தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் அறிக்கை

மத்திய பா.ஜ.க. அரசு ஆட்சி அமைந்தது முதல் தேர்தல் பிரச்சாரத்தின் போது நரேந்திர மோடி கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படாமல் காற்றில் பறக்கவிடப்பட்டு வருகின்றன. விவசாயிகளின் உரிமைகளை காக்கும் வகையில் மத்திய காங்கிரஸ் அரசு நிறைவேற்றிய நில கையகப்படுத்துதல் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வந்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு உதவி செய்ய பா.ஜ.க. அரசு முயன்றது. இதற்கு எதிராக இளந்தலைவர் ராகுல்காந்தி கடுமையான போராட்டத்தை நடத்தியதன் விளைவாக சட்டத் திருத்தம் திரும்பப் பெறப்பட்டது. அதேபோல, எம்.எஸ். சுவாமிநாதன் குழுவின் பரிந்துரைப்படி உற்பத்தி செலவும், அதில் 50 சதவீதமும் சேர்த்து விவசாயிகளின் விளை பொருளுக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு செயல்படுத்தாமல் அலட்சியம் காட்டி வருகிறது.
தலைநகர் தில்லியில் நேற்று நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் விவசாய வருமானத்திற்கு வரி விதிக்க வேண்டுமென பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தற்போது வழங்கப்பட்டுள்ள வரி விலக்கு நீக்கப்பட்டு நகரங்களில் உள்ளவர்களுக்கு வரி விதிப்பதைப் போல கிராமப்புறங்களில் வாழ்கிற விவசாயிகளுக்கும் வரி விதிக்க வேண்டுமென்று கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் வரி செலுத்வோர் எண்ணிக்கையை அதிகப்படுத்தி வருமானத்தை பெருக்க வேண்டுமென முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவசாய கடன் தள்ளுபடியால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீத வளர்ச்சி குறையும் என மத்திய அரசின் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் கவலை தெரிவித்த செய்தி வெளிவந்துள்ளது.
இந்தியாவின் முதுகெலும்பாக திகழ்கிற விவசாயிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய மாட்டோம் என்று மத்திய பா.ஜ.க. அரசு பிடிவாதம் காட்;டி வருகிறது. ஆனால் கோடிக்கணக்கான ரூபாய் பரிவர்த்தனை செய்யும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகள் வழங்குவதில் அதீத அக்கரை காட்டுவது ஏன் ? மத்திய நேரிடை, மறைமுக வரிகள் வாயிலாக 2015-16 இல் மட்டும் ரூபாய் 6 லட்சத்து 11 ஆயிரத்து 128 கோடி வரிச் சலுகையை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வாரி, வாரி வழங்கிய நரேந்திர மோடி அரசு, விவசாயிகளின் முதுகெலும்பை முறிக்கும் வகையில் வருமான வரியை விதிக்க முற்படுவது ஏன் ?
எதிர்பாராத பருவநிலை மாற்றங்களால் கடும் வெள்ளத்தையும், வறட்சியையும் சந்திக்க வேண்டிய அவலநிலை விவசாயிகளுக்கு மட்டுமே இருக்கிறது. விவசாயத்தில் செய்கிற முதலீடுக்கு உரிய பலன் கிடைக்குமா என்கிற உத்திரவாதம் இல்லாமல் இருப்பதால் கடன் தொல்லைகளுக்கு ஆளாக வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது. இத்தகைய நிச்சயமற்ற அவலநிலை வேறு எந்த தொழிலிலும் ஏற்படுவதில்லை. கடும் வெயிலோ, மழையோ எதையும் பொருட்படுத்தாமல் சகித்துக் கொண்டு கடினமாக உழைக்க வேண்டிய விவசாயிகளின் நலனை பாதுகாக்க நரேந்திர மோடி அரசு கடந்த 3 ஆண்டுகளில் எடுத்த நடவடிக்கை என்ன ?
தலைநகர் தில்லியில் 41 நாட்கள் போராட்டம் நடத்திய விவசாயிகளை சந்தித்து பேசக் கூட முன்வராத ஒரு பிரதமரை தேர்ந்தெடுத்ததற்காக விவசாயிகள் வெட்கப்படுகிறார்கள், வேதனைப்படுகிறார்கள். இவரது ஆட்சிக்காலம் கார்ப்பரேட்டுகளுக்கு பொற்காலமாக இருக்குமேயொழிய விவசாயிகளுக்கு இருண்ட காலமாகத் தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து கட்சி கூட்டமைப்பு நடத்திய தமிழகம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் மக்களின் பேராதரவோடு மாபெரும் வெற்றியை பெற்றிருக்கிறது. தமிழகத்திலுள்ள கடைகளையும், வணிக நிறுவனங்களையும் மூடி வணிகர்கள் வழங்கிய ஒத்துழைப்பு மிகுந்த பாராட்டுதலுக்குரியது. இந்த வெற்றிகரமான முழு அடைப்பு போராட்டத்தின் மூலம் தமிழக மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பை மத்திய – மாநில அரசுகள் பெற்றிருக்கின்றன. இதை ஆட்சியாளர்கள் உணர்ந்து விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வரவில்லையெனில் கடும் விளைவுகளை சந்திப்பதிலிருந்து தப்ப முடியாது.
மத்திய அரசு விவசாயிகளின் வருமானத்திற்கு வரி விதிக்க வேண்டும் என்று முடிவெடுத்திருப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன். இம்முடிவை கைவிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். எனவே, உறுதி செய்யப்படாத வருமானத்தை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கிற கோடிக்கணக்கான விவசாயிகளை வருமான வரி விதிப்பிற்குள் அடைப்பதற்கு முயற்சி செய்கிற நரேந்திர மோடியின் நடவடிக்கையை விவசாயிகள் ஓரணியில் திரண்டு முறியடிப்பார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *