மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தது முதற்கொண்டு மக்கள் விரோத நடவடிக்கைகளை ஒன்றன்பின் ஒன்றாக எடுத்து வருகிறது. நாடாளுமன்றத்தில் முன்னூறுக்கும் மேற்பட்ட மக்களவை உறுப்பினர்கள் ஆதரவு இருக்கிற ஆணவப் போக்கின் காரணமாக மக்களை வஞ்சிக்கும் நடவடிக்கைகள் எடுக்கிற துணிவை பெற்றிருக்கிறது. ஆனால் ஆட்சி அதிகாரம் நிரந்தரமில்லை என்பதை பா.ஜ.க. அறியவில்லை என்றாலும் வரலாறு விரைவில் உணர்த்தப் போவதை எவரும் தடுக்க முடியாது. 
மார்ச் 2018-க்குள் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் முழுவதையும் ரத்து செய்யும்படி பெட்ரோலிய நிறுவனங்களுக்கு மத்திய பா.ஜ.க. உத்தரவிட்;டுள்ளது. அத்துடன் சிலிண்டர் விலையை மாதந்தோறும் ரூபாய் 4 உயர்த்தவும் உத்தரவிட்டுள்ளது. இதனால் மானிய விலையில் சிலிண்டரை பயன்படுத்தி வருகிற 18.11 கோடி வாடிக்கையாளர்கள் கடுமையாக பாதிக்கிற சூழல் இன்றைக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக குடும்பப் பெண்களுக்கு எதிரான மிகப்பெரிய தாக்குதலாக இதை கருத வேண்டியிருக்கிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மே 2014 இல் 110 டாலராக இருந்தது தற்போது 60 டாலருக்கு கீழே சரிந்துள்ளது. அதேபோல, மே 2014 இல் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு கலால் வரி ரூபாய் 9.20 ஆக இருந்தது, தற்போது ரூபாய் 21.48 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ஒரு லிட்டர் டீசலுக்கு கலால் வரி ரூபாய் 3.6 ஆக இருந்தது தற்போது ரூபாய் 17.33 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பா.ஜ.க. ஆட்சியமைந்து இதுவரை சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் கலால் வரியை 13 முறை உயர்த்தியுள்ளது. 
கடந்த 2014-2015 இல் மத்திய அரசின் கலால் வரி ரூபாய் 2 லட்சத்து 88 ஆயிரத்து 73 கோடியாக இருந்தது. இது தற்போது ரூபாய் 5 லட்சம் கோடிக்கு மேல் உயர்ந்துள்ளது. இப்படி கலால் வரியை உயர்த்தி அரசு கஜானாவை நிரப்புகிற நரேந்;திர மோடி அரசுக்கு குடும்ப பெண்கள் எரிபொருளாக பயன்படுத்துகிற சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தை அடியோடு ஒழிக்க முற்படுவதை விட மக்கள் விரோத நடவடிக்கை வேறு என்ன இருக்க முடியும் ? மானியங்களை ரத்து செய்ய வேண்டுமென்பது பா.ஜ.க.வின் கொள்கையாக மாறிவிட்டது. மானியத்தை ஒழிப்பது மக்களை ஒழிப்பதற்கு சமமாகும். ஏழைஎளிய மக்களின் வயிற்றில் அடிப்பதற்கு சமமாகும். சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தை ரத்து செய்கிற மோடி அரசின் முடிவை தமிழ்நாடு காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது.
மத்திய பா.ஜ.க. அரசு ஒரு மக்கள் விரோத அரசு என்பதற்கு அடையாளமாக புதிதாக அமலுக்கு வந்துள்ள தேசிய உணவு பாதுகாப்பு சட்ட விதிகள் அமைந்துள்ளன. அன்னை சோனியா காந்தி அவர்களின் கனவு திட்டமான தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. நாட்டு மக்களின் 81 சதவீதத்தினருக்கு, குறிப்பாக 63 கோடி மக்களுக்கு ஒரு கிலோ அரிசி ரூபாய் 3க்கு வழங்குகிற திட்டம் அமல்படுத்தப்பட்டது. 
இதற்காக மத்திய அரசு மானியமாக ரூபாய் 1 லட்சத்து 27 ஆயிரம் கோடி செலவிட மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு முடிவு செய்தது. ஆனால் இந்த திட்டத்தை தொடக்கத்திலிருந்தே செயலற்றதாக ஆக்கி, முடக்குவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை பா.ஜ.க. அரசு எடுத்து வந்தது. 
இன்று உணவு பாதுகாப்பு சட்டத்தின் பலனை அனுபவிக்க சில விதிமுறைகளை வகுத்திருக்கிறது. இதன்படி வருமான வரி, தொழில் வரி செலுத்துபவர்கள், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருப்பவர்கள், மத்திய – மாநில அரசுகள், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றில் பணியாற்றுவோர், 4 சக்கர வாகனம் வைத்திருப்போர், குளிர்சாதன கருவி வைத்திருப்பவர்கள், கான்கிரீட் வீடுகளில் வசிப்பவர்கள் என சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் ஒதுக்கி புறக்கணிக்கிற வகையில் நரேந்திர மோடி அரசு விதிமுறைகளை வகுத்திருக்கிறது. இந்த அரசாணையின்படி மாதம் ரூபாய் 8,334 சம்பளம் வாங்கினால் பயனாளிகளாக இருக்க முடியாது. இதன்படி பெரும்பாலனவர்கள்உணவு பாதுகாப்புச் சட்டத்தின் பயன்களை பெற முடியாத வகையில் விதிமுறைகள் திணிக்கப்பட்டிருக்கிறது. இதைவிட இந்த விதிமுறைகளை நிறைவேற்றுவதைவிட மக்களை கொடுமைப்படுத்துகிற நடவடிக்கை வேறு இருக்க முடியாது.

மத்திய பா.ஜ.க. ஆட்சியில் வாய்ப்பு கிடைத்தால் நுழைந்து விடுவதற்கு கதவை தட்டிக் கொண்டிருக்கிற அ.தி.மு.க. அரசு இத்தகைய மக்கள் விரோத நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தும் என்கிற நம்பிக்கை எவருக்கும் இருக்க முடியாது. நரேந்திர மோடியிடம் சரணாகதி ஆகிவிட்ட அ.இ.அ.தி.மு.க.வின் அனைத்து பிரிவுகளும் முதுகெலும்பற்றதாக மாறி, செயலிழந்து முடங்கிக் கிடக்கின்றன. தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் புதிய விதிமுறைகளை நிறைவேற்ற மாட்டோம் என்று சொல்கிற தமிழக அமைச்சர் நிரந்தரமாக இவரால் இதை தடுத்து நிறுத்த முடியுமா என்கிற நம்பிக்கை நமக்கு இல்லை. 
எனவே, பா.ஜ.க. ஆட்சியின் மக்கள் விரோத நடவடிக்கைகளை மக்கள் மன்றத்தில் தீவிர பிரச்சாரம் செய்து உண்மையை உணர்த்த வேண்டியது நமது கடமையாகும். இதை தட்டிக் கேட்க துணிவற்ற அ.இ.அ.தி.மு.க. உட்கட்சி பூசல் காரணமாக ஆட்சியை விட்டு தானாக கவிழ்ந்து போகிற நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே, மத்திய பா.ஜ.க. அரசு வெளியிட்டிருக்கிற அரசாணை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். தமிழ்நாடு அரசு மத்திய அரசின் ஆணையை தமிழகத்தில் அமல்படுத்தக் கூடாது. இல்லையெனில் மக்கள் விரோத மத்திய – மாநில அரசுகளின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழக ஜனநாயக சக்திகள் அணிதிரண்டு போராடுவது மிகமிக அவசியமாகும்.


Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *