கடந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று அ.தி.மு.க. ஆட்சியமைந்து இன்றோடு ஓராண்டு நிறைவடைந்துள்ளது. டிசம்பர் 5 ஆம் தேதி ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அ.தி.மு.க. ஆட்;சியிலும், கட்சியிலும் பல்வேறு குழப்பங்கள், தடுமாற்றங்கள், உட்கட்சி பூசல்கள் தலைவிரித்தாட ஆரம்பித்தன. இதனால் அ.தி.மு.க. இரு அணிகளாக பிளவுபட்டுள்ளன. இதை பயன்படுத்தி தமிழகத்தில் பா.ஜ.க.வை வளர்க்க பல்வேறு வியூகங்கள் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன்மூலம் அ.தி.மு.க.வை கபளீகரம் செய்வதற்கு பா.ஜ.க. தேசிய தலைமை தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
2015 வெள்ளப் பெருக்கு, 2016 வார்தா புயல், 2017 வறட்சி ஆகியவற்றுக்காக அ.தி.மு.க. அரசு கேட்ட மொத்த நிவாரணத் தொகை ரூபாய் 88 ஆயிரத்து 500 கோடி. இதில் மத்திய பா.ஜ.க. அரசு வழங்கியது வெறும் 4 ஆயிரம் கோடி ரூபாய். குறிப்பாக வரலாறு காணாத வறட்சியை 120 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்து வருகிற தமிழகத்தின் வறட்சி நிவாரண நிதிக்காக அ.தி.மு.க. அரசு கேட்ட தொகை ரூபாய் 39 ஆயிரத்து 66 ஆயிரம் கோடி. இதில் பா.ஜ.க. அரசு வழங்கியது வெறும் ரூபாய் 1700 கோடி. ஒருபக்கம் அ.தி.மு.க.வை கைப்பற்றுகிற முயற்சி, இன்னொரு பக்கம் அ.தி.மு.க. அரசு கேட்ட தொகையை வழங்காமல் வஞ்சிக்கிற வகையில் பா.ஜ.க.வின் போக்கு இருக்கிறது.
மத்திய அரசின் அநீதியை எதிர்த்து, துணிவுடன் குரல் கொடுப்பதற்கு அ.தி.மு.க.வில் வலிமையான தலைமையும் இல்லை, ஒற்றுமையும் இல்லை, இந்தியாவில் மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கிற அ.தி.மு.க. மாநிலத்தின் உரிமைக்காக குரல் கொடுக்க அஞ்சுவது ஏன் ? மடியில் கணம் இருப்பதால் அ.தி.மு.க. எதிர்த்து குரல் கொடுக்க தயங்குகிறதா ?
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின்படி படிக்கிற 8 லட்சம் மாணவர்களின் நலனுக்கு எதிராக மத்திய பாடத் திட்டத்தின்படி படிக்கிற 35 ஆயிரம் மாணவர்களின் நலன்களை பாதுகாக்க நீட் நுழைவுத் தேர்வு திணிக்கப்பட்டிருக்கிறது. இதை தடுத்து நிறுத்த தமிழக அரசு சட்டசபையில் மசோதா நிறைவேற்றியது. அதற்கு இதுவரை குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கவில்லை. இந்த ஒப்புதலைப் பெறுவதற்கு இன்றைய முதலமைச்சரால் முடியவில்லை.
இரு அணிகளாக பிளவுப்பட்டிருக்கிற எடப்பாடியும், பன்னீர்செல்வமும் பிரதமர் நரேந்திர மோடியை போட்டி போட்டுக் கொண்டு சந்திப்பதில் காட்டுகிற அக்கறையையும் நீட் மசோதாவிற்கு ஒப்புதலைப் பெற காட்டாதது ஏன் ?
காவிரி நடுவர்மன்ற தீர்ப்பின்படியும், உச்சநீதிமன்ற ஆணையின்படியும் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு நியமித்திருக்க வேண்டும். ஆனால் மத்திய பா.ஜ.க. அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் வஞ்சித்த காரணத்தால் டெல்டா விவசாயிகள் பாதிக்கப்பட்டு 400 பேருக்கும் அதிகமாக தற்கொலை செய்து கொண்ட அவலம் நிகழ்ந்துள்ளது. இதில் 17 விவசாயிகளின் தற்கொலையை மட்டும் அங்கீகரித்து நிவாரண உதவி வழங்கிய அ.தி.மு.க. அரசு மற்ற விவசாயிகளின் தற்கொலையை ஏற்காதது ஏன் ? விவசாயிகளின் தற்கொலைக்கான காரணம் குறித்து அமைச்சர்கள், அதிகாரிகள் மூலமாக ஆய்வு செய்ய கூட முன்வராத அ.தி.மு.க. அரசை விட கல் நெஞ்சம் கொண்ட வேறு அரசு இருக்க முடியாது.
தமிழன அரசின் தவறான திட்டமிடலின் காரணமாக வருமானத்தை விட செலவினங்கள் அதிகரித்து 3 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமை ஏற்பட்டுள்ளது. பொதுத்துறை நிறுவனங்களின் தவறான நிர்வாகத்தின் காரணமாக 2 லட்சம் கோடி ரூபாய் கடன் ஏற்பட்டுள்ளது. ஆக, தமிழக அரசின் ஒட்டுமொத்த கடன் 5 லட்சம் கோடி ரூபாயை கடந்து மிகப்பெரிய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழக அரசு திவாலான நிலையில் உள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் தொழில் தொடங்க எவரும் முன்வரவில்லை. அப்படி முயற்சி செய்தவர்களும் அ.தி.மு.க. ஆட்சியாளர்களோடு ஏற்பட்ட அசாதாரண அனுபவத்தின் காரணமாக ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய நிலை இன்றைக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் புதிய தொழில்கள் தொடங்க தமிழ்நாட்டிற்கு எவரும் வராமல் அண்டை மாநிலங்களுக்கு சென்றுக் கொண்டிருக்கிறார்கள். உலக வங்கி தயாரித்த பட்டியலில் கடந்த காலத்தில் தொழில் வளர்ச்சியில் 12 ஆவது இடத்தில் இருந்த தமிழகம் இன்று 18 ஆவது இடத்திற்கு கீழே தள்ளப்பட்டுள்ளது. ஒரு கோடி இளைஞர்கள் தமிழகத்தில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு வேலை வாய்ப்பின்றி காத்துக் கிடக்கிறார்கள்.
தமிழகத்தில் 3300 மதுக்கடைகளை மூட வேண்டுமென உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. ஆனால் அந்த ஆணையை தந்திரமாக செயலிழக்கச் செய்வதற்கு புதிய மதுக்கடைகளை திறப்பதற்கு பல்வேறு இடங்களை தமிழக அரசு தேர்வு செய்தது. இந்த புதிய கடைகளை திறப்பதற்கு தமிழகத்தின் பல பகுதிகளில் பெண்களே முன்னின்று கடுமையான போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்டு வருகிறார்கள். போராட்;டத்தில் ஈடுபடும் தாய்மார்களை காவல்துறையினர் அடித்து விரட்டும் அவலநிலை தொடர்கிறது.
மணல் குவாரிகளில் கொள்ளை நடப்பதை தடுக்க முடியாத அ.தி.மு.க. அரசில், ஒரு லோடு மணல் ரூபாய் 10 ஆயிரத்திற்கு விற்கப்பட்டு வந்தது, இன்று ரூபாய் 30 ஆயிரத்திற்கு விற்கப்படுகிறது. இதனால் கட்டுமானத் தொழில் பாதிக்கப்பட்டு வேலை வாய்ப்புகள் நசிந்து விடுகிற நிலை ஏற்பட்டுள்ளது. கல்வித்துறையில் நிறைய மாற்றங்கள் தன்னிச்சையாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதை ஒரு நிபுணர் குழு அமைத்து அதன் பரிந்துரையின் அடிப்படையில் கல்வியின் தரத்தை உயர்த்துவதற்கு தமிழக அரசு முயல வேண்டும். மருத்துவ மேற்படிப்புகளில் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் விதிகளை மீறி, ஆண்டுக்கு ரூபாய் 25 லட்சம் கட்டணக் கொள்ளை நடத்த முற்பட்டு வருகின்றன. இதை தடுத்த நிறுத்த அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் தயாராக இல்லை.
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்குவதற்கு 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. இந்த இடங்கள் குறித்து மதிப்பீட்டு அறிக்கையை தமிழக அரசு மத்திய அரசிடம் சமர்ப்பிக்காததால் எய்ம்ஸ் மருத்துவமனைகள் தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.
டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் இடைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதால் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. பல்வேறு குளறுபடிகளால் உயர்நீதிமன்றம் விதித்த தடையாணையால் உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த ஓராண்டுகால அ.தி.மு.க. ஆட்சி என்பது திக்கு தெரியாத திசையை நோக்கி பயணம் செய்து கொண்டிருக்கிறது. மாலுமி இல்லாத கப்பலாக அ.தி.மு.க. பயணித்து வருகிறது. முன்னாள் அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் அ.தி.மு.க. அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள். இந்நிலையில் அ.தி.மு.க.வின் எதிர்காலமே கேள்விக்குறியாக்கப்பட்ட நிலையில் தமிழகத்தின் எதிர்காலம் என்ன ஆகுமோ என்கிற அச்சம் நமக்கு ஏற்பட்டிருக்கிறது. இதே போக்கில் அ.தி.மு.க. ஆட்சி நீடிக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இந்த ஓர் ஆண்டில் மூன்று முதல்வர்கள் தமிழ்நாட்டில் செயல்பட்டு ஆட்சி மக்களிடமிருந்து விலகி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் மகிழ்ச்சி அடையும் விதத்தில் இந்த ஆட்சியின் செயல்பாடுகள் இல்லை.