தமிழகத்தில் மின் உற்பத்தியை அதிகரிக்கவேண்டிய முதன்மைப் பொறுப்பு தமிழக அரசுக்கு இருக்கிறது. தமிழகத்தின் மொத்த மின்தேவை 13 ஆயிரம் மெகாவாட். தற்போது 10 ஆயிரத்து 500 மெகாவாட்தான் உற்பத்தி  செய்யப்படுகிறது. மே, ஜூன் மாதங்களில் மின் தேவை 15 ஆயிரம் மெகாவாட்டாக அதிகரிக்கக் கூடும். இதனால் பற்றாக்குறை 3,500 மெகாவாட்டாக அதிகரிக்கும்.

‘‘நாங்கள் ஆட்சிக்கு  வந்தால்  ஆறே மாதங்களில் மின்வெட்டை நீக்குவோம்’’ என்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உரத்த குரலில் முழங்கியதை எவரும் மறந்திருக்க முடியாது.  ஆனால், பதவிக்கு வந்து  நான்கு ஆண்டுகளுக்கும் மேலாகியும், ஒரு மெகாவாட் மின்சார உற்பத்திக்குக்கூட முதலீடுகள் செய்யப்படவில்லை, ஒரு மின்திட்டம்கூட தொடங்கப்படவில்லை. ஆனால், வெளிச்சந்தையில்  மின்சாரத்தை அதிக விலை கொடுத்து வாங்கி ஊழல் செய்து வருகிறார்கள்.

ஒரு யூனிட் மின்சாரம்  ரூ.12.50  விலைக்கு ஆண்டுதோறும் 2,950 மில்லியன் யூனிட் மின்சாரம் தனியாரிடமிருந்து வாங்கப்படுகிறது.  இதற்காக மின்சார வாரியம் ஆண்டுக்கு ரூ.5,212   கோடி  செலவழிக்கிறது. இந்த   மின்சாரத்தை விற்பதன் மூலமாக மின்வாரியம் பெறும் வருமானம் ரூ.1,220   கோடி மட்டுமே. தனியாரிடம் மின் கொள்முதல் செய்வதால், மின்சார வாரியத்துக்கு ஆண்டுதோறும் ரூ.4,293 கோடி  நஷ்டம் ஏற்படுகிறது. இத்தகைய நடவடிக்கைகள் காரணமாக மின்சார வாரியத்துக்கு ஆண்டுதோறும் ரூ.10,000 கோடி  நஷ்டம் ஏற்பட்டு மொத்தக் கடன் சுமை ரூ.80,000  கோடியைத் தாண்டி வருகிறது.

இந்த   மின்சாரக் கொள்முதலில் தனியார்துறையைச் சார்ந்த   குஜராத்திலுள்ள அதானி, மகாராஷ்டிராவிலுள்ள யிஷிகீ,  சத்தீஷ்கரிலுள்ள இந்து   பாரத் மற்றும் ஞிறி  ரியாலிட்டி உட்பட 6 தனியார் மின் நிறுவனங்களிடமிருந்து 3,300 மெகாவாட் மின்சாரத்தை அதிக விலை கொடுத்து வாங்குவதற்கான ஒப்பந்தங்கள் கடந்த வருடம்  போடப்பட்டது. மேற்கண்ட  நிறுவனங்களிடமிருந்து ஒரு யூனிட் மின்சாரம்  ரூ.4.91 காசுகளுக்கு வாங்குவதற்கு 15 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.  இந்த   விலை ஒவ்வொரு வருடமும் மாறுதலுக்கு உட்பட்டது. மேலும், இந்த   ரூ.4.91 என்பது, டேரிஃப் விலைதான். இதைத் தாண்டி வெளி மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்குக் கொண்டுவரும் செலவு உள்ளிட்ட மற்ற  செலவுகளையும் சேர்த்தால் ரூ.12 வரை விலையாக வழங்கப்படுகிறது. ஆனால், மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கடந்த 2013 ஜூனில் பிறப்பித்த உத்தரவில், தனியாரிடம் கொள்முதல் செய்யும் மின்சாரத்தை ஒரு யூனிட்  ரூ.3.50 விலைக்குமட்டுமே வாங்கவேண்டும் என்று கண்டிப்பாகக்  கூறியிருந்தது. ஆனால், அன்றைய மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், மின் வாரிய தலைவர்  ஞானதேசிகன் ஆகியோரின் கூட்டுச்சதியின் காரணமாக,  தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்துமின்சாரம் கொள்முதல் செய்வதால் ஆண்டுக்கு ரூ.5,000   கோடி  நஷ்டம் ஏற்படுகிறது.  இதில் மின்சார வாரியத்திற்கு உண்மையிலேயே எவ்வளவு நஷ்டம்? அ.தி.மு.க. ஆட்சியாளர் களுக்கு எவ்வளவு லாபம்? உண்மையான விசாரணை  மேற்கொண்டால் உண்மைகள் ஊர்வலமாக அணிவகுத்து வரும். அப்போது ஊழல் செய்தவர்கள்  தண்டனையிலிருந்து  தப்ப முடியாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *