தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை

இந்தியக் குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளர் திருமதி. மீரா குமார் அவர்கள் காங்கிரஸ், தி.மு.க, முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் நாடாளுமன்றஇ சட்டமன்ற உறுப்பினர்களை சந்தித்து ஆதரவு திரட்டுவதற்காக நாளை (1.7.2017) சனிக்கிழமை மாலை 5.00 மணியளவில் சென்னைக்கு வருகை புரிகிறார். மாலை 7.00 மணியளவில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களை சந்திக்கிறார். இரவு 8.00 மணிக்கு தி.மு.கழக தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து உடல் நலம் விசாரிக்கிறார். பிறகு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களை லீலா பேலஸில் திருமதி மீரா குமார் அவர்கள் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களோடு இணைந்து சந்திக்கிறார்.

ஒன்பது முறை மக்களவை உறுப்பினராகவும், 40 ஆண்டுகளுக்கு மேலாக மத்திய அமைச்சராகவும் பணியாற்றி நீண்ட அனுபவமிக்க பாபு ஜெகஜீவன் ராம் அவர்களின் மகளான திருமதி.மீராகுமார் அவர்கள் காங்கிரஸ் , தி.மு.க உள்ளிட்ட 17 எதிர்கட்சிகளின் குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். இது குடியரசுத் தலைவருக்கான தேர்தல் என்பதைவிட, கொள்கையின் அடிப்படையில் நடைபெறுகிற தேர்தலாகவே கருதப்படுகிறது. தலீத் விரோத கட்சியான பா.ஜ.க. தலித் வேட்பாளரை நிறுத்தி மலிவான அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறது. இதற்கு எதிராக நீண்ட அரசியல் பாரம்பரியமிக்க திருமதி. மீராகுமார் அவர்கள் வேட்பாளராக அறிவித்திருப்பதற்கு மிகப் பெரிய ஆதரவு திரண்டு வருகிறது.

தமக்கு மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டுமென்று திருமதி. மீராகுமார் அவர்கள் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். கடந்த காலத்தில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக வி.வி. கிரி நிறுத்தப்பட்டபோது அன்னை இந்திராகாந்தி அவர்கள் மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்தார். இக் கோரிக்கைக்கு ஆதரவாக பெரும்பாலனவர்களால் வாக்களிக்கப்பட்டு திரு.வி.வி. கிரி வெற்றி பெற்றதை இங்கு நினைவு கூற விரும்புகிறறேன். அதே ஆதரவு நிலை தற்போது மீண்டும் உருவாகி வருகிறது. 

குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள திருமதி. மீராகுமார் அவர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் நாளை மாலை 4.30 மணியளவில் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வரவேற்பில் சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள், செயல் வீரர்கள், பெருமளவில் திரண்டு வரும்படி அன்போடு வேண்டுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *