வரலாறு காணாத வறட்சியின் காரணமாகவும், காவிரி நடுவர்மன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததாலும், காவிரி டெல்டாவில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு பல்வேறு இன்னல்களை தமிழகம் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு 29.55 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடியானது. ஆனால் இந்த ஆண்டு அது 17.95 லட்சம் ஏக்கராக குறைந்துவிட்டது. நெல் உள்ளிட்ட பருப்பு வகைகள், சிறு தானியங்கள், எண்ணெய் வித்துக்களின் சாகுபடி பரப்பு கணிசமாக குறைந்திருக்கிறது. அடுத்தடுத்து பருவமழை பொய்த்ததால் சாகுபடி பொய்த்து விவசாய வருமானம் வீழ்ச்சியடைந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்கொலை சாவுகள் இருநூறுக்கும் மேல் சென்று கொண்டிருக்கின்றன. இதுகுறித்து மத்திய – மாநில அரசுகள் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.
தமிழகத்தின் தொழில் வளர்ச்சி 2011-12 இல் 12.5 சதவீதமாக இருந்தது, 2016-17 இல் 1.64 சதவீதமாக கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதே ஆண்டில் அண்டை மாநிலங்களான ஆந்திர மாநிலத்தின் தொழில் வளர்ச்சி 10.36 சதவீதமாகவும், தெலுங்கானா மாநிலத்தின் வளர்ச்சி 7.1 சதவீதமாக உயர்ந்து வருகிறது. ஆந்திர மாநில பிரிவினையினால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து தங்களை மீட்டுக் கொண்டு, தங்கள் மாநிலத்தை அந்தந்த மாநில முதலமைச்சர்கள் வளர்ச்சிப் பாதையில் அழைப்பதில் முனைப்பு காட்டுகிறார்கள். இதனால் தமிழகத்தில் தொழில் தொடங்க வேண்டியவர்கள் அண்டை மாநிலங்களுக்கு சென்றுக் கொண்டிருக்கிறார்கள். 
கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் 9, 10 நாட்களில் உலகம் முழுவதிலுமுள்ள தொழிலதிபர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு ‘உலக முதலீட்டாளர்கள் மாநாடு” ரூபாய் 100 கோடி செலவில் மிகமிக ஆடம்பரமாக ஜெயலலிதா தலைமையில் சென்னையில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு ரூபாய் 2 லட்சத்து 42 ஆயிரத்து 160 கோடி முதலீடு உறுதி செய்யப்பட்டதாக ஜெயலலிதா அறிவித்தார். ஆனால் 20 மாதங்கள் கழித்து தற்போது தொழில் அமைச்சர் சட்டசபையில் ரூபாய் 26 ஆயிரத்து 615 கோடி முதலீடு தான் வந்துள்ளதாக கூறியிருக்கிறார். ஆக, உலக முதலீட்டாளர்கள் மாநாடு வாண வேடிக்கையாக நடத்தப்பட்டு இன்றைக்கு புஸ்வானமாக மாறியிருக்கிறது. இதற்கான பொறுப்பை இன்றைய அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் தான் ஏற்க வேண்டும். 
தற்போதைய அ.தி.மு.க. ஆட்சி என்றாலே ஊழல் ஆட்சி என்ற அழிக்க முடியாத களங்கத்தை பெற்றிருக்கிறது. அக்கட்சிக்கு யார் தலைவர் ? ஆட்சிக்கு யார் முதல்வர் ? என்கிற நாற்காலி யுத்தம் நாள்தோறும் நடைபெற்று வருகிறது. மோதல்கள் எல்லை மீறி போய்க் கொண்டிருக்கின்றன. ஆனால் ஊழல் நடவடிக்கைகள் நின்றதாகத் தெரியவில்லை. தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா விற்பனையை கள்ளத் தனமாக அனுமதிக்க அமைச்சர்கள், காவல் துறையினர் கைகோர்த்து செயல்பட்டது தற்போது அம்பலமாகியுள்ளது. 
கடந்த 2016 ஜூலை 8 ஆம் தேதி ஒரு தனியார் நிறுவனத்தில் சோதனை நடத்தியதில் சிக்கிய ஆவணங்கள் அடிப்படையில் குட்கா, பான் மசாலா விற்பனை செய்ய ரூபாய் 40 கோடி லஞ்சம் அமைச்சர்களுக்கும், காவல்துறையினருக்கும் வழங்கப்பட்டுள்ளதாக ஆதாரத்தோடு செய்தி வெளிவந்துள்ளன. இதுகுறித்து வருமான வரித்துறை தலைமை இயக்குநர் பி.ஆர். பாலகிருஷ்ணன் ஒரு வருடத்திற்கு முன்பு தலைமைச் செயலாளருக்கு எழுதிய கடிதத்திற்கு இதுவரை எந்த பதிலும் இல்லை, எந்த நடவடிக்கையும் இல்லை. ஏனெனில் இதில் கூட்டு சதி செய்த அன்றைய தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவ் வீட்டிலேயே வருமான வரித்துறை, அமலாக்கத்துறை சோதனை செய்து சிக்கிக் கொண்டதை அனைவரும் அறிவார்கள். 
ஊழலின் உறைவிடமாக இருக்கிற அ.தி.மு.க. ஆட்சிக்கு எதிராக குட்கா, பான் மசாலா ஊழல் இன்றைக்கு ஆதாரத்தோடு வெளிவந்துள்ளது. இதில் சம்மந்தப்பட்ட அமைச்சர்கள் யார் ? காவல் துறை அதிகாரிகள் யார் ? இவற்றையெல்லாம் உடனடியாக வெளியே கொண்டு வருகிற பொறுப்பு மத்திய வருமான வரித்துறைக்கு இருக்கிறது. வருமான வரித்துறை பா.ஜ.க.வின் இசைவுக்கு ஏற்றாற் போல் செயல்படாமல் சுதந்திரமாக செயல்பட்டு குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். அப்படி இல்லையெனில் குற்றத்திற்கு துணை போகிற கொடிய குற்றத்திற்கு மத்திய பா.ஜ.க. அரசு ஆளாக வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரிக்கிறேன்.
தமிழக நலனில் கொஞ்சமும் அக்கறை காட்டாத பிரதமர் நரேந்திர மோடி, வெளிநாடு சுற்றுப் பயணங்களில் மரபுக்கு மாறாக, கண்ணியமற்ற முறையில் இந்தியாவின் உள்நாட்டு பிரச்சினைகள் குறித்து பேசியிருக்கிறார். தம்மை ஒரு சர்வாதிகாரி போல் நினைத்துக் கொண்டு அறிவிக்கப்படாத எமர்ஜன்சி ஆட்சியை நடத்தி வரும் மோடி இத்தகைய விமர்சனத்தை வெளிநாட்டில் பேசியிருப்பது நமது நாட்டிற்கு புகழையும், கௌரவத்தையும் சேர்க்கக் கூடிய பேச்சல்ல. இந்தியாவின் பாரம்பரிய நற்பெயருக்கு மாறாக வெளிநாடுகளில் உள்நாட்டு பிரச்சினை குறித்து நரேந்திர மோடி நிகழ்த்திய விமர்சனங்களை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.


Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *