கடந்த மூன்றாண்டுகளாக மத்தியில் நடைபெற்று வரும் பா.ஜ.க. ஆட்சி சிறுபான்மை மக்களுக்கு எதிராக அச்சுறுத்தும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. சில நாட்களாக நமது அண்டை நாடான மியான்மரில் ரோஹிங்கியா மக்களுக்கு எதிராக ராணுவத்தினரும், சில தீவிரவாத சக்திகளும் இணைந்து குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என்று கொஞ்சம் கூட கருணை காட்டாமல் மிக கொடூரமான தாக்குதல்களை அரங்கேற்றி வருகிறார்கள். ஆயிரக்கணக்கான ரோஹிங்கியா அகதிகள் வங்க தேசத்திற்கு அடைக்கலம் தேடி சென்றிருக்கிறார்கள். இந்தியாவில் மட்டும் ஏறக்குறைய நாற்பதாயிரம் அகதிகள் இருக்கிற நிலை ஏற்பட்டுள்ளது.
நமது நாட்டைப் பொறுத்தவரை சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து அகதிகள் நலனில் மனிதாபிமானத்தோடு நடந்ததில் உலகத்திற்கே முன்னுதாரணமாக திகழ்ந்திருக்கிறோம். கடந்த காலங்களில் திபெத்திலிருந்து தலாய்லாமா எல்லை தாண்டி நமது நாட்டிற்கு வந்தபோது அடைக்கலம் வழங்கிய பெருமை இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களுக்கு உண்டு. அதேபோல, இலங்கையிலிருந்து வந்த தமிழர்கள் மற்றும் பர்மாவிலிருந்து வந்த அகதிகளுக்கு அடைக்கலம் இந்தியா வழங்கியிருக்கிறது. ஆனால் தேசப் பாதுகாப்பிற்கு ஆபத்து என்ற காரணத்தை கூறி ரோஹிங்கியா முஸ்லீம் மக்களை மியான்மருக்கே திரும்ப அனுப்புவதில் பா.ஜ.க. அரசு தீவிரம் காட்டி வருகிறது. இது மனிதாபிமானமற்ற செயலாக கருத வேண்டியிருக்கிறது. இத்தகைய அணுகுமுறையை இந்தியாவிடமிருந்து பெறுவதை மிகுந்த அதிர்ச்சியோடு பார்க்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது.
அகதிகளாக வருபவர்கள் முஸ்லீம்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களை பயங்கரவாதிகள் என்று கூறுவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிற செயலாகும். மியான்மரிலிருந்து அடித்து விரட்டப்பட்டு அபயம் தேடி நிராயுதபாணிகளாக நமது நாட்டிற்கு வருபவர்களை மனிதாபிமான உணர்வோடு அடைக்கலம் வழங்கி அகதிகளாக நடத்துவதிலே பா.ஜ.க. அரசுக்கு என்ன தயக்கம் ? அவர்கள் குடியுரிமை கேட்கவில்லை. தற்காலிகமாக அடைக்கலம் தான் கேட்கிறார்கள். பா.ஜ.க. அரசு ஒரு மதவாத அரசு என்கிற காரணத்திற்காக சிறுபான்மை இஸ்லாமிய மக்களுக்கு இத்தகைய கொடூரமான அணுகுமுறையை கடைப்பிடிப்பதை மனிதாபிமானமுள்ள எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். மனம் திறந்து பேசுகிறேன் என்று வானொலியில் ஊருக்கு உபதேசம் செய்கிற நரேந்திர மோடி, அப்பாவி இஸ்லாமிய மக்களுக்கு கருணை காட்ட மறுப்பது ஏன் ?
மக்களவையில் 283 உறுப்பினர்களை பெற்றிருக்கிற பா.ஜ.க.வில் ஒரு இஸ்லாமியரோ, ஒரு கிறிஸ்துவரோ இல்லாத வகையில் நரேந்திர மோடியினுடைய அணுகுமுறை இருக்கிறது. இதைத் தான் ஆர்.எஸ்.எஸ். திட்டம் தீட்டி பா.ஜ.க.வில் செயல்பட வைத்திருக்கிறது. இந்த பின்னணியில் உள்ள பா.ஜ.க.வை சிறுபான்மை மக்களிடம் மனிதாபிமானத்தோடு நடந்து கொள்ள வேண்டுமென்று எதிர்பார்ப்பது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிற செயலாகத் தான் இருக்க முடியும். இத்தகைய நடவடிக்கைகள் மூலம் பா.ஜ.க. ஒரு மதவாத கட்சி என்பதை மீண்டும், மீண்டும் நிரூபித்துக் கொண்டு வருகிறது.
1971 ஆம் ஆண்டில் கிழக்கு பாகிஸ்தான் மக்கள் பாகிஸ்தான் அரசால் கடும் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்கள். இந்த அநீதியை எதிர்த்து நடந்த போராட்டத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினரின் தாக்குதலுக்கு உட்பட்டவர்கள் அகதிகளாக ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் மேற்கு வங்காளத்திற்கு எல்லை தாண்டி வர வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி அவர்கள், அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து, தங்க வைத்து, உணவளித்து, பாதுகாத்து அவர்களுக்கு துணையாக இருந்தார். அத்தகைய மனிதாபிமான பின்னணி கொண்ட இந்தியாவின் பெருமைக்கு உலக அரங்கில் இழுக்கு தேடும் வகையில் இன்றைய பிரதமர் நரேந்திர மோடி நடந்து கொண்டிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.
நமது எல்லை தாண்டி வருகிற ரோஹிங்கியா சிறுபான்மை மக்களை மத, இன ரீதியாக அடையாளப்படுத்தாமல் மனிதாபிமான உணர்வோடு அகதிகளாக கருதி தற்காலிக அடைக்கலம் கொடுக்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கு இருக்கிறது. அந்த கடமையை செய்ய வேண்டுமென நரேந்திர மோடி அரசை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.
 

Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *