சென்னையிலுள்ள ஆவின் நிறுவனத்துக்கு விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களிலிருந்து டேங்கர் லாரிகள் மூலம் பால் கொண்டுவரப்படுவது வழக்கம். அப்படிக் கொண்டுவரப்படுகிற பால் திருடப்படுவது குறித்து வெள்ளிமேடுபேட்டை காவல்  நிலைய துணை ஆய்வாளர் கண்டுபிடித்தார்.

ஆவின் பால் எடுத்துச்செல்லும்  ஒப்பந்தத்தை தீபிகா டிரான்ஸ்போர்ட், சௌத் இந்தியா டிரான்ஸ்போர்ட் ஆகிய நிறுவனங்கள் பெற்றிருந்தன. இந்த  நிறுவனங்களின் உரிமையாளர் வைத்தியநாதனும் அவரது ஊழியர்களும்  பாலில்  கலப்படம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆவின் நிறுவனத்துக்குள் டேங்கர் லாரிகளில் பால் வரும்போது, தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் இதுவரை ஆய்வுசெய்யாமல் இருந்துள்ளதும்  இதில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த   வழக்கை சி.பி.சி.ஐ.டி.   போலீஸார் ஏனோ தானோ என்று அவசர அவசரமாக விசாரணை  செய்து, லாரி  உரிமையாளர்கள், ஓட்டுனர்கள்ஆகியோர்மீது மட்டுமே  குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். ஆவின் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளின் ஆதரவில்லாமல், இந்த   முறைகேடு நடந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால்,  அதுகுறித்து விசாரிக்க  சி.பி.சி.ஐ.டி. போலீஸார் எந்த  முயற்சியும்  எடுக்கவில்லை.

ஆவின் கலப்பட ஊழல் வழக்கில் சிக்கிய வைத்தியநாதன் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட  பிறகு, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனுதாக்கல் செய்தார். அந்த  மனு விசாரணைக்கு வந்தபோது நீதிபதி பி.என்.பிரகாஷ், ‘‘ஆவின்  பால் முறைகேட்டில் பல உயர் அதிகாரிகளுக்குத் தொடர்பிருப்பதாகத் தெரிய வருகிறது. இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி.   போலீஸார் விசாரணை நடத்தவேண்டும். அப்படி விசாரணை நடத்தவில்லையெனில், சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட நேரிடும்’’ என சி.பி.சி.ஐ.டி.   போலீஸாருக்கு எச்சரிக்கை  விடுத்திருந்தார்.

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த   உடனேயே, 2011இல் ரூபாய் 17.75 ஆக  இருந்த பால் விலையை ரூ.6.25 ஏற்றி   ரூ.24 என்று உயர்த்தப்பட்டது. அடுத்து 2015இல் இரண்டாவது முறையாக மேலும் ரூ.10 ஏற்றி   ரூ.34 ஆக உயர்த்தினார்கள்.

பால் வளத்துறை என்பது  ஊழல் வளத்துறையாக மாறி, வைத்தியநாதன்கள் கொள்ளையடிப்பதற்கு அ.தி.மு.க.  ஆட்சியில் வழிவகை  செய்யப்பட்டுள்ளது. ஆவின் பாலில்  தண்ணீர் கலந்து, கொள்ளையடிப்  பதற்குத் துணைபோன பால் வளத்துறை  அமைச்சர் பதவியிலிருந்து  நீக்கப்பட்டிருக்கிறார். பால் வளத்துறையில்  நடந்த ஊழலுக்கு மாதவரம் மூர்த்திக்கு மட்டும்தான் பங்கா? அதில்  ஜெயலலிதாவுக்குப் பங்கில்லையா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *