தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் அறிக்கை

தமிழக சட்டமன்றத்தில் 2006 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி பன்னிரெண்டாம் வகுப்பில் மாணவர்கள் பெறுகிற மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ கல்லூரிகளுக்கான அனுமதி நடைபெற்று வந்தது. கடந்த 2013 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் தேசிய அளவிலான ஒரே நுழைவுத் தேர்வின் மூலம் தொழிற்கல்விகளில் மாணவர் சேர்க்கை இருக்க வேண்டுமென மத்திய பா.ஜ.க. அரசு முடிவு செய்தது. தேசிய நுழைவுத் தேர்வு என்பது மத்திய இடைநிலை கல்வி வாரிய பாடத் திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படுவதாகும். ஆனால் தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின்படி 8 லட்சத்து 33 ஆயிரத்து 682 மாணவர்கள் படிக்கிறார்கள். ஆனால் மத்திய பாடத் திட்டத்தின்படி 12 ஆம் வகுப்பில் தமிழகத்தில் 13,625 மாணவர்கள் தான் படிக்கிறார்கள். கிட்டத்தட்ட 60 மடங்கு அதிகமாக மாநில பாடத் திட்டத்தின்படி கூடுதலாக படிக்கிறார்கள். இந்நிலையில் தேசிய நுழைவுத் தேர்வை தமிழக மாணவர்கள் மீது திணிக்கிற முயற்சிக்கு எதிராக தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென தொடர்ந்து கோரி வருகிறோம்.

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தேசிய நுழைவுத் தேர்விலிருந்து தமிழ்நாடு விலக்கு அளிக்கிற வகையில் அவசரச் சட்டம் இயற்ற வேண்டுமென்று கோரப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்டு கடந்த ஆண்டு மட்டும் தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் அவசரச் சட்டம் மத்திய அரசு இயற்றியது. ஆனால் நடப்பாண்டில் நுழைவுத் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கு கடந்த ஜனவரி 31 ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதங்களாக அந்த மசோதாவின் கதி என்னவென்றே தெரியாமல் உள்ளது.
இந்நிலையில் நீட் தேர்வுக்காக மாணவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி நாள் மார்ச் 1 ஆம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, தமிழகத்திலுள்ள மாணவர்கள் நீட் தேர்வில் பங்குபெற வேண்டுமென்றால் அதற்கு விண்ணப்பிப்பதற்கு நாளை தான் கடைசி நாளாகும். இச்சூழலில் தமிழக முதலமைச்சர் பிரதமர் மோடியை சந்தித்து இதுகுறித்து கோரிக்கை விடுக்கப்பட்டதாக செய்தி வெளிவந்துள்ளது. சமநிலைத் தன்மையில் இல்லாத தமிழக மாணவர்கள் மீது திணிக்கப்படுகிற நுழைவுத் தேர்விலிருந்து காப்பாற்றப்படுவதற்கு இரண்டு வழிமுறைகள் தான் உள்ளன.

ஒன்று, தமிழக அரசின் சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்குவது; மற்றொன்று, கடந்த ஆண்டு நிறைவேற்றியதைப் போல இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் வகையில் மத்திய அரசு உடனடியாக அவசரச் சட்டம் இயற்ற வேண்டும். இந்த அடிப்படையில் இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லையெனில் தமிழகத்திலுள்ள 8 லட்சம் பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட, ஆதிதிராவிட மாணவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும் என மத்திய – மாநில அரசுகளை எச்சரிக்க கடமைப்பட்டுள்ளேன்.

சமநிலையில் இல்லாதவர்களை சமநிலையில் இருப்பதாகக் கருதி நுழைவுத் தேர்வை திணிப்பது சமூக நீதிக்கு எதிரானது. தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர் பிறந்த மண்ணில் சமூக நீதிக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சி செய்கிற மக்கள் விரோத நடவடிக்கைகளை தகர்த்தெறிய வேண்டிய பொறுப்பு தமிழக மக்களுக்கு இருக்கிறது.

ஆனால் தமிழக பா.ஜ.க.வின் தலைவராக இருக்கிற தமிழிசை சௌந்தரராஜன் நுழைவுத் தேர்வு தமிழக மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கூறுகிறார். இப்படி கூறுவதற்கு என்ன அடிப்படை என்று தெரியவில்லை. மத்திய அரசு நிறைவேற்றுகிற திட்டங்களை எல்லாம் மாநில அரசு கண்ணை மூடிக்கொண்டு நிறைவேற்ற வேண்டும் என்று நினைப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானதாகும்.

எல்லாவற்றிற்கும் மேலாக தமிழகத்தில் கல்வித்தரம் கடந்த பல ஆண்டுகளாக சீரழிவை நோக்கி சென்று கொண்டிருப்பது குறித்து யாரும் கவலைப்படாமல் இருக்க முடியாது. இந்தியாவிலேயே கல்வியை வணிகமயமாக்கியதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்வது மிகுந்த வெட்கப்பட வேண்டிய விஷயமாகும். கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதியவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் 41.9 சதவீதம் பேர் தான் தேர்வாகியிருக்கிறார்கள். ஆனால் கேரளாவில் 79.77 சதவீதம், கர்நாடகத்தில் 71.8 சதவீதம் என தேர்வாகி இருக்கிறார்கள். இதைப் பார்க்கிற போது தமிழகத்தில் கல்வித் தரத்தை உயர்த்துவதற்காக தீவிர முயற்சியில் தமிழக அரசு ஈடுபட வேண்டும். மத்திய பாடத் திட்டத்திற்கு இணையாக தமிழக பாடத்திட்டத்தை தரமுள்ளதாக மாற்றுவதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனில் தமிழகம் பின்தங்கிய நிலைக்குச் சென்று தாழ்ந்த தமிழகமாக மாற வேண்டிய அவலநிலை ஏற்படும் என்பதை வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *