தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை

மத்திய பா.ஜ.க. அரசின் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு திணிப்பை எதிர்த்து கடுமையான போராட்டங்கள் நடத்தப்பட்டதையும் மீறி நீட் தேர்வு நடத்தப்பட்டு, மாணவர் சேர்க்கையும் முடிந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 24 அரசு மருத்துவ கல்லூரிகளில் மொத்தம் உள்ள 3534 இடங்களில் மத்திய பாடத்திட்டத்தின்படி படித்த 1220 மாணவர்களும், மாநில பாடத்திட்டத்தின்படி படித்த 2314 மாணவர்களுக்கும் மருத்துவ படிப்பிற்கான சேர்க்கை வழங்கப்பட்டுள்ளது. இந்த சேர்க்கையை ஆய்வு செய்கிற போது தமிழகம் எந்தளவுக்கு வஞ்சிக்கப்பட்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம். 
நீட் தேர்வின் மூலம் பிற மாநிலங்களை சேர்ந்த 422 மாணவர்கள் தவறான இருப்பிட சான்று கொடுத்து மருத்துவ படிப்பிற்கான சேர்க்கையை பெற்றுள்ளனர். முதல் முறையாக மாநில ஒதுக்கீட்டில் இவ்வளவு மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டுகளில் மாணவர் சேர்க்கை மாநில பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடந்ததால் இத்தகைய மாணவர்களுக்கு மருத்துவ படிப்பிற்கான சேர்க்கை கிடைக்க வாய்ப்பில்;லாமல் இருந்தது. போலி இருப்பிட சான்று வழங்கி மருத்துவ சேர்க்கை பெற்றவர்கள் மீது தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது ? 
மேலும் தமிழக பாடத்திட்டத்தின்படி மருத்துவ படிப்பிற்கான சேர்க்கையை பெற்ற 2314 மாணவர்களில் 1004 மாணவர்கள் – 43 சதவீதம் – பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளாக பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து படித்ததன் மூலம் இந்த வாய்ப்பை பெற்றுள்ளனர். இதனால் கடந்த ஆண்டு மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு மொத்த மருத்துவ படிப்பிற்கான இடங்களில் 99 சதவீதம் மாணவர் சேர்க்கை கிடைத்தது. ஆனால் நடப்பாண்டில் நீட் நுழைவுத் தேர்வு காரணமாக இது 65 சதவீதமாக குறைந்தது. அதேபோல, மத்திய பாடத் திட்டத்தில் படித்த 20 மாணவர்களுக்கு தான் கடந்த ஆண்டு மருத்துவ படிப்பிற்கான வாய்ப்பு கிடைத்தது. அது இந்த ஆண்டு 1220 இடமாக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கையை பார்க்கிற போது மாநில பாடத்திட்டத்தின்படி படித்த தமிழக மாணவர்கள் எந்தளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளலாம். 
மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு மத்திய பாட திட்டத்தின் அடிப்படையில் நீட் நுழைவுத் தேர்வு நடத்தினால் தமிழக மாணவர்கள், குறிப்பாக கிராமப்புற, பின்தங்கிய, ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்கிற அடிப்படை சமூகநீதியைக் கூட புரிந்து கொள்ளாமல் நரேந்திர மோடி அரசு செயல்பட்டது ஏன் ? இதனால் தமிழக மாணவர்களின் எதிர்காலம் படுபாதாளத்திற்கு தள்ளப்பட்டதால் தான் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்துக் கொண்டார். இதற்கு மத்திய பா.ஜ.க. அரசும், மாநில அ.தி.மு.க. அரசும் என்ன பரிகாரம் காணப் போகிறது ?
நீட் தேர்வு அறிமுகப்படுத்தியது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தான் என்று தமிழக பா.ஜ.க.வினர் அரைத்த மாவையே திரும்பத் திரும்ப அரைத்து கொண்டுள்ளனர். நீட் தேர்வை நியாயப்படுத்தி நீட்டி முழங்குகிற தமிழிசை சௌந்தரராஜன் நீட் தேர்வை அறிமுகப்படுத்தியது யார் என்பது குறித்து பட்டிமன்றம் நடத்துவது ஏன் ? 
கடந்த 2010 ஆம் ஆண்டில் இந்திய மருத்துவ கழகத்தின் தலைவராக இருந்த கேத்தன் தேசாய் மீது கடுமையான ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்ட போது அவரை பதவி நீக்கம் செய்து புகழ் பெற்ற கல்லீரல் நிபுணர் டாக்டர் எஸ்.கே. சரீன் தலைமையில் இந்திய மருத்துவ கழக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைக்கப்பட்டது. அக்குழு நாடு முழுவதும் ஒரே மாதிரியான நீட் தேர்வு நடத்தப்பட்டு, மருத்துவ படிப்பிற்கான தரத்தை உயர்த்த வேண்டும் என்று பரிந்துரை செய்தது. ஆனால் நீட் தேர்வு நடத்தப்படுவதை மாநில விருப்புரிமைக்கு விடப்பட்டதே தவிர, அன்றைய மத்திய அரசு கட்டாயப்படுத்தி திணிக்கவில்லை. மேலும் இந்த பரிந்துரையின் அடிப்படையில் 2012 இல் நடத்தப்படுவதாக இருந்த நீட் நுழைவுத் தேர்வு மாநில அரசுகளின் எதிர்ப்பு காரணமாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நடைமுறைப்படுத்தாமல் இருந்தது. பிறகு, உச்சநீதிமன்றம் தலையிட்டு மே 5, 2013 இல் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது. இதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில் நடத்தப்பட்ட நீட் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. அன்றைக்கு மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு உச்சநீதிமன்றத்தில் எடுத்த நிலை காரணமாகத் தான் உச்ச நீதிமன்றம் இத்தகைய தீர்ப்பை வழங்கியது. பா.ஜ.க. அரசு தலைமை வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் நீட் நுழைவுத் தேர்வுக்கு ஆதரவாக அந்தர் பல்டி அடித்ததைப் போல அன்றைய தலைமை வழக்கறிஞர் நடந்து கொண்டு பச்சை துரோகம் செய்யவில்லை.
மத்தியில் பா.ஜ.க. அரசு 2014 இல் அமைந்த பிறகு முதல் முறையாக மே 4, 2014 இல் மத்திய பாடத் திட்டத்தின்படி நீட் தேர்வு நடத்தப்பட்டு மாணவர் சேர்க்கை நிகழ்ந்தது. அதற்குப் பிறகு 2016, 2017 ஆம் ஆண்டுகளில் நாடு முழுவதும் நீட் தேர்வு நடத்தப்பட்டது. இதில் தமிழ்நாட்டிற்கு மட்டும் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கொண்டு வந்த அவசர சட்டத்தின் காரணமாக 2016 இல் விலக்கு அளிக்கப்பட்டது. நீட் நுழைவுத் தேர்வின் பின்னணி இந்நிலையில் இருக்கும் போது மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்த மே 2014 வரை எந்தவிதமான நுழைவு தேர்வும் நடத்தப்பட்டு, மாணவர் சேர்க்கை நிகழவில்லை என்பதை தமிழக பா.ஜ.க.வினரால் மறுக்க முடியுமா ? எனவே, பாதிக்கப்பட்ட தமிழக மாணவர்கள் நலனில் அக்கறையில்லாமல் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிற வேலையை தமிழக பா.ஜ.க.வினர் கைவிட வேண்டும். இல்லையெனில் கொந்தளித்து கொதிநிலையில் உள்ள தமிழ்ச் சமுதாயத்தினர் ஒன்றுதிரண்டு தமிழகத்தில் பா.ஜ.க.வை முற்றிலும் துடைத்தெறிவார்கள் என்பது உறுதி.
எனவே, தமிழக ஒட்டுமொத்த நலனை குழிதோண்டி புதைக்க முயற்சி செய்யும் மத்திய பா.ஜ.க. அரசையும், மாநில அ.தி.மு.க. அரசையும் கண்டிக்கிற வகையில் வருகிற செப்டம்பர் 13 ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் நடைபெறவுள்ள அனைத்து கட்சி கண்டன ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் பெருந்திரளாக அணிதிரண்டு பங்கேற்று வெற்றி பெறச் செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *