பீடு  இல்லாததால், அருகில்  உள்ள கட்டடத்தின் வழிகாட்டு மதிப்பீடு  அடிப்படையில் பத்திரப் பதிவு செய்யப்பட்டது.  அதனால் இதில் எந்த  முறைகேடும் நடக்கவில்லை என நீதிமன்றத்தில் பத்திரப் பதிவுத் துறை  தனது வாதத்தை முன்வைத்தது.

பள்ளிக்கரணையில்  ஒரு ஏக்கர் நிலம் ஒரு லட்சம் என விலை நிர்ணயித்ததிருப்பதை எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. குறிப்பிட்ட இடத்திற்கு வழிகாட்டி மதிப்பீடு இல்லை என்று  சொன்னால், அருகிலுள்ள நிலத்தின் வழிகாட்டு  மதிப்பீடு  அடிப்படையில் பத்திரப் பதிவு செய்ததில் மிகப்பெரிய மோசடி நடைபெற்றிருக்கிறது. இதுகுறித்து உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டால், பத்திரப் பதிவுத்  துறை அமைச்சர் தப்பவே முடியாத அளவுக்குச்  சிக்கிக்கொள்வார் என்பதில் எவருக்கும் சந்தேகம் தேவையில்லை.

பத்திரப் பதிவுத் துறையில் பணியாற்றும் மாவட்ட பதிவாளர், மாவட்ட சார்  பதிவாளர் ஆகியோர் பணி மாறுதலுக்கு  ரூ.10 லட்சம்  முதல்  ரூ.50 லட்சம் வரை பணியிடத்திற்கேற்ப சம்பந்தப்பட்ட அமைச்சருக்குக் கப்பம் கட்டவேண்டும். சென்னையில் கூடுவாஞ்சேரி, ஸ்ரீபெரும்புதூர், பழைய மகாபலிபுரச் சாலை போன்ற பகுதிகள்  லஞ்ச வேட்டைக்கு மிகவும் கேந்திரமான பகுதிகளாகும். இந்த   இடங்களில் பணி நியமனம் பெறுவதற்குக் கோட்டையைச்  சுற்றிச்சுற்றி வந்து  அமைச்சர்களுக்குத் தரவேண்டியதைத் தந்துதான் பணி நியமனம் நடைபெறுகிறது.முத்திரைக் கட்டணம் அதிகம் உள்ள இடங்களுக்குக் குறைந்த முத்திரைக் கட்டணம் செலுத்திப் பதியப்படும் பத்திரங்கள் பின்னர்  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு மறைத்து முத்திரைத்தாளை மாற்ற  கணக்கிலடங்கா பணம் லஞ்சமாகப் பெறப்படுகிறது. மறுமதிப்பீடு செய்த பத்திரங்களைத் திரும்பப்பெற முத்திரைத்தாள் தாசில்தாருக்குத் தனியாக  லஞ்சம் வழங்கவேண்டும்.


Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *