மத்தியில் பா.ஜ.க. ஆட்சியும், மாநிலத்தில் அ.தி.மு.க. ஆட்சியும் அமைந்தபிறகு மக்கள் விரோத நடவடிக்கைகள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. நதிநீர் இணைப்பு, விவசாயக் கடன்கள் தள்ளுபடி, வறட்சி நிவாரணம், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 40 நாட்களாக தலைநகர் தில்லியில் நூதனமான போராட்டங்களை விவசாயிகள் நடத்தி வருகின்றனர். ஆனால் போராடுகிற விவசாயிகளை சந்தித்து குறைகளை கேட்பதற்குக் கூட வானொலியில் மனம் திறந்து பேசுகிற நரேந்திர மோடிக்கு மனமில்லாமல் போனது மிகுந்த வேதனையைத் தருகிறது. இது கண்டனத்திற்குரியது.
தமிழகத்தில் 2015 வெள்ளப் பெருக்கினால் பாதிப்பு, 2016 இல் வார்தா புயலினால் இழப்பு, 2017 இல் வறட்சி போன்ற இயற்கை பேரிடர்களை எதிர்கொண்டு நிவாரண நடவடிக்கைகள் எடுக்க மத்திய பா.ஜ.க. அரசிடம் தமிழக அரசு கேட்ட தொகை ரூபாய் 88 ஆயிரத்து 500 கோடி. இதில் மத்திய அரசு வழங்கியதோ ரூபாய் 4 ஆயிரம் கோடி. தமிழகத்தின் கோரிக்கைகளை துச்சமென நினைத்து உதாசீனப்படுத்துகிற மத்திய பா.ஜ.க. அரசை தட்டிக் கேட்கிற துணிவு நாடாளுமன்றத்தில் 50 உறுப்பினர்களுக்கு மேல் பெற்று மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கிற அ.தி.மு.க.வுக்கு இல்லாதது ஏனோ ? தட்டிக் கேட்க என்ன தயக்கம் ? என்ன பயம் ?
காவிரி நடுவர்மன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீர் வழங்கப்படாத காரணத்தால் காவிரி டெல்டாவில் விவசாயிகள் பயிரிட்ட பயிர்கள் கருகி, நாசமானதைப் பார்த்து மன உளைச்சலால் ஒரே ஆண்டில் 400-க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்துக் கொண்ட கொடுமை நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து அ.தி.மு.க. அரசும் கவலைப்படவில்லை, மத்திய பா.ஜ.க. அரசும் கண்டுக் கொள்ளவில்லை. இவர்களது குடும்பங்களுக்கு எந்தவித நிவாரணமும் வழங்கப்படவில்லை.
தமிழக விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் பெற்ற கடனை சிறு, குறு விவசாயிகள் என்கிற பேதமின்றி தள்ளுபடி செய்ய வேண்டுமென உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. இதுகுறித்து இதுவரை தமிழக அரசு பரிசீலனை கூட செய்யாமல் உட்கட்சி சண்டையில் பலப்பரிட்சை நடத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய வேண்டுமென தலைநகர் தில்லியில் போராடுகிற விவசாயிகளுடைய கோரிக்கையை காது கொடுத்து கேட்கக் கூட மத்திய பா.ஜ.க. அமைச்சர்கள் தயாராக இல்லை. கடந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற 71 ஆயிரம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்து 4 கோடியே 30 லட்சம் விவசாயிகள் பயனடைந்ததை எவரும் மறந்திருக்க முடியாது. அதேபோல, விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்வதற்கு பா.ஜ.க.வுக்கு மனமில்லாமல் போனதைவிட விவசாயிகள் விரோத செயல் வேறு எதுவும் இருக்க முடியாது. உயர்நீதிமன்ற தீர்ப்பை மதித்து அனைத்து விவசாயிகளின் விவசாய கடன்களையும் தமிழக அரசு உடனே ரத்து செய்ய வேண்டும்.
தமிழகத்தில் கரும்புக்கு உரிய விலை கிடைக்காத காரணத்தினாலும், தனியார் சர்க்கரை ஆலைகள் நிலுவையில் வைத்துள்ள 1850 கோடி ரூபாயும், கூட்டுறவு மற்றும் பொதுத்துறை ஆலைகளில் நிலுவையாக வைத்துள்ள 450 கோடி ரூபாயும் சேர்த்து 2300 கோடி ரூபாயை வழங்காத காரணத்தால் விவசாயிகள் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகியுள்ளனர். கரும்பு சாகுபடியில் இந்தியாவிலேயே இரண்டாவது இடத்தில் இருந்த தமிழகம் இன்றைக்கு நான்காவது இடத்திற்கு தள்ளப்படுகிற அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு, கரும்பு விவசாயிகள், சர்க்கரை ஆலை உரிமையாளர்கள் அடங்கிய முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி, கரும்புக்கு உரிய விலையும், நிலுவைத் தொகையை வட்டியுடன் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. ஆனால் மத்திய – மாநில அரசுகள் கரும்பு விவசாயிகளின் நீண்டகால கோரிக்கைகளை பரிசீலிக்கக் கூட தயாராக இல்லாதது மிகுந்த கண்டனத்திற்குரியது.
மத்திய – மாநில அரசுகளால் தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர். வரலாறு காணாத வறட்சி கொடுமையால் குடிக்க தண்ணீர் கூட இல்லாமல் பரிதவித்துக் கொண்டிருக்கும் மக்கள்பிரச்சினைகளுக்கு தீர்வு காண எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் உட்கட்சி பூசலாலும், பதவி போட்டியினாலும் செயலிழந்த நிலையில் அ.தி.மு.க. அரசு முடங்கிக் கிடக்கிறது. இச்சூழலை மத்திய பா.ஜ.க. அரசு தந்திரமாக பயன்படுத்தி குறுக்கு வழியில் தமிழகத்தில் காலூன்ற பல்வேறு பகீரத முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனால் தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர் பிறந்த மண்ணில் வகுப்புவாத பாசிச போக்கு கொண்ட பா.ஜ.க. காலூன்ற முடியாது என்பதை வரலாறு அறிந்தவர்கள் நன்கு அறிவார்கள்.
வறட்சி மற்றும் காவிரி நீர் கிடைக்காத கொடுமையின் காரணமாகவும், கடன்களை ரத்து செய்யக் கோரியும் போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு மக்கள் ஆதரவை திட்டும் வகையில் வருகிற ஏப்ரல் 25 ஆம் தேதி மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடத்துவதென்று தி.மு.க. – காங்கிரஸ் பங்கேற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இப்போராட்டத்திற்கான காரணங்களை மக்களுக்கு விளக்கிடும் வகையில் சென்னையில் ஏப்ரல் 22 ஆம் தேதி மாலை மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்திற்கு பெருமளவில் சென்னை மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும். அதேபோல, ஏப்ரல் 25 ஆம் தேதி நடக்கிற மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் வெற்றிகரமாக நடத்துவதற்கு அனைத்து வகைகளிலும் தமிழக காங்கிரஸ் கட்சியினர் துணை நிற்க வேண்டுமென அன்போடு வேண்டுகிறேன்.
மத்திய – மாநில அரசுகளுக்கு எதிராக முழு அடைப்பு போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவதன் மூலம் போராடுகிற விவசாயிகளின் பின்னால் தமிழகமே அணிதிரண்டு நிற்கிறது என்பதை ஆட்சியாளர்களுக்கு உணர்த்துவோம். இப்போராட்டம் மக்கள் போராட்டமாய் மலர்ந்து வெல்லட்டும்.


Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *