தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் அறிக்கை

இந்தியாவிலேயே சர்க்கரை உற்பத்தியில் இரண்டாவது இடத்திலிருந்த தமிழகம் ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் மத்திய – மாநில அரசுகளின் தவறான கொள்கை தான். தமிழக கரும்பு விவசாயிகள் தாங்கள் பயிரிட்ட கரும்புக்கு உரிய விலை கிடைக்காத காரணத்தினால் சாகுபடி பரப்பு குறைந்து உற்பத்தி சரிந்து வருகிறது. தமிழகத்தில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்த கரும்பிற்கு 24 தனியார் சர்க்கரை ஆலைகள் மாநில அரசு அறிவித்த விலையை கடந்த 4 ஆண்டுகளாக தரவில்லை. இதன்மூலமாக விவசாயிகளுக்கு தர வேண்டிய ரூபாய் 1850 கோடி செலுத்தாமல் நிலுவைத் தொகையாக உள்ளது. அதேபோல 18 கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் ரூபாய் 450 கோடி கரும்பு பண நிலுவைத் தொகை வைத்துள்ளனர். ஆக, மாநிலத்தில் சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகை ரூபாய் 2300 கோடியாக உயர்ந்திருக்கிறது. இதை பெற்றுத் தருவதற்கு கரும்பு விவசாயிகள் பலமுறை போராடியும் மத்திய – மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியப் போக்குடன் இருந்து வருகின்றன.

தேசியமயமாக்கப்பட்ட கூட்டுறவு வங்கிகளில் கரும்பு சாகுபடிக்கு கடன் பெற்று கரும்பு சாகுபடி செய்து சர்க்கரை ஆலைகளுக்கு அனுப்பப்பட்டு 4 ஆண்டுகளாக விவசாயிகளுக்கு தர வேண்டிய தொகையை தராமல் இருப்பதனால் ஏற்படுகிற இழப்பிற்கு யார் பொறுப்பு ? இதற்கான வட்டித் தொகையை யார் செலுத்துவது ? இச்சூழலில் தமிழகத்தில் உள்ள 5 லட்சம் கரும்பு விவசாயக் குடும்பங்கள் கடன்காரர்களாக மாறி பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். இதுகுறித்து ஆட்சியாளர்கள் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

தமிழகத்தில் கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை ரூ.2300 கோடியாக இருக்கும் போது தமிழக அரசு நிதிநிலை அறிக்கையில் ரூ.127 கோடி ஒதுக்கியிருப்பது யானைப் பசிக்கு சோளப் பொரியை போடுவது போலாகும். தமிழக அரசு அறிவித்த விலையை தர மாட்டோம் என்று தனியார் சர்க்கரை ஆலை உரிமையாளர்கள் கூறுவதை தட்டிக் கேட்பதற்கு தமிழக அரச தயங்குவது ஏன் ? இப்பிரச்சினையில் கரும்பு விவசாயிகளின் பல்வேறு பிரச்சினைகளைத் தீர்க்க தமிழக அரசு சர்க்கரை ஆலை உரிமையாளர்கள், கரும்பு விவசாயிகள் உள்ளடங்கிய முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென்று பலமுறை கோரிக்கை விடுத்திருக்கிறோம். ஆனால் ஆட்சியாளர்கள் இதுவரை செவி சாய்க்கவில்லை. இந்நிலை தொடர்ந்து நீடித்தால் தமிழக கரும்பு விவசாயிகள் ஓரணியில் திரண்டு மத்திய – மாநில அரசுகளுக்கு எதிராக கடும் போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்படும்.
எனவே, கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையை செலுத்திட மத்திய – மாநில அரசுகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *