தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு சு. திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் அறிக்கை

அமரர் ராஜீவ்காந்தி கண்ட கனவை நிறைவேற்றும் வகையில் மக்களுக்கு அதிகாரம் வழங்கி, மக்கள் பங்கேற்கும் உள்ளாட்சி அமைப்புகளை உருவாக்க வேண்டுமென்ற நோக்கத்தில் தான் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 73 மற்றும் 74 ஆவது திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இத்திருத்தங்களின் அடிப்படையில் தமிழக அரசால் 1994 இல் நிறைவேற்றப்பட்ட ஊராட்சிகள் சட்டம் அமலுக்கு வந்தது. இதன்மூலம் 1996, 2001, 2006, 2011 என நான்கு உள்ளாட்சித் தேர்தல்கள் இதுவரை நடைபெற்றுள்ளன. ஆனால் தற்போது உள்ளாட்சி அமைப்புகளுக்கு எப்போது தேர்தல் நடக்கும் என்று தேர்தல் ஆணையம் முடிவு செய்யாமல் நீதிமன்றம் முடிவு செய்கிற நிலை இன்றைக்கு ஏற்பட்டுள்ளது.
கிராம பஞ்சாயத்து, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட பஞ்சாயத்து என்ற மூன்று அடுக்குகள் இந்த சட்டத்தில் ஏற்படுத்தப்பட்டன. இந்த மூன்றடுக்குகளுக்கும் அடித்தளமாக இருப்பது கிராம சபையாகும். ஜனநாயக முறையில் மக்கள் பங்கேற்போடு கிராம சபைகள் கூடி முடிவெடுத்து திட்டங்கள் தீட்டப்பட்டிருந்தால் உள்ளாட்சியில் நல்லாட்சி அமைந்திருக்கும். ஆனால் தமிழகத்தில் கிராம சபையின் அதிகாரங்கள் முற்றிலும் முடக்கப்பட்டு செயலிழந்து இருக்கின்றன. குறிப்பாக ஆண்டு வரவு-செலவு திட்டத்தை முடிவு செய்வது கிராம சபையல்ல. கிராம பஞ்சாயத்து நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் அதிகாரமும் கிராம சபைக்கு கொடுக்கப்படவில்லை.
கிராம சபை என்ற அமைப்பு வெறும் ஏட்டளவிலேயே இருந்ததே தவிர, செயல்முறையில் செயல்படுவதற்கு வாய்ப்பு ஏற்படவில்லை. 73 ஆவது சட்டத் திருத்தத்தின்படி கிராமசபை ஒரு முக்கியமான அங்கமாக கூறப்பட்டிருந்தாலும் அதற்குரிய முக்கியத்துவம் கிடைக்காமல் போய்விட்டது. கிராமசபையில் முக்கியமான பிரச்சினையை விவாதித்திருந்தாலோ, மக்களின் பங்களிப்பை உறுதி செய்திருந்தாலோ, அதன் முக்கியத்துவத்தை மக்கள் உணர்ந்திருப்பார்கள். கிராம சபைகளின் தீர்மானங்களை நிறைவேற்றி செயலுக்கு கொண்டு வந்திருந்தால் மக்களாட்சியின் பலன்களை மக்களே அனுபவித்திருப்பார்கள். கிராம சபையின் மீது மீண்டும் நம்பிக்கை ஏற்படுகிற வகையில் பல்வேறு முயற்சிகளை எடுப்பது மிகமிக அவசியமாகும்.
ஆண்டுதோறும் சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தியடிகள் பிறந்த தினம், மே 1 ஆகிய நாட்களில் சிறப்பு கிராம சபைகள் கூட்;டப்பட வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறையாவது கிராம சபைகள் கட்டாயம் கூட்டப்பட வேண்டுமென்று பஞ்சாயத்துராஜ் சட்டம் கூறுகிறது. இதன்படி தமிழகத்தில் எத்தனை கிராமங்களில் கிராம சபை கூடியது என்ற கேள்விக்கு உரிய பதில் கிடைக்க வாய்ப்பில்லை.
தமிழகத்தில் மதுவிலக்கிற்கு ஆதரவாக பல்வேறு போராட்டங்கள் தன்னெழுச்சியாக நடைபெற்று வருகின்றன. உச்சநீதிமன்ற ஆணையின்படி மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. இதை செயலிழக்க செய்வதற்கு அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி எந்த கிராம பஞ்சாயத்திலாவது கிராம சபை கூடி எங்கள் கிராமத்திற்கு மதுக்கடைகள் கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் ஆட்சியாளர்கள் அதை செயல்படுத்தாமல் இருக்க முடியாது. இதை சரியாக பயன்படுத்துகிற வகையில் தமிழகத்திலுள்ள பஞ்சாயத்துகளில் வருகிற மே 1 ஆம் தேதி கூடுகிற கிராம சபை கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் பங்கேற்று மதுவிலக்கிற்கு ஆதரவாகவும், விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்கிற இரு தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும் என்று காங்கிரசின் அங்கமாக செயல்படுகிற ராஜீவ்காந்தி பஞ்சாயத்துராஜ் சங்கதன் அமைப்பு இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இது மிகுந்த வரவேற்புக்குரியது.
வருகிற மே 1 ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், பெருமாநாடு கிராம பஞ்சாயத்தில் நடைபெறுகிற கிராம சபை கூட்டத்தில் நான் பங்கேற்பதென முடிவு செய்துள்ளேன். அதேபோல, காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவர்கள், முன்னாள் – இன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், பல்வேறு பிரிவுகளின் தலைவர்கள், மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள், வட்டாரத் தலைவர்கள் தங்கள் சொந்த கிராமங்களில் நடைபெறுகிற கிராமசபை கூட்டத்தில் பங்கேற்று மேற்கண்ட தீர்மானங்களை நிறைவேற்றி அதன் நகலை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் ஒப்படைக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இதன்மூலம் கிராம சபைகளின் செயல்பாட்டை உறுதி செய்திடுவோம்.
அமரர் ராஜீவ்காந்தி உருவாக்கிய பஞ்சாயத்துராஜ் அமைப்பு 25 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன. அவரது கனவை நனவாக்குவதே நமது நோக்கமாகும். அந்த நோக்கத்தை அடைய கிராம சபைகளை நோக்கி நமது பயணம் தொடரட்டும். அதன்மூலம் உள்ளாட்சிகளில் நல்லாட்சி அமையட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *