இந்தியாவிலேயே கல்வித்துறையில்  முன்னோடி மாநிலமாகத் தமிழகம் திகழ்ந்து வந்ததற்கு மிகப்பெரிய  பின்னடைவு தற்போதைய  ஆட்சியில் ஏற்பட்டு வருகிறது. தென்மாவட்டங்களில் சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளில் ஆசிரியர் நியமனங்களுக்குக் கல்வி  அதிகாரிகளிடம் முன்அனுமதி பெறவேண்டிய அவசியம் இல்லை. பணி நியமனம்  செய்துவிட்டு, மாவட்டக் கல்வி  அலுவலரிடம்  ஒப்புதல் பெற்றிடவேண்டும். இது காலந்தொட்டு நடக்கும் நடைமுறையாகும்.

தற்போது 62 ஆசிரியர் பணி  நியமன ஒப்புதலுக்காக இடைநிலை ஆசிரியர் பணிக்கு ரூ.3.5 லட்சம் கொடுத்தால்தான்  ஒப்புதல் வழங்கப்படும் என்று மாவட்டக் கல்வி  அலுவலர்கள் கூறுகின்றனர். இதன் காரணமாக 2013&-14ஆம்  கல்வியாண்டில் நியமனம்  செய்யப்பட்ட ஆசிரியர்களுக்குப் பல மாதங்களாகியும் ஒப்புதல் வழங்கப்படாததோடு,  சம்பளமும் தரப்படாமல் உள்ளது. இந்த   ஒப்புதலுக்காக மாவட்டக் கல்வி  அதிகாரிகள் மூலமாகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணிக்கு  முழுத்தொகையையும், ஒரே தவணையில் கப்பம் கட்டினால்தான் ஒப்புதல் கிடைக்கும் என்கிற அவலநிலை குறித்து வெட்கப்பட வேண்டியநிலை இன்றைக்கு ஏற்பட்டுள்ளது.

மாவட்டத்தில் கல்வித்துறைச் செம்மையாகச் செயல்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டிய கல்வி  அலுவலர் நாகராஜன், கண்காணிப்பாளர் கந்தசாமி, உதவி தொடக்கக் கல்வி  அலுவலர் முத்துப்பிள்ளை ஆகியோர் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்  சார்பாக, புரோக்கர்களாகச் செயல்பட்டு வசூல்வேட்டை நடத்தி, புதிதாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களைக் கொடுமைப்படுத்தி, மனஉளைச்சலுக்கு உள்ளாக்கி வருகின்றனா;. இந்த லஞ்சவேட்டையில் இந்த   அதிகாரிகள் பலரோடு  பேசிய ஒலி நாடாவை பகிரங்கமாக வெளியிட்டோம். இந்த   ஒலிநாடாவை  ஆதாரமாக வைத்து தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையினர் உடனடியாகச் சம்மந்தப்பட்ட கல்வி அதிகாரிகளையும், இந்த   லஞ்சவேட்டையை நடத்துவதற்குக் காரணமான கல்விஅமைச்சர் கே.சி.வீரமணியைப்  பதவி நீக்கம் செய்வதோடு, கைது  செய்யப்பட வேண்டும். இவர்களை  ஒரு நிமிடம்கூட பணியில் தொடர அனுமதிக்கக்கூடாது. அப்படி தொடர்வது தமிழகத்தில் கல்வித் துறையையே சீரழிக்கிற வாய்ப்பு ஏற்பட்டு விடும்.

இக்கொடுமை குறித்துத் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியைச் சேர்ந்தவர்கள் பலமுறை கல்வி  அதிகாரிகளைச்  சந்தித்து முறையிட்டதற்குத் தீர்வுகாணாமல், அதற்கு  மாறாக, மிரட்டி அச்சுறுத்துகிற வேலையைக்  கல்வி அதிகாரிகள் செய்து வருகின்றனர். இது குறித்து விரிவான விசாரணை செய்தால், தமிழக பள்ளிக்கல்வித் துறை எந்தளவுக்கு ஊழலில்  புரையோடி போயிருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு, கடுமையான நடவடிக்கை எடுக்கமுடியும்.

பள்ளிக்கல்வித் துறையில்  கடந்த ஓராண்டில்மட்டும் 10,000 ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு, அதற்காக லஞ்சம் பெறப்பட்டுள்ளது.  இதில் கோடிக்கணக்கான ரூபாய் கையூட்டு பெறப்பட்டு, இடைத்தரகர்கள் மூலம் பள்ளிக்கல்வி அமைச்சருக்குச் சேர்க்கப்பட்டிருக்கிறது.

தனியார் பள்ளிகளுக்கான அங்கீகாரத்தைப் புதுப்பிக்க ரூ.1 லட்சம், புதிதாக அங்கீகாரம் பெற ரூ.10 லட்சம் லஞ்சம் தரவேண்டியநிலை உள்ளது.  இதை விசாரணையின்மூலமே உண்மையான குற்றவாளிகளைத் தண்டிக்கமுடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *