தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் அன்னை சோனியா காந்தி அவர்களின் ஆணையின்படி இளம் தலைவர் ராகுல்காந்தி அவர்களின் வழிகாட்டுதலோடு தமிழகத்தில் காங்கிரஸ் உறுப்பினர் சேர்ப்பு இயக்கம் கடந்த ஜூன் 7 ஆம் தேதி தொடங்கி மிக வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. தமிழக தேர்தல் அதிகாரிகள் திரு. பாபிராஜூ, திரு. சஞ்ஜய் தத் ஆகியோர் மேற்பார்வையில் மாவட்ட காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மிகத் தீவிரமாக உறுப்பினர் சேர்ப்பு பணியை மாபெரும் மக்கள் இயக்கமாக நடத்தி வருகின்றனர். 
தமிழக காங்கிரஸ் உறுப்பினர் சேர்ப்புப் பணிகள் ஜூலை 28 ஆம் தேதி நிறைவு பெறுகிறது. உறுப்பினர் சேர்ப்பு பணி முடிந்த பிறகு அதற்கான படிவங்களை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர், மாவட்ட பார்வையாளர், மாவட்ட தேர்தல் அதிகாரி ஆகியோரிடம் ஜூலை 30 ஆம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 5 ஆம் தேதிக்குள் ஒப்படைக்கப்பட வேண்டும். ஒப்படைத்த பிறகு அதற்கான ஒப்புகை ரசீதை பெற்றுக் கொள்ள வேண்டும். இதில் கால நீட்டிப்பிற்கு எந்த வகையிலும் வாய்ப்பில்லை என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தில் உறுப்பினர் சேர்ப்பு இயக்கத்திற்கு கிடைத்திருக்கிற வரவேற்பை பார்த்து மிகுந்த நம்பிக்கையும், மகிழ்ச்சியும் ஏற்படுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு ஒளிமயமான எதிர்காலம் இருப்பதை உறுப்பினர் சேர்ப்புப் பணிகள் நமக்கு மெய்ப்பித்து வருகின்றன. காங்கிரஸ் கட்சிக்கு அடித்தளம் அமைப்பது உறுப்பினர் சேர்ப்புப் பணியின் மூலமாகத் தான் நடைபெறும் என்பதை அனைவரும் உணர்ந்த காரணத்தால் நமது இலக்கை மிஞ்சுகிற வகையில் வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதற்காக இப்பணியில் ஈடுபட்ட அனைவரையும் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்.
வருகிற 28 ஆம் தேதி வரை தொடர்ந்து மேலும் உறுப்பினர்களை சேர்க்கலாம். ஆகஸ்ட் 5 ஆம் தேதிக்குள் மாவட்டத் தலைவர்கள் மூலமாக பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் சேகரிக்கப்பட்டு, அப்படிவங்கள் அனைத்தும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் ஆகஸ்ட் 5 ஆம் தேதிக்குள் ஒப்படைக்கப்பட வேண்டும். இதில் கால நீட்டிப்பிற்கு மேலும் அவகாசம் இல்லை என்பதனை உறுதியாக தெரிவித்துக் கொள்வதோடு, காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள், தோழர்கள் போர்க்கால அடிப்படையில் இப்பணியில் விரைந்து செயல்படுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *