உலக சமாதானத்தின் தூதுவராகவும், இந்திய ஜனநாயகத்தின் பாதுகாவலராகவும், மதச்சார்பற்ற, வலிமையான, ஒன்றுபட்ட இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் உலாவந்த மாபெரும் தலைவர் ராஜீவ்காந்தியை ராமானுஜர் பிறந்த இதே புனித மண்ணில் தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு வந்தபோது நம்மிடமிருந்து நாச சக்திகளால் பறிக்கப்பட்ட நாள் மே 21. அமைதிப் பூங்காவான தமிழகத்தில் ராஜீவ்காந்தி படுகொலை திட்டத்தை அரங்கேற்றிய தேசவிரோத, பயங்கரவாத சக்திகளின் முகமூடி கிழித்தெறியப்பட்டு, உண்மை உலகிற்கு தெரிந்துவிட்டது. பயங்கரவாதத்திற்கு பலியான நமது அன்புத் தலைவர் ராஜீவ்காந்தியின் நினைவுநாளில் ஸ்ரீபெரும்புதூர் நினைவகத்தில் அஞ்சலி செலுத்த வேண்டிய கடமையும், பொறுப்பும் நமக்கிருக்கிறது.

இந்திய நாட்டின் பிரதமராக ஐந்தே ஆண்டுகளில் தேசிய, சர்வதேச அரங்கில் பார் போற்றும் வகையில் சாதனை பட்டியல் படைத்த 20 ஆம் நூற்றாண்டின் இணையற்ற தலைவரான ராஜீவ்காந்தியின் நினைவுநாள் மே 21. இந்தியாவின் வலிமைமிக்க பிரதமராக விளங்கிய ராஜீவ்காந்தி நாடாளுமன்ற, சட்டமன்றங்களுக்கு அடுத்த நிலையில் மக்கள் பங்கேற்கிற ஜனநாயகத்தை உருவாக்குகிற வகையில் பஞ்சாயத்துராஜ், நகர்பாலிகா சட்டத்தை கொண்டு வந்து புரட்சி செய்தவர். அவரது கனவை நிறைவேற்றும் வகையில் பஞ்சாயத்து ராஜ் சட்டம் இன்றைக்கு செயலுக்கு வந்துள்ளது. நாடாளுமன்றங்கள், சட்டமன்றங்கள் சட்டங்களை இயற்றுகிற பணியை செய்கிற போது மக்களுக்கு நலன் பயக்கும் திட்டங்களை செயல்படுத்துவதற்காக மக்களுக்கே அதிகாரம் வழங்கும் பஞ்சாயத்துராஜ் சட்டம் இன்றைக்கு நாடு முழுவதும் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை கொண்டு வந்து நிறைவேற்றிய பெருமை ராஜீவ்காந்தி அவர்களுக்கு உண்டு. இன்றைக்கு 50 சதவீதமாக உயர்த்தப்பட்டிருப்பது ராஜீவ்காந்திக்கு கிடைத்த வெற்றியாகும். கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின் போது தமிழகத்தில் மொத்தமுள்ள 1 லட்சத்து 32 ஆயிரத்து 456 பதவிகளுக்கு 44 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதேபோல, தலித்துகளுக்கும் இடஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன்மூலம் பெண்கள் பஞ்சாயத்து அமைப்புகளில் பொறுப்பேற்று மேம்பாடு அடையவும், தலித்துகள் பிரதிநிதித்துவம் அதிகளவில் பெறவும் அடித்தளம் அமைத்தவர் ராஜீவ்காந்தி.

அமரர் ராஜீவ்காந்தி செய்த தகவல் தொழில்நுட்ப புரட்சியால் இன்றைக்கு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 60 சதவீதம் கிடைக்கிற வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இதன்மூலம் லட்சக்கணக்கான படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தொலைநோக்கு பார்வையோடு இந்தியாவை 21 ஆம் நூற்றாண்டுக்கு அழைத்துச் சென்றவர் ராஜீவ்காந்தி அவர்கள்.

பாரத ரத்னா ராஜீவ்காந்தி நினைவு நாளான மே 21 ஆம் தேதி காலை 10 மணியளவில் ஸ்ரீபெரும்புதூர் நினைவிடத்தில் மலரஞ்சலியும், பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்வும் நடைபெற இருக்கின்றன. மாலை 5 மணியளவில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் ராஜீவ்காந்தி நினைவஞ்சலி கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் மத்திய அரசின் முன்னாள் நிதியமைச்சர் திரு. ப. சிதம்பரம் அவர்கள் கலந்து கொண்டு அமரர் ராஜீவ்காந்தி அவர்களுக்கு புகழஞ்சலி செலுத்த உள்ளார்.

தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூலை முடுக்குகளுக்கெல்லாம் சென்று மக்களை சந்தித்து, மக்களின் அன்பைப் பெற்றவர் ராஜீவ்காந்தி. இந்தியாவை உலக அரங்கில் உயர்த்த வேண்டுமென்று கனவு கண்ட அமரர் ராஜீவ்காந்தி அவர்களின் நினைவுநாளில் காங்கிரஸ் கட்சியின் முன்னணித் தலைவர்களும், நிர்வாகிகளும், செயல்வீரர்களும் பெருமளவில் திரண்டு அஞ்சலி செலுத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.  எல்லா மாவட்டங்களிலும் மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், கட்சியின் முன்னணியினர், கட்சித் தோழர்கள் அமரர் திரு. ராஜீவ்காந்தி அவர்களது திருவுருவப் படத்தை அலங்கரித்து வைத்து மலர் அஞ்சலி செலுத்தி, பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதன் மூலம் பயங்கரவாத சக்திகளை வீழ்த்துவதற்கு சூளுரை ஏற்போம்.


Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *