பூமிக்குக் கீழேயுள்ள கனிம வளங்கள் அரசுக்குச் (சமூகத்துக்குச்) சொந்தம் என்பது பொது நியதி. இந்த   விதிக்கு உட்படாமல், பூமிக்கு அடியில் கிரானைட், லைம்ஸ்டோன் போன்றவை இருக்குமானால், அவை நிலத்தின் உரிமையாளருக்குச் சொந்தம் என்று சட்டம்  அங்கீகரிப்பதால், ஒரு  நிலத்தை வாங்கி, தனக்குச் சொந்தமான அந்த  நிலத்தில் அரசு அனுமதிக்கின்ற அளவுக்கான ஆழத்துக்குக் குவாரி வெட்டி கிரானைட்டுகளை  எடுத்து விற்பது சட்டபூர்வ  நடவடிக்கையாக அங்கீகரிக்கப்படுகிறது.

இதன்படி, பாமர   விவசாயிகளுடைய நிலங்களை ஏமாற்றி வாங்குவது, தரமான கிரானைட் உள்ள நிலத்தை யாரேனும் தர மறுத்தால், மிரட்டியோ, தாக்கியோ, பொய்வழக்கு போட்டோ, நாற்புறமும் உள்ள நிலங்களை வாங்கி  அந்த விவசாயியை முடக்கியோ,  அவருடைய நிலத்தைப் பறிப்பது, பிறகு அங்கே குவாரி வெட்டுவது என்ற வழிமுறைகளை பி.ஆர்.பி. நிறுவனத்தினர், உரிமம் ஏதும் இல்லாமலே, அரசு நிலங்கள், புறம்போக்கு என எல்லா  இடங்களிலும் குவாரிகளைத் தோண்டிக் கொள்ளையடித்துள்ளனர்.உதாரணமாக,  மதுரை மாவட்டம் கீழவளவுக்கு  அருகிலுள்ள பிள்ளையார்குளம் கண்மாயில் குவாரி அமைக்க  99 வருடக் குத்தகைக்கு பி.ஆர்.பி. நிறுவனம் கேட்டபோது அரசு தர மறுத்ததால், அக்கண்மாயைத் தோண்டிக் கற்களனைத்தையும் எடுத்த பி.ஆர்.பி. நிறுவனம், பின்னர் மண்ணைப்போட்டு மூடியிருக்கிறது. ஆவணங்களில் மட்டும் இருக்கும் இக்கண்மாயைத் தற்போது வருவாய்த்துறை  அதிகாரிகள் தேடிக்கொண்டிருக்கின்றனர்.

மதுரை தெற்குத்தெரு கிராமத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கரை வளைத்துப்போட்டு 400 ஏக்கர் பரப்பில் பிரம்மாண்டமான கட்டடங்களை எழுப்பி, இறக்குமதி  செய்யப்பட்ட எந்திரங்களைக்கொண்டு மிகப்பெரிய கிரானைட் தொழிற்சாலையை  நடத்துகிறது பி.ஆர்.பி. நிறுவனம். கற்களை அறுப்பது, பாலிஷ் போடுவது,  கிரானைட் கற்களிலேயே விதவிதமான அழகு சாதனப்  பொருட்கள், சோபா   செட்,  நாற்காலிகள் போன்றவை தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி ஆகின்றன.

விதிகளின்படி குறிப்பிட்ட ஆழத்துக்குமேல் கிரானைட்டுக்காகப் பூமியைத் தோண்டக்கூடாது. ஆனால், பி.ஆர்.பி. மற்றும் பிற  கிரானைட் கும்பல்கள் பாதாளம் வரை தோண்டியிருக்கின்றனர்.  அந்த  வட்டார மக்களுக்கு மின்சாரம்  கிடைப்பது அத்திபூத்தாற் போலத்தான். மின்வாரிய அதிகாரிகள் ஒத்துழைப்புடன் தேவையான  அளவு மின்சாரத்தைத் திருடுகிறது  இந்த கிரானைட் கொள்ளையர் கூட்டம்.

பி.ஆர்.பழனிச்சாமிக்கு மேலூர் வட்டத்தில் மட்டுமன்றி, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம்,  கோவை, நாமக்கல், சேலம், கரூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் 1500 ஏக்கர் நிலம் இருப்பதாகவும், தேனியில் மட்டும் 700 ஏக்கர் என்றும் பத்திரிகைச் செய்திகள் கூறுகின்றன.  மிக முக்கியமான கிரானைட் குவாரி மாவட்டங்களான கிருஷ்ணகிரி, தருமபுரியில் பழனிச்சாமியின் சொத்து விவரங்கள் பற்றித் தெரியாதது மர்மமாக இருக்கின்றது.

பி.ஆர்.பழனிச்சாமி நடத்தி வந்தது ஒரு அரசு போலவே தெரிந்தது. வருவாய்துறை, கனிமவளத்துறை, காவல்துறை உள்ளிட்ட எல்லாத் துறைகளையும் சேர்ந்த ஓய்வுபெற்ற அதிகாரிகள்  பலர் பி.ஆர்.பி.யின் நிறுவனத்தில் வேலை செய்கின்றனர். நிலத்தை ஆக்கிரமிப்பது

முதல் எதிர்ப்பவர்களை ஒழித்துக்கட்டுவது  வரையிலான எல்லா அயோக்கியத்தனங்களுக்கும் திட்டம்போட்டுக் கொடுப்பது இவர்கள்தான். சொல்லப்போனால் பி.ஆர்.பி. கும்பல்,  இந்த   ‘ஓய்வுபெற்ற அரசை’ வைத்துத்தான் ஓய்வின்றி உழைக்கும் அம்மாவின் அரசை இயக்கியிருக்கிறது.

கிரானைட் தோண்டும் பகுதிகளிலுள்ள கிராம  உதவியாளர்களுக்குத் (தலையாரி) ரூ.1,000 ;  கிராம  நிர்வாக அலுவலர்களுக்கு ரூ.5,000 ; வருவாய் ஆய்வாளர்களுக்கு ரூ.8,000   ;  மண்டல துணை வட்டாட்சியர்களுக்கு ரூ.10,000 ; வட்டாட்சியர்களுக்கு ரூ.20,000 ;  கோட்டாட்சியர்களுக்கு ரூ.30,000 ;  மாவட்ட வருவாய் அலுவலருக்கு ரூ.50,000 ;  கலெக்டருக்கு ரூ.1 லட்சம் முதல் 2 லட்சம்வரை என மாதந்தோறும் தவறாமல் வேன்மூலம் உரிய நபர்கள்மூலம் பட்டுவாடா நடந்திருக்கிறது. கனிம வளத்துறை ஊழியர்கள், அதிகாரிகளுக்கு பி.ஆர்.பி. நிறுவனம் தாய்வீடுபோல. ஒன்று  கேட்டால் இரண்டு கிடைக்கும். தலையாரி வீடுகளைப் பொருத்தவரை, சுவரில்   கிரானைட் பதித்திருப்பவர்களெல்லாம் உண்டு.

இதைப்போன்றே காவல்  துறையில் ‘ஏட்டய்யா’, சார்   ஆய்வாளர், ஆய்வாளர், துணைக் கண்காணிப்பாளர், மாவட்டக் காவல்  கண்காணிப்பாளர்,  டி.ஐ.ஜி. ஐ.ஜி. முதலானோருக்கும்  மாதந்தோறும் பணப்பட்டுவாடா நடந்து வந்துள்ளது. கீழ்நிலை நீதிமன்றம் முதல் உயர்நீதிமன்றம் வரை ‘நீதி அரசர்’களுக்குத் தகுந்த முறையில் மாதந்தோறும் பணப்பட்டுவாடா செய்யப்பட்டு  வந்துள்ளது.

மதுரை மாவட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்ற  கிரானைட் கொள்ளை குறித்து இந்திய ஆட்சிப்பணி அதிகாரி சகாயம் தலைமையிலான குழு கடந்த நான்கு மாதங்களாக விசாரணை நடத்தி, அதன் இடைக்கால அறிக்கையைச் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

ரூ.16,000  கோடி  இழப்பு  ஏற்படுத்திய  கிரானைட் கொள்ளை  தமிழகத்தையே உலுக்கி  வருகிறது. குறிப்பாக மேலூர்  வட்டத்தில் சட்டத்திற்குப் புறம்பாகக் குவாரி அமைத்து  கற்களை வெட்டி வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதில் தமிழக அரசுக்கு ரூ.16,338  கோடி  இழப்பு ஏற்பட்டிருப்பதாக மதுரை மாவட்ட கலெக்டராக இருந்த சகாயம் தமிழக அரசுக்குக் கடிதம்மூலம் தெரிவித்தார். மதுரை  மாவட்டத்தில் கிரானைட் குவாரி அமைக்க ஆளுங்கட்சியினரையும் அதிகாரிகளையும் சரிசெய்து கொள்ள  பெரும்தொகை வழங்கப்பட்டிருக்கிறது. அனுமதிக்கப்பட்ட அளவைவிட கணக்கு வழக்கின்றி கிரானைட் கனிம வளங்களை வெட்டியெடுக்க முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.

ஆந்திரா,  கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பூகம்பத்தைக் கிளப்பிய ரெட்டி சகோதரர்களின் இரும்புத்தாது சுரங்க ஊழலைவிட பி.ஆர்.பி. நிறுவனத்தின் கிரானைட் கொள்ளை  பலமடங்கு கூடுதலானது.

அதிகாரி சகாயம் தலைமையிலான குழுவின் இடைக்கால அறிக்கை குறித்து உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சய்  கிஷன் கவுல்  கருத்து கூறும்போது, ‘‘மதுரை மாவட்டத்தில் உள்ள  இயற்கை வளங்கள் அனைத்தையும் குவாரி உரிமையாளர்கள் கொள்ளை  அடித்துவிட்டனர். அரசு மற்றும் அதிகாரிகளின் ஒத்துழைப்பின்றி இது நடக்க வாய்ப்பில்லை. இதுகுறித்து விசாரிக்கும் சகாயம்

குழுவுக்குத் தமிழக ஆட்சியாளர்கள் முட்டுக்கட்டை போடுவதை  நாங்கள் சகித்துக்கொள்ள  மாட்டோம். அவ்வாறு முட்டுக்கட்டை போடப்படுமானால் எனது கடுமையான இன்னொரு பக்கத்தை நீங்கள் பார்க்க நேரிடும். உச்சநீதிமன்றம் காட்டிய வழியில்  தமிழகத்தில் உள்ள அனைத்து கிரானைட் குவாரிகளையும் தடைசெய்துவிடுவோம்’’  என  எச்சரித்தார். இதற்குப் பிறகும் சகாயம் குழுவுக்கு ஒத்துழைக்க அ.தி.மு.க.  ஆட்சியாளர்கள் தயாராக இல்லை. ஏனெனில், சகாயம் குழு தமது பணியை நிறைவுசெய்துவிட்டாலே அ.தி.மு.க.வினர் குற்றவாளி கூண்டில் நிறுத்தப்படுவது உறுதியாகும்.

கிரானைட் ஊழல் வெளியானபோது  அதற்கெல்லாம் காரணமானவர் எனக் கூறி கைதுசெய்யப்பட்டவரை  பாதுகாக்கவேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக ஜெயலலிதா, சசிகலா கூட்டணியினர் செயல்படுவதன்மூலம் அவர்களுடைய லஞ்ச நோக்கத்தை  அனைவரும் புரிந்துகொள்ளலாம்.

தமிழகத்தில்  இமாலய ஊழல் நடைபெற்றுள்ள கிரானைட் கொள்ளையில் சகாயம் குழுவினரின்  இறுதி அறிக்கையின் அடிப்படையில் நீதி விசாரணை நடத்தப்பட்டால் அ.தி.மு.க.வில் பல தலைகள் உருளுவது  உறுதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *