தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் ரம்ஜான் வாழ்த்து செய்தி

கடந்த ஒரு திங்களாக உணர்வு, பசி, தாகத்தை அடக்கி உண்ணா நோன்பிருந்த இஸ்லாமியர்கள் இன்று ‘ஈதுல் பித்ர்” என்னும் ஈகைத் திருநாளை பெருமகிழ்வுடன் கொண்டாடி திளைக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஈகைத் திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏக இறைவனை வணங்கி, இல்லாதோருக்கு வழங்கி, எல்லா மக்களுடனும் இணங்கி வாழும் இஸ்லாமியப் பெருமக்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழ்ந்து காட்டிய சமாதானம், சமத்துவம், சகோதரத்துவம், சகவாழ்வு முறைகளை பின்பற்றி என்றும்போல் இன்புற்று வாழ பிரார்த்திக்கிறேன்.
‘உங்களுக்கு முன்பிருந்த மதத்தினருக்கு நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது போல், உங்களுக்கும் கடையாக்கப்பட்டுள்ளது” என்ற திருக்குர்ஆன் வசனத்தின் கருத்து போல், விரதம் எனும் நோன்பு ஒரு பொதுவான அம்சமாக அனைத்து மதங்களிலும் உள்ளது என்ற பொது உண்மையை, இஸ்லாம் உலக மக்களுக்கு உணர்த்துகிறது. நபிகள் நாயகம் (ஸல்) வழியில் ஜக்காத் என்னும் ஏழை வரியை பொது நிதியங்களில் செலுத்தி, ஏழை, முதியவர், விதவைகளுக்கு மாத உதவி, மருத்துவ, கல்வி, திருமண, உணவு மற்றும் தொழில் துவங்கும் உதவி என அனைத்து உதவிகளையும் செய்வதற்கு இம்மாதம் உதவுகிறது.

இந்த இனிய ஈகைத் திருநாளில் தக்பீர் முழக்கம் கூறி, தொழுது, அதற்கு முன்னர் ஏழைகளுக்கு ‘சதக்கத்துல் பித்ர்” என்னும் பெருநாள் கொடை வழங்கி, அனைவருடன் உணவருந்தி மகிழும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பிலும், என் சார்பிலும் இனிய வாழ்த்துக்களை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *