உச்சநீதிமன்ற ஆணையையொட்டி தமிழகத்தில் தேசிய-மாநில நெடுஞ்சாலைகளுக்கு அருகில் இருந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுபானக் கடைகள், மதுக் கூடங்கள் மூடப்பட்டன. இதற்கு பதிலாக மாற்று மதுக்கடைகள் அமைக்கப்படுவதை கண்டித்து தமிழகத்தின் பல பகுதிகளில் பொது மக்கள் தன்னெழுச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலைக்கு அருகில் சாமளாபுரத்தில் உள்ள மூன்று டாஸ்மாக் மதுக்கடைகள் சமீபத்தில் மூடப்பட்டன. அதற்கு பதிலாக புதிய மதுக்கடைகள் அமைக்கும் முயற்சிகளுக்கு எதிராக பொதுமக்கள் நேற்று மறியலில் ஈடுபட்டனர். காலை முதல் மாலை 5 மணி வரை அமைதியாக போராடிய மக்கள் மீது திடீரென காவல்துறையினர் கடுமையாக தாக்க முற்பட்டனர். இப்போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது ஈவு இரக்கமின்றி அநாகரீகமாக கண்ணத்தில் அரைந்தும், லத்தியால் கடுமையாக தாக்கியும் கொடூரமாக காவல்துறையினர் நடந்துள்ளனர். இத்தகைய தாக்குதல்கள் காவல்துறை உயர் அதிகாரிகள் முன்னிலையிலேயே நடைபெற்றிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது. இதேபோல, வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை அடுத்த சின்னபேராம்பட்டு கிராமத்திலும் புதிய டாஸ்மாக் கடை அமைப்பதை எதிர்த்து மக்கள் போராடியுள்ளனர். திருவள்;ர், அரவக்குறிச்சி, புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அடுத்த செம்பட்டிவிடுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்கள் போராடி வருகின்றனர்.

தங்கள் பகுதியில், தங்கள் வாழ்வை சீரழிக்கும் மதுக்கடைகள் திறக்கக் கூடாது என்ற உன்னதமான கோரிக்கைக்கு ஆதரவாக போராடிய திருப்பூர் மக்கள் மீது, குறிப்பாக பெண்கள் மீது காவல்துறையினர் வன்முறையை ஏவிவிட்டுள்ளனர். இத்தகைய தாக்குதலை நியாயத்திற்காக போராடிய மக்கள் மீது காவல்துறையினர் நடத்துவதற்கு எந்த உரிமையும் இல்லை. இத்தாக்குதலில் பெண்கள் உள்ளிட்ட பலர் படுகாயம் அடைந்துள்ளனர். அமைதியான முறையில் போராடிய பெண்கள் மீதும், பொதுமக்கள் மீதும் காட்டுமிராண்டித்தனமாக காவல்துறையினர் தடியடி பிரயோகம் செய்து தாக்குதல் நடத்தியதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன். இதில் படுகாயம் அடைந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவதோடு, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளவர்களை உடனடியாக எவ்வித நிபந்தனையுமின்றி விடுதலை செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *