ஈரோடு மாவட்டம் பெருந்துறை  சிப்காட் தொழில் வளாகத்தில்  பன்னாட்டு நிறுவனமான  கோகோ கோலா குளிர்பான  தயாரிப்புக்காக ரூ.500   கோடி முதலீட்டில் தொடங்குவதற்குத் தமிழக அரசு 72 ஏக்கர் நிலத்தை 99 ஆண்டுகால குத்தகைக்கு ஏக்கர்  ஒரு ரூபாய்க்குத் தாரைவார்த்தது.  ஒரு நாளைக்கு 40 லட்சம் லிட்டர் தண்ணீரைக் கீழ்பவானி ஆற்றின் மூலமாக வழங்குவதற்கும் ஒப்பந்தம் போடப்பட்டது.  இந்த   முடிவை எதிர்த்து அந்தப் பகுதியில் கடையடைப்புப்  போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று  வந்தன. இந்த   ஒப்பந்தம்  நிறைவேற்றப்பட்டால், 85 கிராமங்கள் பாலைவனமாக  மாறும் என்று  எச்சரிக்கை விடப்பட்டது.

இந்நிலையில், 30.03.2015  அன்று தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம்,  கோகோ கோலா நிறுவனம் குளிர்பான ஆலை அமைப்பதற்கு அனுமதி கோரி  இதுவரை விண்ணப்பிக்கவில்லை என்று மறுத்தார்.  ஆனால், இதற்கான  ஒப்பந்தம் 23.01.2014  அன்று சிப்காட் நிறுவனத் திட்ட அலுவலர் ஜே.சுந்தர் சிங்   என்பவருக்கும் கோகோ கோலா குளிர்பான நிறுவனத்துக்கும் இடையே போடப்பட்டு,  பத்திரப்பதிவு அலுவலகத்தில்  பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இப்பிரச்சினையில் 72 ஏக்கர் நிலத்தை 99 ஆண்டுகால குத்தகைக்கு அடிமாட்டு விலையாக ஏக்கர் ஒன்றுக்கு ஒரு ரூபாய் வீதம் தாரைவார்த்ததை மூடிமறைப்பதற்கு அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் பல முயற்சிகளைச் செய்தார்.  இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ்  கட்சி சார்பாக அந்த ஒப்பந்தத்தின் நகலைப் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பகிரங்கமாக வெளியிட்டோம். அதற்குப்  பிறகு, அதிர்ச்சியில் ஆழ்ந்த ஆட்சியாளர்கள், வாங்கிய பெருந்தொகைக்கு  என்ன பதில்  சொல்வதென்று  தெரியாமல் விழிபிதுங்கி நின்றனர்.

பன்னாட்டு  நிறுவனத்துக்கு அரசு நிலத்தை அடிமாட்டு விலைக்குக் காதும்காதும் வைத்தாற்போல, கோடிக்கணக்கான ரூபாய் கைமாறிய பிறகு,பிரச்சினை பூதாகாரமாக வெடித்த  காரணத்தால், அ.தி.மு.க. ஆட்சியினர் பின்வாங்க ஆரம்பித்தனர்.

இதில் கடும் எதிர்ப்பு உருவான காரணத்தால், சிப்காட் வளாகத்தில் கோகோ கோலா நிறுவனத்துக்கு நிலம் ஒதுக்க மேற்கொண்ட  ஒப்பந்தத்தை, சிப்காட் நிறுவனம் அதிரடியாக 21.04.2015  அன்று ரத்துசெய்தது. ரத்து செய்யப்பட்டதற்கான காரணங்கள் எதை  கூறினாலும், இந்த   நில   ஒதுக்கீட்டில் அமைச்சர் தோப்பு வெங்கடாசலத்துக்குப் பெறும் தொகை கைமாறியிருக்கிறது. இதில் பெரும்பகுதி அ.தி.மு.க. தலைமைக்கும் வழங்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

விவசாயிகளின் நலன்களுக்கு எதிராகப் பன்னாட்டு  நிறுவனத்தோடு, அரசு நிலத்தைத் தாரைவார்க்க முயற்சித்த  அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் உட்பட அனைவர்மீதும் ஊழல் வழக்கு பதிவுசெய்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *