தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை

‘பொதுத்துறை நிறுவனங்கள் நவீன இந்தியாவின் கோயில்கள்” என்று அழைத்தவர் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு. இந்தியாவின் பலமே பொதுத்துறை நிறுவனங்களின் வளர்ச்சியில் தான் இருக்கிறது என்பது ஏற்றுக் கொண்ட கொள்கையாகும். அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உறுதி செய்வதற்காக துறைமுக வளர்ச்சியில் அதிகளவில் நிதி முதலீடு செய்யப்பட்டது. இதன் பின்னணியில் பெருந்தலைவர் காமராஜர் பெயரால் துவக்கப்பட்டது தான் எண்ணூர் துறைமுகம்.

மிகச் சிறப்பாக செயல்பட்டு, மத்திய அரசின் மினி ரத்னா அந்தஸ்து பெற்ற பொதுத்துறை நிறுவனமாக இது விளங்கி வருகிறது. இத்தகைய சிறப்பு கொண்ட எண்ணூர் துறைமுகத்திற்கு பேராபத்தை விளைவிக்கிற வகையில் மத்திய பா.ஜ.க. அரசு சில முடிவுகளை எடுத்திருக்கிறது. இதன்படி எண்ணூர் காமராஜர் துறைமுகத்தை தனியார் மயமாக்குகிற முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்காக பெரும் பங்காற்றுவது துறைமுகங்களாகும். இத்துறைமுகங்களை நம்பித் தான் பல்வேறு தொழில்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இத்துறைமுகத்தின் மத்திய அரசின் நூறு சதவீத பங்குகளை விலக்கிக் கொண்டு தனியாருக்கு விற்பதற்கு மத்திய அரசு முடிவெடுத்திருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது. இத்தகைய முடிவை உடனடியாக மத்திய அரசு கைவிட வேண்டும். அப்படி கைவிட மறுக்குமேயானால் கடுமையான போராட்டத்தை சந்திக்க நேரிடும் என எச்சரிக்க விரும்புகிறேன்.

மேலும் எண்ணூர் காமராஜர் துறைமுகத்தை தனியாருக்கு தாரை வார்க்க விடாமல் தடுக்கின்ற முயற்சியை தமிழக அரசு எடுக்க வேண்டும். மத்திய அரசு இம்முடிவை கைவிடுகிற வகையில் கடுமையான எதிர்ப்பை தமிழக அரசு வெளிப்படுத்த வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *