காவிரி நடுவர்மன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் முட்டுக்கட்டை போட்டு வருகிற மத்திய பா.ஜ.க. அரசை வலியுறுத்துகிற வகையிலும், விவசாயிகள் வங்கிக் கடனை தள்ளுபடி செய்யக் கோரியும் கடந்த 28 நாட்களாக தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் ஜந்தர் மந்தரில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இவர்களது கோரிக்கைகளை பிரதமர் நரேந்திர மோடியிடம் நேரில் வலியுறுத்துவதற்கு தீவிர முயற்சிகள் செய்தும் எந்த பயனும் ஏற்படவில்லை. இறுதியாக நேற்று அய்யாக்கண்ணு உள்ளிட்ட 9 விவசாயிகளை பிரதமர் அலுவலகத்திற்கு டெல்லி காவல்துறையினர் வாகனங்களில் அழைத்துச் சென்று அங்குள்ள எழுத்தரிடம் கோரிக்கை மனுவை வழங்குவதற்கு அனுமதித்துள்ளனர். பிரதமரை நேரில் சந்திக்க மறுக்கப்பட்ட விவசாயிகள் குறைந்தபட்சம் பிரதமரின் செயலாளரையாவது சந்தித்து மனு வழங்குவதற்கு ஏற்பாடு செய்திருக்கலாம். ஆனால் பிரதமர் அலுவலகத்தில் இருக்கிற சாதாரண எழுத்தரிடம் மனுவை வழங்க வேண்டிய அவலநிலை தமிழக விவசாயிகளுக்கு ஏற்பட்டது மிகப்பெரிய அவமானமாகும்.

விவசாயிகளது கோரிக்கைகளுக்காக போராடி வருகிறவர்களை பிரதமரோ, விவசாயத்துறை அமைச்சரோ சந்தித்து பேசி, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு முயற்சி செய்யாதது ஏன் ? ஆனால் விவசாயிகள் போராட்டத்தை துச்சமெனக் கருதி உதாசீனப்படுத்துகிற மத்திய பா.ஜ.க. அரசின் போக்கை எவரும் ஏற்றுக் கொள்ள முடியாது. தமிழகத்தை பல முனைகளில் வஞ்சித்து வருகிற நரேந்திர மோடி அரசு விவசாயிகளுடைய கோரிக்கைகளை செவிமடுக்க மறுப்பதைவிட விவசாயிகள் விரோதச் செயல் வேறு எதுவும் இருக்க முடியாது. இதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.
தலைநகர் டெல்லியில் போராடி வருகிற விவசாயிகள் உச்சகட்டமாக நேற்று நிர்வாண போராட்டம் நடத்துகிற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். இந்த போராட்டம் தலைநகர் டெல்லியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தினாலும் பா.ஜ.க. ஆட்சியாளர்கள் இதை கண்டுக் கொள்வதாக இல்லை. எந்த நிலையிலும் போராடுகிற விவசாயிகளை சந்திக்கவோ, அவர்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காணவோ பிரதமர் மோடியும் தயாராக இல்லை, சம்மந்தப்பட்ட அமைச்சர்கள் எவரும் முன்விரல்லை. இது போராடுகிற விவசாயிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதியோ, அவமானமோ இல்லை. ஒட்டுமொத்த தமிழ்நாடு மக்களுக்கு இழைக்கப்பட்ட அவமானமாகவே கருத வேண்டியிருக்கிறது.
தலைநகர் டெல்லியில் போராடுகிற விவசாயிகளை அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் திரு. ராகுல்காந்தியும், நானும் நேரில் சென்று அவர்களது கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்தோம். இவர்களது கோரிக்கைகள் குறித்து வலியுறுத்துவதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உடனடியாக தலைநகர் டெல்லி சென்று விவசாய சங்க பிரதிநிதிகளோடு பிரதமர் மோடியை சந்திக்க வேண்டும். அதேபோல, நாடாளுமன்றத்தில் தமிழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள், போராடுகிற விவசாயிகளுக்காக ஒட்டுமொத்தமாக குரல் எழுப்பி, பா.ஜ.க. ஆட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுக்க முன்வர வேண்டும்.
மதவாத அரசியலை நடத்துவதற்கு பசுவதை தடைச் சட்டத்தை இந்தியா முழுவதும் எப்படி நிறைவேற்றுவது என்பதில் தீவிரம் காட்டுகிற பா.ஜ.க., விவசாயிகளுடைய பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் வழங்க முன்வரவில்லை. ஏற்கனவே காங்கிரஸ் அரசு கொண்டு வந்த நில கையகப்படுத்துதல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்த விவசாயிகளின் நில உரிமையை பறிப்பதற்கு நரேந்திர மோடி அரசு முயற்சி செய்தது. ஆனால் இந்த முயற்சியை இளந்தலைவர் ராகுல்காந்தி தலைமையில் நாடு முழுவதும் விவசாயிகள் கடுமையான போராட்டம் நடத்தியதால் பா.ஜ.க. அரசு சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற்றுக் கொண்டது. அதைப்போல நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் ஒன்று திரண்டு பாரதிய ஜனதா ஆட்சிக்கு எதிராக கடுமையான போராட்டம் நடத்துவதன் மூலமே விவசாயிகள் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்.


Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *