தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 07-04-2017

பாட்டாளி மக்கள் கட்சியும், சில பொதுநல அமைப்புகளும் தொடுத்த வழக்கின் அடிப்படையில் இந்தியா முழுவதும் தேசிய மற்றும் நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் 31.3.2017 அன்றுடன் மூடப்பட வேண்டுமென்று உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. அதனால் தமிழகத்தில் 3321 மதுக்கடைகளும், நட்சத்திர விடுதிகள் மற்றும் மனமகிழ் மன்றங்களில் உள்ள குடிப்பகங்களும் (டீயச) மூடப்பட்டு விட்டன. இது மதுவிலக்கு கொள்கைக்கு கிடைத்த வெற்றியாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வரவேற்கிறது.
ஆனால், இந்த வெற்றியின் முழுப் பயனை மக்களுக்கு சென்றடையாமல் தடுக்கும் நோக்கத்தில் சிலரது முயற்சியால் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட இருப்பதாகத் தெரிகிறது. அதன்படி மாநில நெடுஞ்சாலைகளை மாநகர, நகர, மாவட்ட சாலைகளாக மாற்றுவதன் மூலம் மூடப்பட்ட மதுக்கடைகளை மீண்டும் அதே இடத்தில் திறக்க சிலர் திட்டமிட்டு முயற்சி செய்து வருகிறார்கள். இந்த முயற்சிகளுக்கு அ.தி.மு.க. அரசு துணை போவதாக தெரிகிறது. இது உச்சநீதிமன்ற ஆணையை மீறுவததோடு, நீதிமன்ற அவமதிப்பாகவும் கருதப்படும்.
தேசிய நெடுஞ்சாலைகளில் மதுபான கடைகள் திறந்திருப்பதால், அதில் மது அருந்திவிட்டு வாகனங்கள் ஓட்டப்படுவது தான் விபத்துகளுக்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. நெடுஞ்சாலைகளில் ஏற்படும் வாகன விபத்துகளில் இந்தியாவிலேயே தமிழகம் இரண்டாவது இடத்தை பெற்றிருக்கிறது என்பதைவிட வேதனையான செய்தி வேறு எதுவும் இருக்க முடியாது.
எனவே, நெடுஞ்சாலைகளில் வாகன விபத்துக்களை முற்றிலும் குறைக்கவும், மது கொடுமையினால் பாதிக்கப்பட்ட மக்களை, குறிப்பாக பெண்களை பாதுகாக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட உச்சநீதிமன்ற ஆணையை எவ்வித தடுமாற்றமும் இன்றி முழுமையாக நிறைவேற்ற வேண்டுமென தமிழக அரசை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *