தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு.திருநாவுக்கரசர் அறிக்கை – 01.02.2017

 

கடந்த நவம்பர் 8 ஆம் தேதி பிரதமர் மோடி அறிவித்த பணமதிப்பு நீக்க நடவடிக்கையினால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து பா.ஜ.க.வின் 2017-18 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மீட்டெடுக்கும் என்ற எதிர்பார்ப்பு மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளாகியுள்ளது. 2016-17 இல் வளர்ச்சி விகிதம் 7.1 சதவீதம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பொருளாதார ஆய்வறிக்கை வளர்ச்சி விகிதம் 6.5 சதவீதமாக குறையும் என்று கூறியிருக்கிறது. இதன்மூலம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ரூபாய் 1.5 லட்சம் கோடி குறைவதற்கான சூழ்நிலை உருவாகியுள்ளது. இதற்குக் காரணம் மோடியின் பணமதிப்பு நீக்க நடவடிக்கைதான்.

60 ஆண்டுகளுக்கு மேலாக ரயில்வே துறைக்கு தனியாக நிதிநிலை அறிக்கை சமர்ப்பித்த நிலையை நீக்கிவிட்டு ஒரே நிதிநிலை அறிக்கை தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ரயில்வே துறை தனது முக்கியத்துவத்தை இழந்துள்ளது. பொதுத்துறையில் முக்கிய பங்கு வகிக்கும் ரயில்வே துறைக்கு மத்திய அரசு ரூபாய் 1 லட்சத்து 31 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியிருந்தாலும், இதில் மத்திய அரசின் பங்கு ரூபாய் 51 ஆயிரம் கோடி தான். புதிய ரயில்களுக்கான அறிவிப்போ, புதிய ரயில் பாதை அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடோ இல்லாமல் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது.

நிதியமைச்சர் அருண் ஜெட்லி சமர்ப்பித்த நிதிநிலை அறிக்கை டிஜிட்டல் பொருளாதாரத்தைப் பற்றி நிறைய கூறப்பட்டிருக்கிறது. ஆனால் இந்தியாவில் இதற்கான எந்த கட்டமைப்பு வசதிகளும் செய்யப்படாமல் இப்படி பேசுவது விந்தையாக இருக்கிறது. தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு ரூபாய் 48 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ரூபாய் 38 ஆயிரத்து 500 கோடியும், பின்னர் ரூ.8,500 கோடியும் ஆக மொத்தம் ரூபாய் 47 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. கடந்த ஆண்டை விட ஆயிரம் கோடி ரூபாய் தான் கூடுதலாக இத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கொண்டு வரப்பட்டு, கிராமப்புற பொருளாதாரத்தை மாற்றியமைத்த இத்திட்டத்திற்கு பா.ஜ.க. அரசு காட்டுகிற அலட்சியப் போக்கைத் தான் இந்த குறைவான நிதி ஒதுக்கீடு வெளிப்படுத்துகிறது.
சேவைத் துறை தான் நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெரும்பங்கு வகிக்கிறது. 2014-15 இல் 10.3 சதவீதமாக இருந்த வளர்ச்சி 2016-17 இல் 8.8 சதவீதமாக குறைந்துள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் பா.ஜ.க. கூறியிருந்தது. 2016 நிதியாண்டில் 1 லட்சத்து 50 ஆயிரம் பேருக்குத் தான் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது. இது சமுதாயத்தில் வேலைவாய்ப்பின்மை பெருகி மிகப்பெரிய பாதிப்புக்கு நமது நாடு தள்ளப்படும் என்கிற எச்சரிக்கையை பொருளாதார வல்லுநர்கள் விடுத்திருப்பதை நரேந்திர மோடி பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை.

கடந்த 2013-14 இல் விவசாயிகள் கடன் 8 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்டது. அது தற்போது 2017-18 இல் ரூபாய் 10 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வறட்சி காரணமாகவும், கடன் தொல்லையினாலும் விவசாயிகள் தற்கொலை தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சி தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கிய கடனில் ரூபாய் 70 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்தது. அதைப்போல, விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வதற்கான எந்த அறிவிப்பையும் பா.ஜ.க. நிதிநிலை அறிக்கையில் இல்லாதது மிகுந்த கண்டனத்திற்குரியது.

கடந்த 32 மாதங்களாக ஆட்சி செய்கிற நரேந்திர மோடி ஆட்சியில் எந்த சாதனையும் குறிப்பிட்டு சொல்ல முடியாத நிலையில், 2017-18 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை வளர்ச்சியை நோக்கமாக இல்லாமல் வார்த்தை ஜாலங்களால் தயாரிக்கப்பட்டதாகவே உள்ளது. இதனால் நாட்டு மக்களுக்கு எந்த வகையிலும், எந்த பயனையும் தரப்போவதில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *