தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் அறிக்கை.

 

சில பத்திரிக்கைகளிலும், சில தொலைக் காட்சிகளிலும், சமூக வலைதளங்களிலும் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் திரு.ராகுல் காந்தி அவர்களின் இல்லத்தில் நேற்று (10.2.17) காலை நடைபெற்ற தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னனித் தலைவர்களோடு நடைபெற்ற சந்திப்பு குறித்து வெளிவந்துள்ள செய்திகள் குறித்து கீழ்கண்ட விளக்கத்தை பொது மக்கள் பார்வைக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

திரு.ராகுல்காந்தி அவர்கள் முன்னிலையில் கலந்து கொண்ட தலைவர்கள் இடையில் எந்த கருத்து மோதல்களும் நிகழவில்லை, தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் சூழ்நிலைகள் குறித்து திரு.ராகுல்காந்தி அவர்கள் அனைவரிடமும் கேட்டறிந்தார். இக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் எட்டுப் பேரும் திருமதி.சசிகலா அவர்கள் முதல்வராக வாக்களிக்க வேண்டும் என நான் வற்புறுத்தியதாகவும், இக் கூட்டத்தில் கலந்து கொண்ட சிலர் இதை எதிர்த்து பேசியதாகவும், இக் கருத்து பரிமாற்றங்களில் நான் தனிமைப்படுத்தப்பட்டதாகவும்,விஷமத்தனமான, இட்டுக்கட்டிய உண்மைக்கு மாறான செய்தியை வேண்டுமென்றே யாரோ, ஒரே மாதிரி எல்லா பத்திரிக்கைகளுக்கும் செய்தி தந்துள்ளார்கள்.

இக் கூட்டத்தில் பேசப்பட்டதாக சொல்லப்படும் கருத்துக்கள் அவர் அவர்கள் பெயரை குறிப்பிட்டு கூடவே இருந்து பார்த்ததைப் போலவும், நேரில் கேட்டறிந்ததைப் போலவும் அடைப்பு குறிப்புகள் போட்டு செய்திகள் வெளிவந்துள்ளது வருத்தமளிக்கிறது, உண்மைக்கு மாறானது. இக் கூட்டத்தில் நடந்த சம்பவங்கள் உரையாடல்கள் திரித்து, சுயநலத்தோடு தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளவும், விளம்பரப் படுத்திக் கொள்ளவும் காங்கிரஸ் கட்சி தொண்டர்களையும், தோழமைக் கட்சியினரையும், பொது மக்களையும் குழப்பி ஆதாயம் தேட இச்செய்தி வெளியிடப்பட்டுள்ளது என்பது தான் உண்மையாகும்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உட்கட்சி விவகாரங்களில் காங்கிரஸ் தலையிடாது என முன்பிருந்தே கூறி வருகிறேன். முதலமைச்சர் சம்மந்தப்பட்ட விஷயத்தில் அரசியல் சட்டப்படியும், சட்டமன்ற விதிகளின் படியும், செயல்பட்டு காபந்து சர்க்காருக்கு பதிலாக முழுமையான அரசையும், முதலமைச்சரையும் தேர்வு செய்ய மேதகு ஆளுநர் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். தமிழ்நாடு அரசு விஷயத்தில் மத்திய பா.ஜ.க. அரசு தலையிட்டு சுய அரசியல் லாபத்திற்காக குழப்பம் ஏற்படுத்தக் கூடாது. யார் முதலைமச்சராக வரவேண்டும் என்பது அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களின் விருப்பம் – முடிவு. என்னையோ,காங்கிரஸையோ பொறுத்த வரை இவர்தான் முதலமைச்சராக வரவேண்டுமென்று எந்த விருப்பு வெறுப்பும் கிடையாது.

மக்கள் மனநிலை, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு, அரசியல் சட்டம் , சட்டமன்ற – நாடாளுமன்ற விதிமுறைகள் இவற்றை பின்பற்றி மேதகு ஆளுநர் செயல்பட வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *