இந்தியாவின் எதிர்கால தலைமையை ஐம்பது ஆண்டுகளுக்கு வழங்கக் கூடிய ஆற்றல்மிக்க தலைவராக உலக நாடுகளால் போற்றப்பட்ட பாரத ரத்னா ராஜீவ்காந்தி அவர்கள் படுகொலை செய்யப்பட்டப் பிறகு காங்கிரஸ் இயக்கத்தையும், நாட்டையும் காப்பாற்றுவதற்காக அரசியலில் நுழைந்தவர் அன்னை சோனியா காந்தி. அவருக்கு உறுதுணையாக 2004 ஆம் ஆண்டில் அரசியல் பிரவேசம் செய்த இளம் தலைவர் ராகுல்காந்தி அவர்களின் 48 ஆவது பிறந்தநாள் ஜூன் 19. இவ்விழாவை ‘இளைஞர்களின் எழுச்சி நாளாக” கொண்டாடுவதென தமிழ்நாடு காங்கிரஸ் முடிவு செய்திருக்கிறது. அன்று தங்கள் பகுதிகளில் மருத்துவ சிகிச்சை முகாம், ரத்ததான முகாம், நலிந்தோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், முதியோர் இல்லங்களில் உணவு அளித்தல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் மற்றும் கட்சியின் பல்வேறு அமைப்புகள் நடத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
அரசியலில் நுழைந்த ராகுல்காந்தி அவர்கள் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக நாடு முழுவதும் சுற்றுப் பயணங்களை மேற்கொண்டார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்று மாணவர்கள், இளைஞர்களை காங்கிரஸ் கட்சியில் இணைப்பதற்கான கடும் முயற்சிகளை மேற்கொண்டார். இதன்மூலம் 25 லட்சம் இளைஞர்களை 2011 ஆம் ஆண்டில் காங்கிரசில் இணைத்து சாதனை புரிந்தவர் ராகுல்காந்தி அவர்கள்.
கடந்த 2009 நாடாளுமன்றத் தேர்தலில் மதவாத சக்திகளின் கோட்டையாக இருந்த உத்தரபிரதேசத்தில் 80 நாடாளுமன்றத் தொகுதிகளில் 21 இடங்களில் காங்கிரஸ் கட்சியின் வெற்றியை பெற்றுத் தந்த பெருமை ராகுல்காந்தி அவர்களுக்கு உண்டு. இதற்காக ஆறு வாரங்களில் 125 பேரணிகளில் உரையாற்றி காங்கிரசுக்கு வலிமை சேர்த்தார்.
விவசாயிகள், நெசவாளர்கள், தொழிலாளர்கள் பிரச்சினை எங்கே உருவெடுக்கிறதோ, அந்த இடத்திற்கே நேரிடையாகச் சென்று அவர்களோடு இணக்கமாக இணைந்து கலந்துரையாடி அவர்களது பிரச்சினைக்காக உரிமைக் குரல் எழுப்பியவர் ராகுல்காந்தி அவர்கள். மத்திய காங்கிரஸ் அரசு நிறைவேற்றிய நில கையகப்படுத்துதல் சட்டத்தை உருக்குலைத்து தொழிலதிபர்களின் நலன்களைக் காக்கும் நோக்கத்தில் விவசாயிகளின் உரிமைகளை பறிக்கிற வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வந்தபோது அதற்கெதிராக தலைநகர் தில்லியில் ஒரு லட்சம் விவசாயிகளை திரட்;டி, பேரணி நடத்தி அவசரச் சட்டத் திருத்தத்தை திரும்பப் பெறச் செய்தவர் ராகுல்காந்தி அவர்கள்.
கடந்த மூன்றாண்டுகளாக நடைபெறுகிற மோடி அரசை ‘சூட் – பூட் சர்க்கார்” என்று கடுமையாக விமர்சனம் செய்து களத்தில் நின்று போராடுகிற மாவீரனாக ராகுல்காந்தி விளங்கி வருகிறார். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு இரண்டு கோடி இளைஞர்கள் வீதம் ஐந்தாண்டுகளில் 10 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு கொடுப்போம் என்று தேர்தல் நேரத்தில் வாக்குறுதி கொடுத்தவர் நரேந்திர மோடி.
ஆனால் கடந்த 2014-15 இல் 1.35 லட்சமாகவும், 2015-16 இல் 1.50 லட்சம் ஆகத் தான் மோடி ஆட்சியில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆண்டுக்கு 2.27 கோடி பேர் புதிதாக வேலை கேட்டு வரும் இளைஞர்கள் எண்ணிக்கை பெருகி வருகிற நிலையில் ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் பேருக்கு மட்டுமே வேலை வாய்ப்பு வழங்கப்படுவதால் நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் உருவாகி சமுதாய பேரழிவை நோக்கி நாடு சென்று கொண்டிருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் மிகுந்த கவலையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ‘மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்கில் இந்தியா” என்பது வெற்று முழக்கங்களாக இருக்கிறதேயொழிய உரிய பலனை கொடுப்பதாகத் தெரியவில்லை.
அதேபோல, மகாத்மா காந்தி தேசிய வேலை வாய்ப்பு உறுதித் திட்டம் அன்னை சோனியா காந்தியின் கனவுத் திட்டமாகும். இதை தொடக்க காலத்திலிருந்தே நரேந்திர மோடி உள்ளிட்ட பா.ஜ.க.வினர் கிண்டலும், கேலியும் பேசி வந்தனர். இதில் முழுமையாக ஈடுபாடு காட்டாத காரணத்தால் 2015-16 இல் வேலை கேட்டவர்கள் 2.27 கோடி பேர். ஆனால் வேலை வழங்கப்பட்டதோ 1.1 கோடி பேருக்கு மட்டுமே. வேலை வாய்ப்பு வழங்குவதை விட நிரந்தர சொத்துக்களை உருவாக்க வேண்டும் என்கிற நோக்கத்தின் காரணமாக 2013-14 இல் மொத்த மனித நாட்கள் 235.15 கோடியிலிருந்து 2015-16 இல் 168.43 கோடியாக குறைந்துவிட்டது. இத்திட்டத்தினால் ஏற்கனவே பயனடைந்த கிராமப்புற தலித், பிற்படுத்தப்பட்ட மக்கள், குறிப்பாக பெண்கள் வாங்கும் சக்தியை இழந்து கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் கிராமப்புற பொருளாதாரமே சீரழிவை நோக்கிச் சென்றுக் கொண்டிருக்கிறது.
‘விவசாயிகளின் வருமானத்தை ஐந்து ஆண்டுகளில் இரட்டிப்பாக ஆக்குவேன்” என்று உரக்க முழங்கியவர் நரேந்திர மோடி. ஆனால் விவசாயிகளின் தற்கொலை தான் இரட்;டிப்பானதேயொழிய விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக ஆகவில்லை. மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் 2005 இல் நாடு முழுவதும் உள்ள 4 கோடி விவசாயிகளின் கடன் தொகையான ரூபாய் 63 ஆயிரம் கோடியை ரத்து செய்தது. ஆனால் தற்போது மத்திய நிதியமைச்சர், ‘விவசாயிகளின் கடனை மாநில அரசு தான் ரத்து செய்ய வேண்டும், நாங்கள் ரத்து செய்ய மாட்டோம்” என்று அறிவித்திருக்கிறார்.
மேலும் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிற கடனை உரிய தவணையில் கட்டுகிறவர்களுக்கு 3 சதவீதமும், மற்றவர்களுக்கு 2 சதவீதமும் மானியமாக வழங்கப் போவதாக மத்திய பா.ஜ.க. அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டம் மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் 2006-07 ஆம் ஆண்டு முதல் இருந்து வருகிறது. ‘பழைய மொந்தையில் புதிய கள்” போல இந்த அறிவிப்பை மோடி அரசு புதிதாக வெளியிட்டிருக்கிறது. இதைவிட விவசாயிகளை ஏமாற்றுகிற வேலை வேறு எதுவும் இருக்க முடியாது.
மத்திய காங்கிரஸ் கூட்டணியின் 10 ஆண்டு ஆட்சியில் தகவல் அறியும் உரிமைச் சட்டம், கல்வி உரிமைச் சட்டம், உணவு பாதுகாப்புச் சட்டம், வேலை பெறும் உரிமைச் சட்டம், மதியஉணவு திட்டம், நில கையகப்படுத்துதல் சட்டம், விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் கடன், தேசிய ஊரக சுகாதார இயக்கம், ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், ஆதார் அடையாள எண், நேரடி பயன்கள் மாற்றும் திட்டம், பாரத் நிர்மான் திட்டம், ஊரக வளர்ச்சி திட்டங்கள், இந்திரா ஆவாஸ் யோஜனா, 24 லட்சம் பேருக்கு கல்விக் கடனாக ரூபாய் 52 ஆயிரம் கோடி என சாதனை பட்டியலை அடுக்கிக் கொண்டே போகலாம். இன்று தொலைபேசி, செல்பேசி இணைப்புகள் 120 கோடியை எட்டியிருக்கிறது என்றால் அதற்கு அடித்தளம் அமைத்த பெருமை மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு உண்டு.
கடந்த மூன்றாண்டுகளாக மத்தியில் நடைபெற்று வரும் நரேந்திர மோடி ஆட்சியின் மக்கள் விரோத நடவடிக்கைகளை மக்களிடம் சென்று காங்கிரஸ் கட்சியினர் பிரச்சாரம் செய்ய வேண்டும். மத்திய காங்கிரஸ் ஆட்சியின் சாதனைகளை பட்டியலிட்டு கூற வேண்டும். தங்கள் பகுதிகளில் நூறு பேரை எங்கெங்கு எல்லாம் திரட்ட முடிகிறதோ, திரட்டி ஜூன் 19 ஆம் தேதி காலை 10 மணிக்கு உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும். தமிழகத்தின் பல பகுதிகளில் எடுக்கப்படும் இந்த உறுதிமொழியின் மூலம் மக்களின் பேராதரவை திரட்டி ‘மத்தியில் நடைபெற்று வரும் மக்கள் விரோத பா.ஜ.க. ஆட்;சியை 2019 பொதுத் தேர்தல் மூலம் அகற்றி, இளைய பாரதத்தின் இணையற்ற தலைவர் ராகுல்காந்தி அவர்களை பிரதமர் பதவியில் அமர்த்துவோம், அந்த நோக்கம் நிறைவேற இன்று முதல் ஒவ்வொரு நாளும் அயராது உழைப்போம்” என்று சூளுரை மேற்கொள்ள வேண்டும். இதன்மூலம் இந்தியாவை வீழ்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லும் நரேந்திர மோடியின் ஆட்சிக்கு முடிவுகட்டி மத்தியில் காங்கிரஸ் ஆட்சி மீண்டும் மலர கடுமையாக உழைக்க உறுதிமொழி எடுக்க வேண்டிய நாளாக இளம் தலைவர் ராகுல்காந்தி அவர்களின் பிறந்தநாளை காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட வேண்டும். இதுவே நாம் அவருக்கு வழங்குகிற மிகச் சிறந்த பிறந்தநாள் பரிசாகும்.


Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *