தமிழ்நாடு சில ஆண்டுகாலமாக வளர்ச்சிப் பாதையிலிருந்து விலகி, மிகப்பெரிய பின்னடைவை சந்தித்து வருகிறது. தமிழக ஆட்சியாளர்களுக்கு தொலைநோக்குத் திட்டம் 2023 என்கிற ஆவனத்தை வெளியிட முடிந்ததே தவிர, அந்த இலக்கை அடைவதற்கான எந்த முகாந்திரமும் இல்லாத நிலையில் ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சி தடைப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படுகிற நிதிநிலை அறிக்கைகள் தற்காலிகமாக நிலைமையை சமாளிக்கிற நிலையில் இருக்கிறதேயொழிய தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வதற்கான எந்த அறிகுறியும் இல்லை. தமிழக அரசின் பொருளாதார நிலை ஆண்டுக்கு ஆண்டு படு பாதாளத்தை நோக்கி வேகமாக சென்று கொண்டிருப்பதே இத்தகைய அவலநிலைக்கு காரணமாகும்.
தனி மனிதனோ, அரசோ தங்களது பொருளாதார கட்டமைப்பை வலிமையாக வைத்துக் கொள்ளவில்லையெனில் எதையும் சாதிக்க முடியாது. 2014-15 இல் தமிழக அரசின் கடன் ரூபாய் 1 லட்சத்து 79 ஆயிரம் கோடியிலிருந்து 2017-18 இல் ரூபாய் 3 லட்சத்து 14 ஆயிரம் கோடியாக உயர்ந்திருக்கிறது. மேலும் தமிழக அரசின் வரி வருவாயும் குறைந்து வருகிறது. அதேபோல, தமிழக அரசின் நிதி பற்றாக்குறை, வருவாய் பற்றாக்குறைஆண்டுக்கு ஆண்டு கூடி வருவது குறித்து யாரும் கவலைப்படாமல் இருக்க முடியாது. இத்தகைய பொருளாதார பின்னணியில் குட்டிக்கரனம் போட்டாலும் அ.தி.மு.க. ஆட்சியாளர்களால் தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல முடியாது. ஏனெனில் கைப் புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை.
தமிழகத்தின் நிதிநிலைமை அவலநிலைக்கு சென்றுக் கொண்டிருக்கும் போது மத்திய அரசின் பங்களிப்பும் ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது. மத்திய வரிகளில் 2015-16 இல் மற்ற மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட பங்கு கிட்டத்தட்ட 46 சதவீதமாக இருக்கிறது. ஆனால் தமிழகத்திற்கு வழங்கப்பட்ட பங்கு 20.98 சதவீதமாக குறைந்து இருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. மத்திய வரிகளில் மாநிலத்தின் பங்குகளை 2014-15 மற்றும் 2015-16 ஆம் ஆண்டுகளை ஒப்பிடுகிற போது சத்தீஷ்கர் மாநிலத்திற்கு வரிகளின் பங்கு 69.92 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. அதேபோல, மகாராஷ்டிரா மாநிலத்தின் பங்கு 41.66 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. ஆனால் தமிழகத்தின் பங்கு 2.98 சதவீதம் தான் உயர்ந்திருக்கிறது.
தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டால் நீர் பற்றாக்குறை மாநிலமாகும். மழை பெய்தால் தான் விவசாயம் நடக்கும். இந்நிலையில் தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பொய்த்து சாகுபடி செய்த பயிர்களெல்லாம் கருகி, கடன் தொல்லையால் மனஉளைச்சல் ஏற்பட்டு தமிழகத்தில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் விஷம் அருந்தி தற்கொலை செய்துக் கொண்டுள்ளனர். தற்கொலை செய்துக் கொண்டவர்கள் 17 பேர் தான் என்று அடிக்கடி கூறுவதில் அதீத ஆர்வம் காட்டிய தமிழக ஆட்சியாளர்கள் மற்ற விவசாயிகளின் தற்கொலை பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாத கல் நெஞ்சக்காரர்களாக மாறியது ஜனநாயகத்தில் நிகழ்ந்த மிகப்பெரிய கொடுமையாகும்.
மத்திய பா.ஜ.க. அரசிடம் கடந்த 2015 டிசம்பரில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் ஏற்பட்ட பாதிப்பிற்கு நிவாரணமாக ரூபாய் 25 ஆயிரத்து 912 கோடியும், வார்தா புயலினால் ஏற்பட்ட பாதிப்பிற்காக ரூபாய் 22 ஆயிரத்து 573 கோடியும் கேட்கப்பட்டது. அதேபோல, தமிழகமே வறட்சி மாநிலமாக அறிவிக்கப்பட்டதையொட்டி நிவாரணத் தொகையாக ரூபாய் 39 ஆயிரத்து 565 கோடி பிரதமரை நேரில் சந்தித்து தமிழக முதலமைச்சர் கேட்டிருக்கிறார். ஆக மொத்தம் தமிழக அரசு கேட்டது ரூபாய் 88 ஆயிரத்து 50 கோடி. ஆனால் தமிழக அரசிற்கு ஏற்கனவே வழங்கியது 1940 கோடி. தற்போது மத்திய பா.ஜ.க. அரசு வழங்கியுள்ளது ரூபாய் 2 ஆயிரத்து 15 கோடி மட்டுமே. தமிழக அரசு அதிகமாக நிதி கேட்டதால் குறைத்து வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசின் நிதி குறைப்புக்கு தமிழக பா.ஜ.க. நியாயம் பேசுகிறது. இதைவிட தமிழர் விரோத போக்கு வேறு எதுவும் இருக்க முடியாது.
இதுகுறித்து கடும் கண்டனத்தை அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் தெரிவிக்க தயங்குவதில் உள்ள ரகசியத்தை நம்மாலே புரிந்து கொள்ள முடியவில்லை. தமிழ்நாட்டு நலனுக்கு எதிராக வஞ்சிக்கும் நோக்கோடு மத்திய பா.ஜ.க. அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையோடு கொடூரமாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கிற அ.தி.மு.க. தட்டிக் கேட்பதில் என்ன தயக்கம் ? ஏன் இந்த தடுமாற்றம் ? இத்தகைய அச்சத்தின் காரணமாகவே தமிழ்நாட்டின் உரிமைகள் தொடர்ந்து மத்திய அரசால் பறிக்கப்பட்டு கபளீகரம் செய்யப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு முழுவதும் வரலாறு காணாத வறட்சியும், கடும் குடிநீர் பஞ்சமும் நிலவி வருகிறது. இதை எதிர்கொள்வதற்கு மத்திய அரசு போதிய நிதி வழங்காத நிலையில் தமிழக ஆட்சியாளர்கள் உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியப் போக்குடன் செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய மோடி அரசின் வஞ்சகப் போக்கை கண்டிக்கிற அதே வேளையில் இதை எதிர்த்து உரிமைக் குரல் எழுப்ப அஞ்சுகிற அ.தி.மு.க. ஆட்சியாளர்களுக்கு எதிராக கண்டனக் குரல் எழுப்புவது மிகமிக அவசியம் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி கருதுகிறது. இச்சூழலில் மத்திய – மாநில அரசுகளின் தமிழக மக்களின் நலனுக்கு எதிரான போக்கை கண்டிக்கிற வகையிலும், தமிழகத்திற்கு கூடுதல் நிதி வழங்க வலியுறுத்தியும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பாக தமிழகத்திலுள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் ஏதாவது ஒரு இடத்தில் காங்கிரஸ் கமிட்டிகள் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஏப்ரல் 3 ஆம் தேதி திங்கட்கிழமை காலை 10 மணியளவில் நடைபெறும். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை மிகமிக எழுச்சியோடு நடத்துகிற வகையில் மாவட்ட, வட்டார, நகர, பேரூர் காங்கிரஸ் கமிட்டிகள் முன்னின்று செயல்பட வேண்டும். இதில் பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று மத்திய – மாநில அரசுகளுக்கு எதிராக கண்டனக் குரல் எழுப்பும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.


Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *