தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை

தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ – ஜியோ சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட வேண்டும், தொகுப்பூதியம் பெறுவோரை காலமுறை ஊதியத்திற்கு மாற்ற வேண்டும் என்ற மூன்றுஅம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அறுபதுக்கும் மேற்பட்ட சங்கங்கள் ஒருங்கிணைந்து கடந்த மாதம் 5 ஆம் தேதி முதல் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் ஆட்சியாளர்கள் இவர்களது கோரிக்கைகள் குறித்து தீர்வு காண எந்த முயற்சியும் மேற்கொள்ளாத நிலையில் கடந்த 22 ஆம் தேதி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் நடத்தப்பட்டது. இதில் 90 சதவீத அரசு ஊழியர்கள் பங்கேற்று அரசு பணிகள் முடங்குகிற நிலை ஏற்பட்டது. 
இந்நிலையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து பேச்சு நடத்துவதாகக் கூறி ஜாக்டோ – ஜியோ அமைப்புக்குள் பிளவுகளை ஏற்படுத்தி, சங்கங்களை உடைக்கிற முயற்சியில் எடப்பாடி பழனிச்சாமி அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதனால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு போராட்டத்தை இன்று முதல் தொடங்கப் போவதாக பெரும்பான்மை அரசு ஊழியர்கள் ஆதரவு பெற்ற சங்கங்கள் அறிவித்துள்ளன. இத்தகைய அணுகுமுறையைக் கண்டு அரசு ஊழியர்கள் கடும் கொந்தளிப்பான மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

7 ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை நரேந்திர மோடி அரசு ஏற்றுக் கொண்டு 8 மாதங்கள் கழித்து தான் தமிழ்நாடு அரசு இதை பரிசீலிப்பதற்காக ஐந்து உறுப்பினர் குழுவை கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி அமைத்தது. 7 ஆவது ஊதியக் குழு பரிந்துரையின்படி அடிப்படை சம்பளத்தில் 14.27 சதவீதம் உயர்வு வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன. தமிழக அரசு அமைத்த குழு ஜூன் 30 ஆம் தேதிக்குள் அறிக்கை வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆனால் அக்குழு இதுநாள் வரை அறிக்கையை தமிழக அரசிடம் வழங்கவில்லை. இதை காரணம் காட்டி எடப்பாடி அரசு, அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்து வருகிறது.
அரசு ஊழியர்களின் மூன்று அம்ச கோரிக்கையில் 7 ஆவது ஊதியக் குழு பரிந்துரையை அமல்படுத்துதலைத் தவிர, மற்ற இரண்டு கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதில் தமிழக ஆட்சியாளர்களுக்கு என்ன தயக்கம் ? இதில் அலட்சியப் போக்குடன் செயல்படுவது ஏன் ? நியாயமான கோரிக்கைகளை கூட ஏற்க மறுக்கிற அ.இ.அ.தி.மு.க. ஆட்சிக்கு எதிராக அரசு ஊழியர்கள் தங்கள் பணிகளை புறக்கணித்து விட்டு தெருவில் நின்று போராடுகிற நிலை இன்றைக்கு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழக அரசு முற்றிலும் செயல்படாமல் முடங்கிக் கிடப்பதையே வெளிப்படுத்துகிறது. 
7 ஆவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை மற்ற மாநிலங்கள் குறிப்பாக மார்ச் 11 இல் உத்தரகாண்ட் மாநிலமும், தொடர்ந்து ஹரியானா, ஜம்மு காஷ்மீர் போன்ற மாநிலங்கள் நிறைவேற்றி முடித்துவிட்டன. இச்சூழலில் கடந்த 8 மாதங்களாக அ.தி.மு.க.வில் நடக்கிற உட்கட்சி குழப்பத்தினாலும், ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள குதிரை பேரம் நடத்துவதிலும் தான் கவனம் செலுத்தப்படுகிறதே தவிர, நியாயமான அரசு ஊழியர்களின் கோரிக்கையை பரிவுடன் கவனித்து தீர்வு காண தயாராக இல்லை.

எனவே, 18 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் விஷயத்தில் அலட்சியப் போக்குடன் செயல்பட்டு தமிழக அரசு நிர்வாகமே முடங்கிவிடுகிற நிலையை ஏற்படுத்தியிருக்கிற எடப்பாடி அரசை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆதரவினைப் பெற்ற ஜாக்டோ – ஜியோ கூட்டமைப்பை பிளவுபடுத்துகிற முயற்சியில் ஈடுபடாமல், அவர்களை உடனடியாக பேச்சுவார்த்தைக்கு அழைத்து கோரிக்கைகளை பரிவுடன் கவனித்து தீர்வு காண தமிழக முதலமைச்சர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *