தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள் விடுக்கும் இரங்கல் செய்தி

ராம்கோ குழுமங்களின் தலைவரும், ராஜபாளையம் தொழில் வர்த்தகர் சங்கத்தின் தலைவருமான திரு. பி.ஆர். ராமசுப்பிரமணிய ராஜா மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். கல்வி நிறுவனங்கள், சிமெண்ட் தொழிற்சாலை, நூற்பாலைகள், கூரை தகர ஆலைகள் நடத்தி தொழில் வளர்ச்சிக்கு தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர்.
பெருந்தலைவர் காமராஜர் அவர்களுக்கு இவரது தந்தை திரு. ராமசாமி ராஜா நெருக்கமான நண்பராக திகழ்ந்தவர். இவரது தந்தை மற்றும் திரு. ராமசுப்பிரமணிய ராஜா ஆகியோரின் அயராத உழைப்பால் விருதுநகர் மற்றும் ராஜபாளையத்தில் பல தொழிற்சாலைகள் பெருகின. பள்ளி, கல்லூரிகள் ஏராளமாக துவக்கப்பட்டன. தொழில் தொடங்கப்பட்ட 1938 முதல் இதுவரை தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டமே நடத்தாத ஒரு தொழிற்சாலை இருக்குமேயானால் அது ராம்கோ நிறுவனமாகத் தான் இருக்க முடியும். அந்த வகையில் தொழிலாளர்களோடு நல்லிணக்கத்தை ஏற்படுத்தி, அனைவரும் போற்றுகிற வகையில் தொழில்களை நடத்தி வந்தவர் திரு. ராமசுப்பிரமணிய ராஜா.
தொழிலதிபராக இருந்தாலும் ஆன்மீகத்தில் மிகுந்த ஆர்வம் கொண்ட திரு. ராமசுப்பிரமணிய ராஜா தென் மாவட்டங்களில் உள்ள கோயில் திருப்பணிகளில் நேரிடையாக ஈடுபட்டு பல உதவிகள் செய்தவர். அரசியலுக்கு அப்பாற்பட்டு நன்கு பழகக் கூடிய திரு. ராமசுப்பிரமணிய ராஜா அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அன்னாரின் மறைவிற்கு காங்கிரஸ் கட்சி சார்பிலும், என் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு, அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *