தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் இன்று (29.9.2015) சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறியதாவது :-

அக்டோபர், 1 : நடிகர் திலகம் சிவாஜி பிறந்தநாள் :

நடிகர் திலகம், பத்மஸ்ரீ, பத்மபூஷன், செவாலியே, தாதாசாகேப் என பல்வேறு விருதுகளை பெற்று உலகப் புகழ் பெற்ற நடிகராக சிறப்பு பெற்ற சிவாஜி கணேசன் அவர்களின் 88 ஆவது பிறந்தநாள் விழா சென்னை, தேனாம்பேட்டை, காமராஜர் அரங்கில் 1.10.2015 அன்று மாலை 3.00 மணியள வில் எனது தலைமையில் நடைபெற உள்ளது.

இவ்விழாவின் சிறப்புரையை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் திரு. சு. திருநாவுக்கரசர், இலக்கியச் செல்வர் திரு. குமரி அனந்தன், பொருளாளர் டாக்டர் நாசே ராமச்சந்திரன் ஆகியோர் நிகழ்த்த இருக்கின்றனர். நிகழ்ச்சிக்கு முத்தாய்ப்பு வைக்கிற வகையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்களிலிருந்து பாடல்களை ‘சாதக பறவைகள்” குழுவினர் இசையமைத்து பாட இருக்கிறார்கள். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த திரைப்பட காட்சிகளின் தொகுப்பு அகண்ட திரையில் ஒளிபரப்பப்படும். விழாவின் நன்றி உரையை திரு. எர்ணஸ்ட் பால் கூற இருக்கிறார்.

இவ்விழாவை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. வி. இராஜசேகரன் அவர்களும், சிவாஜி சமூக நலப்பேரவை தலைவர் திரு. சந்திரசேகரன் அவர்களும் ஒருங்கிணைத்து நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

தமிழகத்தில் பெருந்தலைவர் காமராஜரின் தலைமையை ஏற்க காங்கிரஸ் இயக்கத்திற்கு எண்ணற்ற இளைஞர்களை தனது கலைத்துறை பணியின் மூலம் ஈர்த்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். தமிழகத்தில் ஆட்சியை இழந்து 48 ஆண்டுகளாகியும் ஜீவனுள்ள இயக்கமாக காங்கிரஸ் கட்சி இருக்கிறது என்று சொன்னால் அதில் சிவாஜி அவர்களுடைய பங்கு மகத்தானது. காங்கிரஸ் இயக்கத்தில் பிரச்சாரக் குழுவின் தலைவராகவும், மாநிலங்களவை உறுப்பினராகவும் பொறுப்பு வகித்தவர். காங்கிரஸ் கட்சியையும், சிவாஜியையும் பிரித்துப் பார்க்க முடியாது. அத்தகைய மாபெரும் நடிகருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் விழா எடுப்பதில் மிகுந்த பெருமைப்படுகிறோம்.

தேசியம் வளர்த்த நடிகர் திலகத்தின் புகழ்பாடும் இவ்விழா தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடத்தப்படுகிறது. இவ்விழாவிற்கு தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்து சிவாஜி ரசிகர் மன்ற தோழர்கள் பெருமளவில் வருகைபுரிய இருக்கிறார்கள். இவ்விழாவுக்கு தமிழகத்திலுள்ள காங்கிரஸ் நண்பர்கள் பெருந்திரளாக வருகை புரிந்து சிறப்பிக்க வேண்டுமென அன்போடு வேண்டுகிறேன்.

அக்டோபர் 2 நிகழ்ச்சி :

அண்ணல் மகாத்மா காந்தியடிகள் பிறந்தநாள்; பெருந்தலைவர் காமராஜர் நினைவுநாள். இந்நாளில் காலையில் அண்ணல் காந்தியடிகளின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் காங்கிரஸ் நண்பர்கள் பங்கேற்பார்கள். அன்று மாலை 4 மணியளவில் தமிழகமெங்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியால் தயாரித்து அனுப்பப்பட்ட ‘ஏன் வேண்டும் மதுவிலக்கு” என்கிற துண்டு பிரசுரத்தை பொதுமக்களிடையே விநியோகித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிற பிரச்சாரத்தை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் ஏற்பாடு செய்துள்ளன. இந்த பிரச்சாரத்திற்கென பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட ‘ஏன் வேண்டும் மதுவிலக்கு?” என்கிற ஒலிநாடா நிகழ்ச்சியில் ஒலிபரப்பப்படுவதோடு, வாகனத்தின் வாயிலாகவும் ஒலிபரப்பப்பட்டு பிரச்சார இயக்கம் நடத்தப்பட உள்ளது.

மத்தியசென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. என். ரங்கபாஷ்யம் அவர்கள் சென்னை சூளை நெடுஞ்சாலை (இந்திராகாந்தி சிலை அருகில்) மாலை 4 மணியளவில் ஏற்பாடு செய்துள்ள ‘ஏன் வேண்டும் மதுவிலக்கு?” ஆதரவு பிரச்சாரத்தில் நான் பங்கேற்கிறேன்.

மதுவிலக்கை பொறுத்தவரை அதை வலியுறுத்துகிற தகுதி காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே இருப்பதை யாரும் மறுக்க முடியாது. 1937 முதல் 1967 வரை மதுவிலக்கை அமல்படுத்திய பெருமை மூதறிஞர் ராஜாஜிக்கும், பெருந்தலைவர் காமராஜருக்கும் உண்டு. அதை வலியுறுத்துகிற வகையில் காங்கிரஸ் கட்சியின் மதுவிலக்கு ஆதரவு பிரச்சாரம் தமிழகம் முழுவதும் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

நரேந்திர மோடியின் அவதூறு பிரச்சாரம் :

இந்தியாவின் பிரதமராக இதுவரை இருந்தவர்கள் உலக அரங்கில் நமது நாட்டின் பெருமையையும், கௌரவத்தையும் உயர்த்திப் பிடித்து வந்தார்கள். ஆனால் நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்ற பிறகு வெளிநாடு சுற்றுப் பயணங்களில் ஆற்றுகிற உரை இந்தியாவுக்கு தலைக்குனிவை ஏற்படுத்தி வருகிறது. நேற்று அமெரிக்க சுற்றுப் பயணத்தின் போது கலிபோர்னியாவில் பிரதமர் மோடி ஆற்றிய உரை கடும் ஆட்சேபனைக்கும், கண்டனத்திற்கும் ஆளாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அங்கே உரையாற்றிய மோடி, ஊழலைப் பற்றி வாய்கிழிய பேசி மறைமுகமாக அன்னை சோனியா காந்தியையும், காங்கிரஸ் கட்சியையும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியையும் கொச்சைப்படுத்தி பேசியிருக்கிறார்.

இந்த பத்திரிகையாளர் சந்திப்பின் மூலமாக சவால் விட்டு ஒரு கருத்தை கூற விரும்புகிறேன். காங்கிரஸ் கட்சியின் தலைவி அன்னை சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங், இளந்தலைவர் ராகுல்காந்தி மற்றும் ராபர்ட் வதேரா ஆகியோர் மீது இந்தியாவில் உள்ள எந்த நீதிமன்றத்திலாவது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறதா ? முதல் தகவல் அறிக்கையேனும் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறதா ? இந்த தலைவர்கள் மீது பா.ஜ.க.வினர் ஆதாரத்தோடு உருப்படியாக இதுவரை ஊழல் குற்றச்சாட்டு கூறியதுண்டா ? உண்மை நிலை இவ்வாறிருக்க அந்நிய மண்ணில் இருந்து கொண்டு அவதூறு சேற்றை அள்ளி வீசுவதைவிட வெட்கக் கேடான அரசியல் அநாகரீகம் வேறு ஏதாவது இருக்க முடியுமா ? இதற்கு பதில் சொல்ல பா.ஜ.க.வினர் தயாரா ?

நரேந்திர மோடி என்ன ஊழலுக்கு அப்பாற்பட்டவரா? அவரது அமைச்சரவை சகாக்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் இல்லையா? பா.ஜ.க. முதலமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு இல்லையா?

மத்திய பிரதேச மாநில பா.ஜ.க. அரசு நிகழ்த்திய வியாபம் ஊழலை விசாரிக்க மத்திய புலனாய்வுத் துறையை உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்தது குறித்து பா.ஜ.க. என்ன பதில் கூறப்போகிறது ? மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அவர்களும், லலித் மோடியும் இணைந்து நடத்திய ஊழல் உலகப் புகழ் பெற்று விளங்குகிறதே, அதற்கு பா.ஜ.க. என்ன பதில் சொல்லப் போகிறது ? பொது விநியோகத் துறையில் ஜார்க்கண்ட் அரசு ரூ.30 ஆயிரம் கோடிக்கு ஊழல் செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது குறித்து நரேந்திர மோடியின் பதில் என்ன ?

ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜேவும், லலித் மோடியும் இணைந்து ஊழல் செய்து நடத்திய முதலீடுகள் குறித்து நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்காதது ஏன் ? எந்த ஊழல் குற்றச்சாட்டு சொன்னாலும் நாடாளுமன்றத்தில் தமக்கு இருக்கிற மிருகபல மெஜாரிட்டியை வைத்துக் கொண்டு அனைத்தையும் அமுக்கி, மறைத்து விடலாம் என்று நரேந்திர மோடி பகல் கனவு காணுகி;றார். ஆனால் நாட்டு மக்கள் 16 மாத ஆட்சியை கண்டு அலுத்துப் போயிருக்கிறார்கள். மக்கள் நாளுக்கு நாள் அதிருப்தி அதிகமாகி செல்வாக்கை நரேந்திர மோடி இழந்து வருகிறார். அதை மூடி மறைக்கவே வெளிநாடு சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

CLICK HERE FOR PRESS MEET VIDEO 1

CLICK HERE FOR PRESS MEET VIDEO 2


Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *