தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கிற வகையில் கடல் எல்லை தாண்டும் மீனவர்களை தடுக்க இலங்கை அரசு புதிய மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இந்த மசோதா நிறைவேறினால் இலங்கை கடற்பகுதியில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களின் படகிற்கு ரூபாய் 10 லட்சம் முதல் ரூபாய் 10 கோடி வரையிலும் இலங்கை ரூபாய் மதிப்பில் அபராதம் விதிப்பதற்கு இந்த மசோதா வழிவகை செய்கிறது. அதில் எல்லை தாண்டும் தமிழக மீனவர்களுக்கு இரண்டாண்டு சிறை தண்டனை மற்றும் ஐம்பதாயிரம் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீனவர்கள் கைது செய்யப்பட மாட்டார்கள், உடமைகளை பறிக்க அனுமதிக்க மாட்டோம், மத்திய அரசில் மீனவர்களுக்கென தனி அமைச்சகம் தொடங்கப்படும் என ராமேஸ்வரத்தில் கடல் தாமரை மீனவர்கள் மாநாடு நடத்தி இன்றைய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் வாக்குறுதி அளித்தார். அந்த வாக்குறுதிகள் எதையும் கடந்த மூன்றாண்டுகளில் நரேந்திர மோடி அரசு நிறைவேற்றவில்லை. இந்நிலையில் இந்திய அரசை உதாசீனப்படுத்தி சிறுமைப்படுத்துகிற வகையில் இலங்கை அரசு தமிழக மீனவர்களுக்கு எதிராக கடுமையான அடக்குமுறை மசோதாவை இலங்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இதை தடுத்து நிறுத்த வேண்டிய முழு பொறுப்பும் மத்திய பா.ஜ.க. அரசுக்கு இருக்கிறது.

இலங்கை தமிழர்களின் நீண்டகால பிரச்சினையை தீர்க்க அன்றைய பிரதமர் ராஜீவ்காந்தியும், இலங்கை அதிபர் ஜெயவர்த்தனேயும் இந்திய – இலங்கை உடன்படிக்கையில் கையெழுத்திட்டு இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழர்களுக்கு அதிக அதிகாரம் வழங்கும் வகையில் 13 ஆவது அரசமைப்பு சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டது. இந்த அடிப்பயையில் தான் இலங்கை தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டுமென்று காங்கிரஸ் கட்சி கோருகிறது. இதனை இலங்கையில் வாழ்கிற ஏறத்தாழ ஐம்பது லட்சம் தமிழர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர். இதைத் தான் இலங்கையில் தமிழர்களின் பிரதிநிதிகளாக இருக்கிற தமிழ் தேசிய கூட்டமைப்பும் வலியுறுத்தி வருகிறது. இந்த அடிப்படையில் உரிமைகளை வழங்க இலங்கை அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்த உரிமைகளை பெற்றுத் தருவதற்கு வடக்கு மாகாண அரசு சுதந்திரமாக செயல்படுவதற்கு நரேந்திர மோடி அரசு எந்த முயற்சியும் செய்ததாகத் தெரியவில்லை. வடக்கு மாகாணத்தில் ராணுவத்தின் ஆதிக்கம் குறைந்ததாகத் தெரியவில்லை. காணாமல் போன தமிழர்களின் நிலை குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு வாழ்வாதாரத்தை உறுதி செய்கிற எந்த நடவடிக்கையும் இலங்கை அரசு எடுக்கவில்லை. இதை தட்டிக் கேட்பதற்கு மத்திய பா.ஜ.க. அரசு தயங்குவது ஏன் ? அண்டை நாடான இலங்கை அரசை கட்டுப்படுத்துகிற வகையில் இந்திய அரசு நடவடிக்கை எடுக்க முன்வராதது நமது வெளியுறவுக் கொள்கையின் மிகப்பெரிய தோல்வியாகும்.

நீண்ட நெடுங்காலமாக இலங்கையில் வாழ்கிற தமிழர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு வருகிறது. அதேபோல, இந்திய – இலங்கை கடல் எல்லையில் பாரம்பரியமாக மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழர்களின் உரிமைகள் இன்றைய இலங்கை அரசால் கடுமையான சட்டத்தின் மூலம் அடக்க முயற்சிகள் நடைபெறுகின்றன. கடல் எல்லையில் மீன்பிடிக்கச் செல்கிற மீனவர்களுக்கு இந்திய எல்லை எங்கே முடிகிறது ? இலங்கை எல்லை எங்கே தொடங்குகிறது என்பதை துல்லியமாக அறிய முடியாத நிலை இருப்பதை இலங்கை அரசும் உணரவில்லை, அதை உணர்த்துவதற்கு இந்திய அரசும் முன்வரவில்லை.

எனவே, இலங்கை தமிழர்களின் உரிமைகளை மறுக்கிற தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கிற இலங்கை அரசை இந்திய அரசு உடனடியாக எச்சரிக்கை செய்து நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படவுள்ள மசோதாவை தடுத்து நிறுத்த முயற்சிக்க வேண்டும். இதற்கு இலங்கை அரசு மறுக்குமேயானால் இந்திய – இலங்கை அரசுகளுக்கிடையே 1974, 1976 ஆம் ஆண்டுகளில் கச்சத் தீவு குறித்து போடப்பட்ட ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்வோம் என்று நரேந்திர மோடி அரசு இலங்கை அரசுக்கு எச்சரிக்கை விடுக்க வேண்டும். பா.ஜ.க. ஆட்சி அமைந்து கடந்த மூன்றாண்டுகளில் தமிழக மீனவர்களின் 150-க்கும் மேற்பட்ட படகுகள் இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த படகுகள் இலங்கை கடற்கரையில் கேட்பாரற்று கிடக்கின்றன. மீனவர்கள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதை தடுப்பதற்கு நரேந்திர மோடி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்கவும், கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கவும் தமிழக காங்கிரஸ் மீனவர் பிரிவு சார்பாக எனது தலைமையில் மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் வருகிற ஜூலை 10 ஆம் தேதி திங்கட்கிழமை காலை 10 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.


Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *