தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை

மத்தியில் நரேந்திர மோடி தலைமையில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தது முதற்கொண்டு பல்வேறு மக்கள் விரோத நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. தேர்தலுக்கு முன்பாக கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் மக்கள் ஏமாற்றப்பட்டு வருகிறார்கள். சமீபகாலமாக பெட்ரோலியப் பொருட்களுக்கான விலை நிர்ணயம் செய்வதில் பல்வேறு குளறுபடிகள் நடைபெற்று வருகின்றன. மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக் காலத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மிக உயர்ந்த நிலையில் இருந்த போது அந்த சுமையை மக்கள் மீது சுமத்தக் கூடாது என்பதற்காக ஒவ்வொரு ஆண்டிலும் 1 லட்சத்து 35 ஆயிரம் கோடி ரூபாய் பெட்ரோலிய நிறுவனங்களுக்கு மத்திய காங்கிரஸ் அரசு மானியமாக வழங்கி வந்தது. இந்த மானியத்தின் மூலமாகத் தான் பெட்ரோலிய நிறுவனங்கள் தங்களது நஷ்டத்தினை சரி செய்து வந்தனர். ஆனால் மே 2014 இல் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தது முதல் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. இதை சாதகமாக பயன்படுத்தி பெட்ரோலியப் பொருட்களின் விலையை குறைக்க மத்திய அரசு முயற்சி செய்திருக்க வேண்டும். 
2012 ஆம் ஆண்டில் மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சி செய்த போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 112 டாலராக இருந்தது. அன்று ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூபாய் 73. ஆனால் இன்று சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 52 டாலர். தற்போது ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூபாய் 74. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பாதிக்கு பாதியாக குறைந்திருந்தாலும் பெட்ரோல் விலையை குறைப்பதற்கு மத்திய பா.ஜ.க. அரசு தயாராக இல்லை. அதேபோல, பா.ஜ.க. ஆட்சிக்கு வந்து இதுவரை 11 முறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியிருக்கிறது. இதனால் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 12, ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 13 ஆக உயர்ந்திருக்கிறது. 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்றவாறு பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் கலால் வரியை பலமடங்கு கூட்டி, பா.ஜ.க. அரசு கஜானாவை நிரப்பி வருகிறது. இதன்மூலம் நிதி பற்றாக்குறையை மூடிமறைக்க முயற்சிக்கிறது. 2014 ஆம் ஆண்டில் மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சி பதவி விலகிய போது பெட்ரோலிய பொருட்களிலிருந்து மத்திய அரசுக்கு கிடைத்த வரி வருவாய் ரூபாய் 99 ஆயிரத்து 184 கோடி. ஆனால் பலமுறை கலால் வரியை உயர்த்தியதால் மத்திய பா.ஜ.க. அரசின் வரி வருவாய் தற்போது ரூபாய் 2 லட்சத்து 42 ஆயிரத்து 691 கோடியாக உயர்ந்திருக்கிறது. இந்நிலையில் மத்திய பா.ஜ.க. அரசின் இத்தகைய விலை உயர்வுகள் மக்கள் விரோத நடவடிக்கை என்று குற்றம் சாட்டுவதற்கு இதைவிட வேறு ஆதாரம் என்ன வேண்டும் ?
எனவே, பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக விலைவாசி உயரும், மக்களின் வாழ்க்கைத் தரம் பாதிக்கப்படும். இதனால் ஏற்படுகிற தொடர் பாதிப்புகளினால் பல்வேறு சுமைகளை மக்கள் ஏற்க வேண்டியிருக்கும். நாட்டு மக்கள் மீது நரேந்திர மோடி அரசுக்கு கடுகளவாவது அக்கறை இருந்தால் பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டுமென்று தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக கேட்டுக் கொள்கிறேன். அப்படி திரும்பப் பெறவில்லையெனில் பாதிக்கப்பட்ட மக்களை ஒன்றுதிரட்டி மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக கடுமையான போராட்டம் நடத்த வேண்டியிருக்கும் என எச்சரிக்கை செய்ய விரும்புகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *