தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை

நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் திரு. ஜி. ராமகிருஷ்ணன் தலைமையில் இன்று நடைபெற்ற மனித சங்கிலி ஆர்ப்பாட்டத்தை தடுத்து திரு. ஜி. ராமகிருஷ்ணன் அவர்களையும், அவரோடு மார்க்சிஸ்ட் தோழர்களையும் கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது. திரு. ஜி. ராமகிருஷ்ணன் அவர்களை கைது செய்ததை தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன். 
நேற்றைய தினம் சேலத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் செயல் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை தடுத்து, கைது செய்தார்கள். அதேநேரத்தில் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் தொடர்ந்து நடைபெற்றது. இன்று நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆர்ப்பாட்டத்தை தடுக்க வேண்டிய அவசியம், கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன ஏற்பட்டது. தமிழக அரசு குழப்பத்தின் உச்சியில் நின்று இரட்டை வேடம் போடுகிறது. பிரதமர் மோடி அவர்களை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று சந்தித்து நீட் தேர்விற்கு விலக்கு அளிக்க கேட்டாரா ? அதற்கு பிரதமர் சம்மதித்தாரா ? தமிழக அரசு என்ன செய்யப் போகிறது ? மத்திய அரசு என்ன செய்யப் போகிறது ?
தமிழக மாணவர்களின் எதிர்கால நலனை இந்த அரசு காவு கொடுக்க துணிந்து விட்டதா ? தமிழக அரசு இதனை தெரியப்படுத்த வேண்டும். தமிழக மாணவர்களின் நலன் காக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டின் பல்வேறு அரசியல் கட்சிகள் நடத்தும் ஆர்ப்பாட்டம், எழுப்பும் குரல் ஆகியவற்றை சாதகமாக பயன்படுத்தி மத்திய அரசுக்கு அழுத்தம் தருவதற்கு பதிலாக, அறவழிப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்வதும், போராட்டத்தை நசுக்க முயற்சிப்பதும் எந்த வகையில் தமிழ்நாட்டிற்கு பயன்படும் ? இத்தகைய ஜனநாயக விரோத, சட்டவிரோத தமிழக அரசின் செயலை தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் வன்மையாக கண்டிப்பதோடு, கைது செய்யப்பட்டுள்ள திரு. ஜி. ராமகிருஷ்ணன் அவர்களையும் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களையும் எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *