தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் அறிக்கை

சமீப காலமாக தமிழகத்தில் ஒரு ஆட்சி செயல்படுகிறதா என்கிற சந்தேகம் மக்கள் மனதில் எழுந்துள்ளது. தமிழகம் முழுவதும் எதிர்நோக்குகிற பல்வேறு பிரச்சினைகளில் தெளிவான தீர்வு காண முடியாதநிலையில் தமிழக அரசு தடுமாறிக்கொண்டிருப்பதை காண முடிகிறது. தமிழக லாரி உரிமையாளர்கள் சங்கம் வாட் வரி உயர்வு உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப் போவதாக 20 நாட்களுக்கு முன்பாகவே தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தது. இது குறித்து தமிழக அரசு எந்த பேச்சுவார்த்தையும் தொடங்காததால் மார்ச் 30ம் தேதி முதல் காலவரையற்ற லாறிகள் வேலை நிறுத்தம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று தொடங்கப்பட்ட லாறிகள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் மட்டும் 4 ½ லட்சம் லாரிகள் ஓடவில்லை. இதனால் தமிழகம் முழுவதும் கோடிகணக்கான ரூபாய் மதிப்புள்ள சரக்குகள் தேங்கி கிடக்கின்றன. குறிப்பாக அரிசி, பருப்பு, எண்ணை, முட்டை, காய்கறிகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் தேங்கி கிடப்பதனால் அப்பொருட்களின் விலை 30% உயர்கிறநிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் சுமார் ரூபாய் 1500 கோடி மதிப்புள்ள சரக்குகள் தேங்கி கிடக்கின்றன. இந்த வேலை நிறுத்தத்தினால் ஏற்படுகிற பாதிப்புகளை தவிர்க்கிற வகையில் நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் எடுக்காததால் கடுமையான பாதிப்பிற்கு தமிழகம் தள்ளப்பட்டிருக்கிறது.

தமிழக லாரி உரிமையாளர்கள் சங்கமமும், போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும் நடத்திய பேச்சுவார்த்தை எவ்வித பலனுமில்லாமல் தோல்வி அடைந்தது. தமிழக அரசு பெட்ரோல், டீசல் மீது விதித்த மதிப்புக்கூட்டு வரியை திரும்ப பெறாததே பேச்சுவார்த்தை தோல்விக்கு காரணமாகும். ஏற்கனவே மத்திய அரசின் கலால் வரி உயர்வால் பாதிக்கப்பட்ட லாரி உரிமையாளர்கள், தமிழகத்தில் மதிப்பு கூட்டுவரி உயர்வால் மீளமுடியாத சுமையை ஏற்கவேண்டிய நிலைக்கு ஆளாக்கபட்டிருக்கிறார்கள். இதனால் லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாக மாறியிருக்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால் தான் லாரிகள் வேலை நிறுத்தம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல காவேரி நடுவர்மன்ற தீர்ப்புக்கு எதிராக பவானி ஆற்றின் குறுக்கே ஆறு தடுப்பணைகள் கட்டுகிற பணிகளை எதிர்த்து விவசாயிகள் கோவையில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடத்தியுள்ளனர். காவேரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் கூட்டமைப்பு தமிழகத்தில் ஏப்ரல் 3ம் தேதி வேலைநிறுத்தம் நடைபெறும் என்று அறிவித்துள்ளது. இதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஆதரித்து பங்கேற்ப்பதென முடிவுசெய்துள்ளது. நெடுவாசல் போராட்டக்காரர்களுக்கு மத்திய பா.ஜ.க. அரசு வழங்கிய வாக்குறுதியை மீறி மீண்டும் ஹைட்ரோ-கார்பன் திட்டம் செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பிற்கு எதிராக தமிழகத்தின் பல பகுதிகளில் போராட்டம் வெடித்துள்ளது. கடந்த சில தினங்களாக தமிழகமே போராட்ட களமாக மாறியுள்ளது.

எல்லாற்றுக்கும் மேலாக தலைநகர் தில்லியில் தமிழக விவசாயிகள் கடந்த 16 நாட்களாக இரவு பகல் பாராமல் ஜந்தர் மந்தர் சாலையில் அரை நிர்வாண கோலத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இத்தகைய போராட்டங்கள் குறித்து மத்திய பா.ஜ.க. அரசோ, மாநில ஆ.தி.மு.க. அரசோ கண்டுகொண்டதாக தெரியவில்லை. இத்தகைய மக்கள் விரோத போக்கை கைவிட்டு போராட்டகாரர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி பிரச்சினைக்கு தீர்வுகாணவேண்டுமென மத்திய மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *