தமிழகத்தில் அரசு பேருந்து கட்டணம் 67 சதவீத உயர்வு ஒரே அறிவிப்பின் மூலம் செய்யப்பட்டிருக்கிறது. நகர, மாநகர பேருந்துகளின் குறைந்தபட்ச கட்டணம் 66 சதவீதமாகவும், அதிகபட்ச கட்டணம் 58 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல புறநகர் பேருந்து கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக மாநகர போக்குவரத்து கழகத்தில் குறைந்தபட்ச கட்டணம் ரூபாய் 3 ஆக இருந்தது, ரூபாய் 5 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.14 ஆக இருந்தது ரூ.23 ஆகவும் உயர்த்தப்பட்டிருக்கிறது. இத்தகைய பேருந்து கட்டண உயர்வு நடுத்தர, சாதாரண மக்களை பெரிதும் பாதிக்கக் கூடியதாகும். தமிழகத்தில் நாள்தோறும் 2 கோடிக்கும் மேற்பட்டவர்கள் பேருந்தில் தான் பயணம் செய்கிறார்கள். கடந்த ஆறு ஆண்டுகளில் படிப்படியாக 10 சதவீதத்திற்கும் அதிகமாக இல்லாமல் கட்டண உயர்வு செய்திருந்தால் தற்போது ஒரே நேரத்தில் இத்தகைய கட்டண உயர்வை தவிர்த்திருக்கலாம்.

 

மேலும் அரசு பேருந்து என்பது மக்களின் சேவைக்காக பயன்படுத்தப்படுவதாகும். இதில் லாப நோக்கு பார்க்கக் கூடாது. அரசு பேருந்துகள் நஷ்டத்தில் இயங்குவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. திறமையற்ற நிர்வாகம், ஊழல், ஆளுங்கட்சியினரின் தலையீடு போன்ற பல காரணங்களால் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. தற்போது போக்குவரத்து கழங்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறை ரூபாய் 3 ஆயிரம் கோடி என்று கூறப்படுகிறது. ஆண்டுதோறும் ரூபாய் 1 லட்சத்து 50 ஆயிரம் கோடி பட்ஜெட் சமர்ப்பிக்கும் தமிழக அரசு ரூபாய் 3 ஆயிரம் கோடியை மானியமாக வழங்கி தற்போதைய பேருந்து கட்டணத்தை தவிர்த்திருக்கலாம்.

 

ஆனால் மக்கள் நலனில் அக்கறையில்லாத அ.இ.அ.தி.மு.க. அரசு சாதாரண மக்கள் பயன்படுத்தும் பேருந்து கட்டணத்தை உயர்த்தி, தாங்க முடியாத சுமையை ஏற்படுத்தியிருக்கிறது. இது ஒரு அப்பட்டமான மக்கள் விரோத நடவடிக்கையாகும். தமிழக அரசுக்கு மக்கள் மீது உண்மையிலேயே அக்கறை இருக்குமேயானால் தற்போது அறிவித்துள்ள பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *