சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் சரிவு ஏற்பட்டதனால் கிடைத்த பலன்களை மக்களுக்கு சென்றடையாமல் தடுக்கிற வகையில் மத்திய பா.ஜ.க. அரசு கலால் வரியை உயர்த்தி கஜானாவை நிரப்பி நிதி பற்றாக்குறையை மூடி மறைக்க தொடர்ந்து முயற்சித்து வருகிறது. நேற்று மானிய விலையில் வழங்கப்பட்டு வரும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை ரூ.5.57 உயர்த்தியிருக்கிறது. இதனால் சிலிண்டரின் விலை ரூபாய் 440.50 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல மானியம் அல்லாத சிலிண்டர் கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி ரூ.66 ஆகவும், மார்ச் 1 ஆம் தேதி முதல் ரூ.86 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் விமான எரிபொருள் விலை ஒரு கிலோ லிட்டருக்கு ரூ.2811.38 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மே 2014 இல் 110 டாலராக இருந்தது தற்போது 60 டாலராக சரிந்துள்ளது. அதேபோல, மே 2014 இல் 1 லிட்டர் பெட்ரோலுக்கு கலால் வரி ரூபாய் 9.20 ஆக இருந்தது ஜனவரி 2017 இல் ரூ.21.48 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ஒரு லிட்டர் டீசலுக்கு கலால் வரி ரூ.3.46 ஆக இருந்தது, அது தற்போது ரூ.17.33 ஆக உயர்ந்திருக்கிறது. பா.ஜ.க. ஆட்சி அமைந்து கிட்டத்தட்ட மூன்றாண்டு காலத்தில் 11 முறை பெட்ரோல், டீசலுக்கான கலால் வரி உயர்த்தப்பட்டிருக்கிறது.

கடந்த 2015-16 இல் மத்திய அரசின் கலால் வரி ரூபாய் 2 லட்சத்து 88 ஆயிரத்து 73 கோடியாக இருந்தது. இது தற்போது ரூ. 4 லட்சத்து 6 ஆயிரத்து 900 கோடியாக உயர்ந்துள்ளது. இது கிட்டத்தட்ட 30 சதவீதமாக உயர்ந்து பா.ஜ.க. அரசு தனது வருமானத்தை பெருக்கிக் கொண்டுள்ளது. இத்தகைய உத்திகளை கையாண்டு வருமானத்தை கூட்டிக் கொள்கிற அக்கறை விவசாயிகள் பிரச்சினையில் தீர்வு காண்பதில் இல்லாதது ஏன் ? உத்தரபிரதேச மாநில தேர்தலின் போது விவசாயிகளின் கடன் தொகையான ரூபாய் 88 ஆயிரம் கோடியை ரத்து செய்வோம் என்று பிரச்சாரம் செய்த நரேந்திர மோடி, தமிழக விவசாயிகளின் மொத்த கடனான ரூபாய் 8 ஆயிரம் கோடியை ரத்து செய்ய மறுப்பது ஏன் ?

தமிழகத்தை தொடர்ந்து பல்வேறு நிலைகளில் வஞ்சித்து வருகிற பா.ஜ.க.வுக்கு ஊது குழலாக தமிழக பா.ஜ.க. செயல்பட்டு வருகிறது. விவசாயிகள் கடனை ரத்து செய்ய வேண்டுமென கடந்த 20 நாட்களாக தலைநகர் டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகிற விவசாயிகளின் கோரிக்கையை பரிவுடன் கவனிக்காமல் தமிழக விவசாயிகள் கடனை ரத்து செய்ய முடியாது என்று அறிவிப்பதற்கு மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனுக்கு எங்கே இருந்து துணிச்சல் வந்தது ? ஒரு கண்ணில் வெண்ணையும், ஒரு கண்ணில் சுண்ணாம்புமாக அணுகுமுறையை கையாள்கிற பா.ஜ.க.வை தமிழ்நாட்டு மக்கள் தொடர்ந்து புறக்கணிக்கவே செய்வார்கள்.

மத்திய – மாநில அரசுகளின் செயல்படாத போக்கு காரணமாக நாள்தோறும் பல்வேறு போராட்டங்களை தமிழகம் சந்திக்க வேண்டிய நிலையில் இருக்கிறது. இன்றைக்கு விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் சார்பில் பொது வேலை நிறுத்தம் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.

தமிழகத்திலிலுள்ள 32 மாவட்டங்களையும் வறட்சி பாதித்த மாவட்டங்களாக தமிழக அரசு அறிவித்தது. வறட்சி நிவாரணமாக மத்திய அரசிடம் ரூ.39,565 கோடியை கோரியது. ஆனால் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு செயல்படும் மத்திய பா.ஜ.க. அரசு வழங்கியதோ ரூ.1748 கோடி. அதேபோல, வார்தா புயலினால் ஏற்பட்ட பாதிப்பிற்காக ரூபாய் 22 ஆயிரத்து 573 கோடி கேட்கப்பட்டது. ஆனால் வழங்கப்பட்டதோ வெறும் ரூபாய் 264.11 கோடி. தமிழகத்தில் என்ன பாடுபட்டாலும் பா.ஜ.க.வை வளர்க்க முடியாது என்கிற காரணத்தினால் தமிழகத்தை மத்திய பா.ஜ.க. அரசு புறக்கணிக்கிறது என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை. இதை தட்டிக் கேட்கிற துணிவு அ.தி.மு.க. அரசுக்கு இல்லை. ராதாகிருஷ்ணன் நகர் இடைத் தேர்தலில் வாழ்வா, சாவா என்று போராடிக் கொண்டிருக்கும் அ.தி.மு.க.வினருக்கு தமிழக மக்கள் மீது கவலையிருப்பதாகத் தெரியவில்லை.

எனவே, மத்திய பா.ஜ.க. அரசின் வஞ்சகப் போக்கை கண்டிக்கிற வகையிலும், அதை தட்டிக் கேட்காத அ.தி.மு.க. அரசுக்கு எதிராகவும் தமிழகம் முழுவதும் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டுமென்று ஏற்கனவே

அறிவித்திருந்தோம். அதன்படி மத்திய அரசு அலுவலகங்கள் முன்பாக 5.4.2017 புதன்கிழமை நடைபெற இருக்கிற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினரும், பொதுமக்களும் பங்கேற்று கண்டனக் குரல் எழுப்பும்படி அன்போடு வேண்டுகிறேன்.


Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *