தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 20.9.2015

கடமையுணர்வும், நேர்மையுமிக்க திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா காவல்துறையின் உயர் அதிகாரிகள் கொடுத்த தொல்லைகள் காரணமாக தற்கொலை செய்து கொண்ட செய்தி தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. தற்கொலை செய்து கொண்ட விஷ்ணுபிரியா எழுதியதாகக் கூறப்படுகிற 7 பக்க கடிதத்தில் தமது மன உளைச்சலை கோடிட்டுக் காட்டியிருக்கிறார். இக்கடிதத்தை அவர்தான் எழுதினாரா என்கிற சந்தேகமும் எழுந்திருக்கிறது. இதில் பல மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

விஷ்ணுபிரியா தற்கொலைக்கான காரணங்களாக அவரது தோழி கீழக்கரை டி.எஸ்.பி. மகேஸ்வரி அளித்த பேட்டியின் மூலமாக தமிழக காவல்துறையை தோலுரித்துக் காட்டி அம்பலப்படுத்தியிருக்கிறார். பணியில் இருக்கும் ஒருவர் இத்தகைய துணிச்சலோடு வாக்குமூலம் கூறியதற்காக அவரை பாரட்ட கடமைப்பட்டுள்ளோம். மேலும், அவர் அளித்தப் பேட்டியில், பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக விஷ்ணுபிரியா சந்தித்த மனஉளைச்சலைப் பற்றி கண்ணீர் மல்க பேட்டியளித்திருக்கிறார். அதில், ‘உயர் அதிகாரிகளிடமிருந்து நெருக்கடி அதிகமாக இருப்பதாகவும், கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யாமல், போலி குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்யும்படியும் கொடுத்த அழுத்தத்தை’ பகிரங்கமாக வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனால், அத்தகைய உண்மைக்கு புறம்பான சட்டவிரோத செயலை செய்ய விஷ்ணுபிரியா உடன்படாத நிலையில் மரியாதைக்குறைவாக ஒருமையில் உயர் அதிகாரிகள் திட்டித் தீர்த்ததாகவும், தொடர்ந்து தொல்லைகள் கொடுத்ததாகவும் டி.எஸ்.பி. மகேஸ்வரி படம் பிடித்துக் காட்டியுள்ளார். இதற்கு பிறகும் சிபிசிஐடி விசாரணையில் உண்மைக் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்ற நம்பிக்கை எவருக்கும் இருக்க முடியாது.

பொறியியல் மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கை, முதலில் தற்கொலை வழக்காகத் தான் காவல்துறை பதிவு செய்தது. பிறகு கடும் எதிர்ப்பு வந்த காரணத்தால் காதல் விவகாரம் சம்பந்தப்பட்ட கொலை வழக்காக பதிவு செய்தது. இந்த வழக்கில் தொடக்கத்தில் இருந்தே குற்றவாளிகளை பாதுகாக்க காவல்துறை செயல்பட்டு வந்ததற்கு எதிராக இருந்த காரணத்தினால் தான் இன்றைக்கு விஷ்ணுபிரியா தற்கொலை நிகழந்திருக்கிறது. விஷ்ணுபிரியாவின் மரணம் மர்மம் நிறைந்தது.

நியாயமான விசாரணை நடைபெற்றால் ஒழிய உண்மைகள் வெளியே வராது. தமிழக அரசு அறிவித்துள்ள சிபிசிஐடி விசாரணை உண்மைகளை வெளிக்கொண்டு வராது. அதற்கு மாறாக, குற்றவாளிகள் பாதுகாக்கப்பட நிறைய வாய்ப்பு இருக்கிறது. அதனால் தான் விஷ்ணுபிரியாவின் நெருங்கிய தோழி டி.எஸ்.பி. மகேஸ்வரி மற்றும் விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி ஆகியோர் விடுத்தக் கோரிக்கைக்கு ஏற்ப, இவ்வழக்கை மத்திய புலனாய்வுத் துறை விசாரித்தால் தான் உண்மைகள் வெளிவரும்.

தமிழகத்தில் நேர்மையான அதிகாரிகள் சந்திக்கின்ற பல்வேறு பிரச்சனைகளால் மனஉளைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்து கொள்கிற முடிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திருநெல்வேலி மாவட்ட செயற்பொறியாளர் முத்துக்குமாரசாமி, அன்றைய விவசாயத்துறை அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் லஞ்ச வேட்டைக்கு துணைபோக மறுத்தக் காரணத்தால் தற்கொலை செய்து கொள்ளவேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டது. இதேபோல பல அதிகாரிகள் பல்வேறு நிலைகளில் தற்கொலை செய்து கொள்கிற அவலநிலை ஏறபட்டு வருகிறது.

இன்றைக்கு ஒரு கொலை வழக்கை நேர்மையாக விசாரிக்க முயன்ற டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொள்வதற்கு தமிழகத்தின் முதலமைச்சராக இருந்து காவல்துறை பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கின்ற ஜெயலலிதாதான் பொறுப்பேற்க வேண்டும். இதுவரை தற்கொலை குறித்து ஆறுதலாக ஒரு வார்த்தை கூட தெரிவிக்க ஜெயலலிதாவின் மனம் இடம் தரவில்லை. இந்த சூழ்நிலையில் சிபிசிஐடி விசாரித்தால் நியாயமும் கிடைக்காது. நீதியும் கிடைக்காது. எனவே, டி.எஸ்.பி.விஷ்ணுபிரியா தற்கொலைக்கு காவல்துறை பொறுப்பை வகிக்கிற முதலமைச்சர் ஜெயலலிதா பதவி விலகி, நியாயமான விசாரணை நடைபெற ஒத்துழைக்க வேண்டும்.

எனவே, இந்தியாவிலேயே தற்கொலை செய்து கொள்பவர்களில் முதன்மை மாநிலமாக தமிழகம் மாறி வருவதை தடுக்கும் வகையில் டி.எஸ்.பி.விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை, சிபிஐ தான் விசாரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிற 23.9.2015 அன்று காலை 10 மணியளவில் தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி துறைத் தலைவர் திரு.கு.செல்வப்பெருந்தகை தலைமையில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *