தமிழகத்தில் தலித்துகளுக்கு பாதுகாப்பில்லை என்பதை அரியலூர் இளம் பெண் நந்தினி படுகொலை அம்பலபடுத்தியுள்ளது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்கள் அறிக்கை – 09 பிப்ரவரி 2017

தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிராக வன்கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்தியாவிலேயே தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகள் தமிழகத்தில் அதிகமாக இருப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் தலித்துகளுக்கு பாதுகாப்பில்லை என்பதை அரியலூர் இளம் பெண் நந்தினி படுகொலை அம்பலபடுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் செந்துரை அருகே உள்ள சிறுகடம்பூர் கிராமத்தை சேர்ந்த சித்தாள் வேலை செய்து கொண்டிருந்த 17 வயது இளம்பெண் நந்தினியை அதே கிராமத்தைச் சேர்ந்த இந்து முன்னணி ஒன்றிய செயலாளர் மணிகண்டன் என்பவர் காதலித்து, கற்பழித்து கொலை செய்துள்ளார். காவல்துறையினரின் விசாரணைக்குப் பிறகு மணிகண்டன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தலித்துகளுக்கு எதிரான வழக்குகளில் உரிய விசாரணையும், தொடர் நடவடிக்கையும் இல்லாத மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இந்த ஆணையத்தின் அறிக்கையின்படி உத்தரபிரதேசத்தில் 2024 வழக்குகளும், தமிழகத்தில் 999 வழக்குகளும் விசாரிக்கப்படாமல் நிலுவையில் உள்ளதாக கூறியுள்ளன. இத்தகைய போக்கு தமிழ்நாட்டில் இருப்பதால் தான் தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமை பல பகுதிகளில் தலைவிரித்தாடி வருகிறது. இத்தகைய போக்கு நந்தினி கொலை வழக்கிலும் பின்பற்றப்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது. எனவே, இத்தகைய கொடுமைகளை தடுத்து நிறுத்த ஆட்சியாளர்கள் முன்வரவில்லை என்றால் தமிழகத்தில் சமூக மோதல் முற்றி, சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைகிற நிலை ஏற்படும் என எச்சரிக்கிறேன்.

நந்தினி கொலை வழக்கில் தங்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென்று அவரது குடும்பத்தினர் போராடி வருகிறார்கள். இளம்பெண் நந்தினிக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு எதிராக தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி. துறை சார்பில் திரு. கு. செல்வப்பெருந்தகை தலைமையில் 11.2.2017 சனிக்கிழமையன்று காலை 10 மணியளவில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுவதோடு, இவ்வழக்கை மத்திய புலனாய்வுத்துறைக்கு மாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுப்பப்பட இருக்கிறது. ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவரும், சித்தாள் வேலை செய்து பிழைப்பு நடத்திக் கொண்டிருந்த இளம்பெண் நந்தினி மறைவால் வாடுகிற அவரது குடும்பத்தினருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ரூபாய் 50 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *