தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் அறிக்கை

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை, காவிரி நடுவர்மன்ற தீர்ப்பின்படி வழங்க வேண்டிய நீரை கர்நாடக அரசு வழங்காததால் தமிழகமே வறட்சியின் கோரப்பிடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது. வடகிழக்கு பருவமழை காலத்தில் சராசரியாக 440 மி.மீட்டர் கிடைக்கப் பெறுவது வழக்கம். கடந்த ஆண்டு 169.3 மி.மீட்டர் மழை மட்டுமே கிடைத்தது. இதனால் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் 60 சதவீதத்திற்கும் குறைவாகவே மழை பெய்திருக்கிறது. 1876-க்கு பிறகு இத்தகைய குறைவான வடகிழக்கு பருவமழை இப்போதுதான் இந்தளவிற்கு குறைந்துள்ளது.
அதேபோல, காவிரி நடுவர்மன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு 179 டி.எம்.சி. வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கர்நாடக அரசு வழங்கியதோ வெறும் 66.60 டி.எம்.சி. தான். இதனால் காவிரி டெல்டா பகுதியில் தண்ணீரின்றி பயிர்கள் கருகி 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துக் கொள்ள வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியை எதிர்கொள்ள அ.தி.மு.க. அரசு நரேந்திர மோடி அரசிடம் ரூபாய் 39 ஆயிரம் கோடி வறட்சி நிவாரணம் கேட்டது. ஆனால் மத்திய பா.ஜ.க. அரசோ ரூபாய் 1,748 கோடி தான் ஒதுக்கியுள்ளது. இத்தொகையின் மூலம் தமிழத்தில் தற்போது நிலவுகிற வரலாறு காணாத வறட்சிக்கு எந்த வகையிலும் நிவாரணம் வழங்க முடியாது.

தமிழகத்தில் வாழ்கிற விவசாயிகளின் வாழ்வாதாரமே கேள்விக்குறியானதையொட்டி, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 15 நாட்களாக தில்லி ஜந்தர்மந்தரில் விவசாய சங்கங்களின் தலைவர் வி. அய்யாக்கண்ணு தலைமையில் இரவு-பகல் பாராமல் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதேபோல, தேசிய, தனியார் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்வது, வறட்சி நிவாரணம் வழங்குவதில் சிறு, குறு, பெரு விவசாயிகள் என வித்தியாசம் காட்டாமல் ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 25 ஆயிரம் வீதம் அனைவருக்கும் வறட்சி நிவாரணம் வழங்குவது, விவசாய தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்குவது, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக் கோருதல், மீனவர் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தமிழக விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் ஏப்ரல் 3 ஆம் தேதி வேலை நிறுத்தம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழகத்தின் நலனுக்கு எதிராக மத்திய நரேந்திர மோடி அரசு வஞ்சகப் போக்குடன் செயல்பட்டு வருவதை கண்டிக்கிற வகையில் ஏப்ரல் 3 ஆம் தேதி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் மாவட்ட, வட்டார, நகர, பேரூர் காங்கிரஸ் கமிட்டிகள் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதேநாளில் தமிழக விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு வேலை நிறுத்தம் அறிவித்திருப்பதால் அதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் ஆதரவளிப்பதோடு, இப்போராட்டத்தில் பங்கேற்கிற வகையில் காங்கிரஸ் கட்சியின் கண்டன ஆர்ப்பாட்டம் 234 தொகுதிகளிலும் ஏப்ரல் 5 ஆம் தேதி நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *