தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்விலிருந்து விலக்கு அளிக்கும் வகையில் இரு மசோதாக்கள் தமிழக சட்டமன்றத்தில் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுகளை மே 7, 2017 முதல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யும்படி மத்திய இடைநிலை கல்வி வாரியத்தை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. தமிழ்நாடு மசோதா குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டு 10 நாட்கள் ஆகியும் எந்த முடிவும் எடுக்கப்படாமல் நிலுவையில் உள்ளது. தமிழக ஆட்சியாளர்களும் அதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. தமிழகத்தில் நடைபெறுகிற அதிகாரப்போட்டியின் காரணமாக செயல்படுகிற அரசு இல்லாத நிலையில் தமிழகத்தின் உரிமைகள் பறிக்கப்படுகிற நிலைமை இன்றைக்கு ஏற்பட்டுள்ளது.

கடந்த 2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய சட்டத்தின் மூலம் நுழைவுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாநில கல்வி வாரியத்தின் பாடத் திட்டத்தின்படி 12 ஆம் வகுப்பில் மாணவர்கள் பெறுகிற மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை இருக்க வேண்டுமென முடிவு செய்யப்பட்டது. கடந்த 2013 உச்சநீதிமன்ற தீர்ப்பிக்குப் பிறகு நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட நிலையில் தமிழக அரசு கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் கடந்த ஆண்டு மத்திய அரசின் அவசரச் சட்டத்தின் மூலம் விலக்கு அளிக்கப்பட்டது. தற்போது மீண்டும் நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்படுவதை தடுக்க தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக வைக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து மத்திய பா.ஜ.க. அரசு கடுகளவு கூட கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. மாறாக தமிழக பா.ஜ.க.வினர் தமிழக மக்கள் மீது நுழைவுத் தேர்வை திணிப்பதை நியாயப்படுத்தி பேசி வருகின்றனர்.

தற்போது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிற வகையில் 2018 ஆம் ஆண்டு முதல் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு அடிப்படையில் பொறியியல் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை இருக்க வேண்டுமென அகில இந்திய தொழில்நுட்பக் குழுவுக்கு நரேந்திர மோடி அரசு நேற்று ஆணை பிறப்பித்திருக்கிறது தமிழகத்தில் உள்ள 24 அரசு மருத்துவ கல்லூரிகளில் 3450 இடங்களும், தனியார் மருத்துவ கல்லூரிகளில் 3060 இடங்களும் ஆக, 6510 இடங்கள் உள்ளன. அதேபோல தமிழகத்தில் உள்ள 552 பொறியியல் கல்லூரிகளில் 1,52,000 மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் மத்திய இடைநிலை கல்வி வாரிய (ஊடீளுநு) பாடத்திட்டத்தின்படி 13625 மாணவர்கள் மட்டுமே படிக்கிறார்கள். ஆனால் மாநில பாடத்திட்டத்தின்படி 8 லட்சத்து 33 ஆயிரத்து 682 மாணவர்கள் படிக்கிறார்கள். கிட்டத்தட்ட 60 மடங்கு அதிகமாக மாநில பாடத்திட்டத்தின்கீழ் படித்து வருகிறார்கள்.
தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு மத்திய இடைநிலை கல்வி வாரிய பாடத் திட்டத்தின்படி நடைபெறுவதால் மாநில பாடத்திட்டத்தின்படி படித்த 8 லட்சம் மாணவர்களும் பாதிக்கப்படுவார்கள். இதில் பெரும்பாலானவர்கள் கிராமப்புறத்தைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட ஆதிதிராவிட, பின்தங்கிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். மத்திய பாடத்திட்டத்திற்கும், மாநில பாடத்திட்டத்திற்கும் அடிப்படையில் வேறுபாடுகள் இருப்பதால் இரண்டையும் சமநிலைத் தன்மையுடன் பார்ப்பது சமூகநீதிக்கு எதிரானது. நகர்ப்புறங்களில் படிக்கிற மாணவர்கள் அதிக கட்டணம் வசூலிக்கிற பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து தங்களை தயார்படுத்திக் கொள்கிற வாய்ப்பு நிறைய இருக்கிறது. அந்த வாய்ப்பு கிராமப்புற மாணவர்களுக்கு இல்லாத நிலையில் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாக வேண்டிய நிலை ஏற்படும்.

தமிழகத்தில் படித்து வருகிற எட்டு லட்சம் மாணவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகி உள்ள நிலையில் ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் கொண்டு வருவதற்கு எத்தகைய தீவிர முயற்சிகளை மேற்கொண்டதோ, அதே அளவுக்கான முயற்சிகளை போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். குடியரசுத் தலைவரின் ஒப்புதலை விரைவாக பெறுவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்கும்படி பிரதமர் நரேந்திர மோடியை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். தமிழகத்தில் செயல்படுகிற ஆட்சி இல்லாத அசாதாரண சூழலில் தமிழக மாணவர்கள் வஞ்சிக்கப்படுவதை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கைகளை மத்திய – மாநில அரசுகள் எடுக்க வேண்டும்.


Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *