தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் அறிக்கை

தமிழகத்தில் பா.ஜ.க.வை காலூன்ற வைப்பதற்கு எடுக்கப்பட்டு வருகிற பகீரத முயற்சிகளுக்கு பலனில்லாமல் போய்க் கொண்டிருப்பதால் எச். ராஜாவை போன்றவர்கள் ஆத்திரத்தில் காழ்ப்புணர்ச்சியோடு பேசி வருகின்றனர். நேற்று பட்டுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த எச். ராஜா விவசாயிகள் பிரச்சினை குறித்து கேள்வி கேட்டதற்கு உரிய பதிலை வழங்குவதற்கு வக்கற்ற நிலையில் த்திரிகையாளர்களையே தேசத் துரோகிகள் என்று சாடியிருக்கிறார். தமிழக ஊடகத்தினர் நரேந்திர மோடியை தொடர்ந்து சிறுமைப்படுத்துவதாகவும் ஆத்திரம் பொங்க கூறியிருக்கிறார். மேலும் தேவையில்லாமல் அன்னை சோனியா காந்தியை இழிவான வார்த்தைகளை பயன்படுத்தி அர்ச்சனை செய்திருக்கிறார். தம் மீது பிரதமர் பதவி திணிக்கப்பட்ட போது அதை மறுதலித்தவர் அன்னை சோனியா காந்தி. நரேந்திர மோடியைப் போல பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களான எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்றவர்களை புறந்தள்ளிவிட்டு பிரதமர் நாற்காலியை அபகரித்தவர் அல்ல அன்னை சோனியா காந்தி. மேலும் அன்னை சோனியா காந்தி அவர்களைப் பற்றி குறிப்பிடும் போது இத்தாலி நாட்டைச் சேர்ந்த அந்நியர் என்று குறிப்பிடுகிறார். இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்காக தமது உயிரையே தியாகம் செய்த அன்னை இந்திராவின் அன்பு மருமகளான அன்னை சோனியாவின் தேசப்பற்று விடுதலைக்காக துரும்பைக் கூட எடுத்துப் போடாத பாரதிய ஜனதா கட்சியினருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதேபோல, பயங்கரவாதத்திற்கு தமது கணவர் ராஜீவ்காந்தியை பலிகொடுத்தவர் அன்னை சோனியா காந்தி. இத்தகைய அரும்பெரும் தியாகங்களை செய்த தியாகத் தலைவி அன்னை சோனியா காந்தியைப் பற்றி விமர்சிப்பதற்கு பா.ஜ.க.வில் எவருக்கும் அருகதையில்லை.

நீண்டகாலமாக தமிழக அரசியலில் அதிகப் பிரசங்கித்தனமாக காங்கிரஸ் தலைவர்களையும், தந்தை பெரியார் போன்ற சமூக சீர்திருத்தவாதிகளையும் நாக்கில் நரம்பின்றி நரகல் நடையில் எச். ராஜா தொடர்ந்து பேசி வருகிறார். இவரது பேச்சை எதிர்த்து தமிழகத்தில் பல போராட்டங்கள் வெடித்துள்ளன. இத்தகைய எதிர்ப்புகளுக்குப் பிறகும் தன்னை திருத்திக் கொள்ளாமல் இந்தியாவை ஆளுகிற கட்சி என்கிற ஆணவத்தில் தொடர்ந்து அன்னை சோனியா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களைப்

பற்றி இழிவாக கொக்கரித்துக் கொண்டிருக்கிறார். இந்தியாவின் ஆளும் கட்சி என்கிற மமதையில் நாலாந்திர அரசியல்வாதியைப் போல பேசி வருகிற எச். ராஜாவை 55 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட இந்திய தேசிய காங்கிரசின் சார்பில் எச்சரிக்க விரும்புகிறோம். இத்தகைய பேச்சுக்களை உடனடியாக அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும். அத்துமீறி பேசி வருகிற இவரை அகில இந்திய பா.ஜ.க. அடக்கி வைக்க வேண்டும்.

லட்சோபலட்சம் தொண்டர்களின் அன்பையும், ஆதரவையும் பெற்ற அன்னை சோனியா காந்தி அவர்களை இழிவாக, அநாகரீகமான முறையில் பேசிய எச். ராஜாவை அகில இந்திய பா.ஜ.க. தலைமை கண்டித்திருக்க வேண்டும். அப்படி கண்டிக்காமல் ஆணவப் போக்குடன் இருக்கிற பாரதிய ஜனதா தலைமைக்கு எதிராக தமிழகத்திலுள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் மற்றும் இளைஞர் காங்கிரஸ், மகிளா காங்கிரஸ், எஸ்.சி.துறை, சிறுபான்மைத்துறை, மாணவர் காங்கிரஸ் என அனைத்து முன்னணி அமைப்புகளும் ஒருங்கிணைந்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தும்படி கேட்டுக் கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *