தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நிறைவேற்ற முயன்ற சரக்கு மற்றும் சேவை வரிக்கு முற்றிலும் மாறாக அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கக் கூடிய வகையில் இன்றைக்கு மத்திய பா.ஜ.க. அரசால் ஜி.எஸ்.டி. நிறைவேற்றப்பட்டு, அமலுக்கு வந்திருக்கிறது. இதனால் சிறு, குறு, நடுநிலை வணிகர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உணவகங்களில் இட்லி, டீ, காபி மற்றும் தண்ணீர் கேன் பலமடங்கு விலை உயர்ந்திருக்கிறது. மக்கள் பயன்படுத்தும் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு ரூபாய் 32 விலை உயர்த்தப்பட்டிருக்கிறது.

வீட்டு உபயோகப் பொருட்களான வாஷிங் மெஷின், மின்விசிறி, கிரைண்டர் போன்றவற்றிற்கு அதிகபட்சமாக 28 சதவீதம் வரிவிதிக்கப்பட்டுள்ளது. இது ஏற்கனவே இருந்த வரிவிதிப்பை காட்டிலும் 14 சதவீதம் அதிகமாகும். திரையரங்குகளுக்கு வரிவிதிப்பு அதிகரித்ததால் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதை எதிர்த்து திரையரங்குகள் மூடப்பட்டு, போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழில்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கூடுதல் வரிவிதிப்பிற்கு எதிராக சிவகாசி மற்றும் பல பகுதிகளில் கருப்பு கொடியேற்றி கடையடைப்பு போராட்டம் நடக்கிறது.

சிமெண்ட், இரும்பு கம்பிகள், பெயிண்ட் போன்ற பொருட்களுக்கு வரிவிதிப்பு காரணமாக விலை உயர்த்தப்பட்டு கட்டுமானத் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே பணமதிப்பு நீக்க நடவடிக்கையினால் ஏற்பட்ட பாதிப்புக்கு மேலாக மீண்டும் இத்தகைய பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டிய அவலநிலை இன்றைக்கு மத்திய பா.ஜ.க. ஆட்சியால் ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் அனைத்து தரப்பு மக்களிடையேயும் கடுமையான பதற்றம் நிலவுகிறது. மத்திய அரசு அமல்படுத்தி வருகிற சரக்கு மற்றும் பொருட்கள் வரி விதிப்பினால் எத்தகைய பாதிப்புகள் எதிர்காலத்தில் ஏற்படும் என்பதை அனுமானிக்கக் கூடிய சூழல் இல்லாதது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. இந்த வரிவிதிப்பு யாருக்கு பொருந்தும் ? யாருக்கு பொருந்தாது? யாருக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது ? என்கிற அடிப்படை விவரம் கூட தெரிவிக்கப்படாமல் ஒட்டுமொத்தமாக மக்கள் மீது, குறிப்பாக பணக்காரர்கள், ஏழைகள் என்கிற பேதமின்றி அனைத்து தரப்பினரையும் ஒரே மாதிரியாக பாதிக்கக் கூடிய வரியாக சரக்கு மற்றும் பொருட்கள் வரி மக்கள் மீது அவசர கோலத்தில் திணிக்கப்பட்டுள்ளது. சுதந்திர இந்தியா காணாத மிகப்பெரிய தாக்குதலை மக்கள் மீது பா.ஜ.க. ஆட்சி தொடுத்துள்ளது. இன்றைக்கு நாட்டு மக்களிடையே நிலவி வருகிற அசாதாரண சூழ்நிலை குறித்து மத்திய – மாநில அரசுகள் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. மத்திய அரசு அமல்படுத்துகிற சரக்கு மற்றும் பொருட்கள் வரியிலிருந்து தமிழக மக்களை பாதுகாக்க வேண்டிய அ.இ.அ.தி.மு.க. அரசு கைகட்டி வேடிக்கை பார்த்து வருவது மிகுந்த வேதனையைத் தருகிறது. இந்த பாதிப்புகளை தடுக்கும் வகையில் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததை வன்மையாக கண்டிக்கிறேன். நாட்டு மக்கள் உறங்குகிற நள்ளிரவில் சரக்கு மற்றும் பொருட்கள் வரிவிதிப்பை கடுமையாக உயர்த்துகிற நடவடிக்கைக்கு நள்ளிரவில் விழா நடத்துவது மத்திய பா.ஜ.க. அரசுக்கு அவசியமா ? தேவையா ? இது மக்களை ஏமாற்ற மோடி செய்கிற சூழ்ச்சி என்பதை அனைவரும் அறிவார்கள்.

மத்திய அரசு அமல்படுத்தியுள்ள சரக்கு மற்றும் பொருட்கள் வரியினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய நீதிமன்ற நீதிபதி தலைமையில் உயர்மட்டக் குழுவை அமைக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக கேட்டுக் கொள்கிறேன். இக்குழுவில் பொருளாதார நிபுணர்கள், அரசு சார்பாக நிதித்துறை செயலாளர்கள் ஆகியோர் அடங்கிய குழுவை அமைப்பதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து குறைகளை அறிந்து, அதற்கான நிவாரண நடவடிக்கைகளை எடுக்க முன்வருவதன் மூலம் இப்பிரச்சினைக்கு நிச்சயம் ஓரளவு தீர்வு காண முடியும். இக்குழு வழங்குகிற பரிந்துரையை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றுவதன் மூலம் சரக்கு மற்றும் பொருட்கள் வரிவிதிப்பினால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மக்களை ஓரளவு விடுவிக்க முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *