இந்தியா ஒரு குடியரசு நாடு என 1950 ஜனவரி 26 அன்று அறிவித்தது எந்தளவுக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததோ, அந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது 1993 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 அன்று மத்திய காங்கிரஸ் அரசு இயற்றிய 73 ஆவது சட்டத் திருத்தம் ஆகும். அதன் 25 ஆம் ஆண்டு நினைவாக நாடெங்கும் இன்று பஞ்சாயத்துராஜ் தினம் கொண்டாடப்படுகிறது.

மத்திய – மாநில அரசுகளுக்கு அடுத்த நிலையில் மூன்றாவது அடுக்காக பஞ்சாயத்துராஜ் அமைப்பை உருவாக்க வேண்டுமென்பதில் அன்று பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி சில தீவர நடவடிக்கைகளை எடுத்தார். அதன் விளைவாக 1993 ஆம் ஆண்டு மத்திய காங்கிரஸ்  அரசால் கொண்டு வரப்பட்ட 73, 74 ஆவது சட்டத் திருத்தங்களுக்கு பிறகு, பஞ்சாயத்து ராஜ் அமைப்பு மறுபிறவி எடுத்தது. இந்த சட்டத் திருத்தத்தின் அடிப்படையில் புதிய பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் நாடு முழுவதும் உருவாக்கப்பட்டன. அதனடிப்படையில் தமிழகத்தில் 1993 ஆம் ஆண்டில் ஊராட்சிகள் சட்டம் நிறைவேற்றப்பட்டன.

அமரர் ராஜீவ்காந்தி கண்ட கனவின்படி பஞ்சாயத்துராஜ் அமைப்புகள் தமிழகத்தில் செயல்பட்டதா என்று கடந்த 20 ஆண்டுகளாக ஆய்வு செய்கிற போது, மிகப்பெரிய ஏமாற்றமே மிஞ்சுகிறது. மக்களுக்கு அதிகாரம் வழங்கி மக்கள் பங்கேற்கும் உள்ளாட்சி அமைப்புகளை உருவாக்க வேண்டுமென்ற நோக்கத்தில் தான் இந்திய அரசமைப்பில் 73, 74 ஆவது திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் என்பது உறுதியாக்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் மட்டும் விசித்திரமான நிலை உருவாகி வருகிறது.

தமிழக தேர்தல் ஆணையம் தமிழக அரசின் கண் பார்வைக்கேற்ப செயல்படுகிற அமைப்பாக மாறியிருப்பது உள்ளாட்சி அமைப்புகளின் தத்துவங்களுக்கு விரோதமானதாகும். 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் தேர்தல்களுக்கு 2 ஆண்டு பதவி காலத்துடன் கூடிய தேர்தல் ஆணையர் என்பது மிகமிக தவறான அணுகுமுறையாகும். தேர்தல் ஆணையருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பதவி நீட்டிப்பு செய்யும் அதிகாரம் மாநில அரசின் வசம் இருப்பதால் அதன் கட்டுப்பாட்டில் இயங்க வேண்டிய நிர்ப்பந்தம் தேர்தல் ஆணையருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையிலிருந்து பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளை விடுவிக்க வேண்டிய பொறுப்பு தமிழக அரசியல் கட்சிகளுக்கு இருக்கிறது. இதன்மூலமே உள்ளாட்சி அமைப்புகளில் சுதந்திரமான தேர்தல் நடைபெற முடியும்.

கிராம மக்களுக்கு தன்னாட்சி பெற்ற ஒரு அரசாக பஞ்சாயத்து ராஜ் உருவாக்கப்பட வேண்டும். ஏழை எளிய மக்களின் குரலை ஒலிக்கிற அமைப்பாக பஞ்சாயத்துராஜ் அமைப்பு இருக்க வேண்டும். மத்திய – மாநில அரசுகளுக்கு அடுத்து  முழுமையான அதிகாரத்தோடு சுய சார்புடன் உரிய நிதி ஆதாரத்தோடு செயல்படுகிற அமைப்பாக பஞ்சாயத்துராஜ் உருவாக்கப்பட வேண்டும்.

அத்தகைய நிலை உருவாவதை தமிழக ஆட்சியாளர்கள் தொடர்ந்து தடுத்து வருகிறார்கள். பஞ்சாயத்துராஜ் அமைப்பில் பெண்களுக்கு முதலில் 33 சதவீதமும், தற்போது 50 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளன. மேலும் ஆதிதிராவிட, பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமரர் ராஜீவ்காந்தி கண்ட கனவு தமிழக ஊராட்சி சட்டத்தின் மூலம் நிறைவேற்றப்படவில்லை என்கிற நிலையில் இன்று பஞ்சாயத்துராஜ் நாள் கொண்டாடப்படுகிறது. அவரது முதன்மை கனவான கிராம சபைகள் செயலிழந்து முடங்கிக் கிடக்கின்றன. இதேநாளில் தமிழகத்தில் புதிய பஞ்சாயத்து அமைப்புகள் பதவியேற்று செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால் அ.தி.மு.க. ஆட்சியாளர்களின்  தலையீட்டின் காரணமாக உள்ளாட்சி தேர்தல்கள் நடத்துவதில் நீதிமன்றம் தலையிட வேண்டிய அவலநிலை இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது. என்றைக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையம் முடிவு செய்வதற்கு பதிலாக ஜூலை 24 ஆம் தேதிக்குள் தேர்தல் நடத்த வேண்டுமென்று உயர்நீதிமன்றம் நிர்ப்பந்திக்கிற அளவுக்கு தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் நிலை மிகமிக பரிதாபகரமாக உள்ளது.

தமிழகத்தில் உடனடியாக தேர்தலை நடத்தவும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு முழுமையான அதிகாரத்தை வழங்கிடவும் கோரி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்கள் முன்பு பஞ்சாயத்துராஜ் சங்கதன் அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் இன்று நடைபெறுகிறது. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த ஆர்ப்பாட்டத்தின் நோக்கமாகும்.

பஞ்சாயத்து, நகராட்சிகளுக்கான தேர்தலில் தற்போதுள்ள நடைமுறையை மாற்றி நேரிடையாக மக்களால் தேர்ந்தெடுக்கிற முறையை உருவாக்க வேண்டும். இதன்மூலம் தற்போதுள்ள முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை கடத்தி, குதிரைப்பேரம் நடத்தி உள்ளாட்சி அமைப்புகளின் தலைமை பொறுப்புகளை கைப்பற்றுகிற ஜனநாயக விரோத செயலை நிச்சயம் தடுக்க முடியும். இந்த மாற்றம் உருவாக வேண்டுமென மக்கள் ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள காங்கிரஸ் கட்சி கோருகிறது.

மக்கள் பங்கேற்கிற ஜனநாயகத்தை உறுதி செய்கிற உள்ளாட்சி அமைப்புகளில் விரைவில் நல்லாட்சி அமைந்திட சுயேட்சையான, நேர்மையான தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதை வலியுறுத்தி உறுதி செய்கிற வகையில் தமிழகம் முழுவதும் மக்கள் இயக்கம் நடத்த வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் விரும்புகிறது. இதற்கான ஆதரவை மக்களிடமிருந்து திரட்டுவது காலத்தின் கட்டாயமாகும்.


Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *